இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 13 உயிர்கள் பறிபோயின. இது தோராயமான எண்ணிக்கை தான். 15 ஆகக் கூட இருக்கலாம். கால்நடைகள் கணக்கில் இல்லை. அத்தனையும் யவத்மால் மாவட்டத்தின் வெறும் 50 சதுர கி.மீ தூரத்துக்குள் நடந்தேறியது. ஏற்கெனவே யவத்மால் விவசாயிகளின் தற்கொலைக்காகவும், விவசாயிகளின் கண்ணீர்க் கதைகளுக்காகவும் அறியப்பட்டது. கடந்த வாரம் வரை, விதர்பாவின் ராலேகன் தாசிலுக்கு உட்பட்ட பகுதிகளில் வலம்வந்த ஒரு பெண் புலியும் அதன் இரண்டு குட்டிகளும் கிராமவாசிகளுக்கும், வன அலுவலர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது. அந்தப் புலியின் அச்சுறுத்தலால் 50-க்கு மேற்பட்ட கிராமவாசிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். விவசாயக் கூலிகள் வேலைக்குச் செல்ல அஞ்சினர். அப்படிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது குழுக்களாக இணைந்து அச்சத்துடன் சென்றுவந்தனர்.
அந்தப் புலியைப் பிடித்துவிடுங்கள் என்பதே அங்கு ஒலித்த ஒரே குரலாக இருந்தது.
பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துவந்த கோபமும் அவர்கள் கொடுத்த அழுத்தமும் வனத்துறை ஊழியர்களைகடும் அழுத்தத்திற்கு ஆளாக்கியிருந்தது. எப்படியாவது ஆவ்னி என்ற அந்த பெண் புலியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தனர். ஆவ்னி என்றால் புவி என்று அர்த்தம்.
ஆவ்னியைப் பிடிப்பது அத்தனை சுலபமானதாக இல்லை. அது சிக்கலான சவாலான ஆப்பரேஷனாகவே இருந்தது. வனக் காவலர்கள், ட்ராக்கர்கள், துப்பாக்கிச்சுடு வீரர்கள், மகாராஷ்டிரா மாநில வனத்துறையின் உயர் அதிகாரிகள், மத்திய இந்தியாவில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான நிபுணர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த ஆபரேஷனில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கடும் பிரயத்தனத்திற்குப் பின்னர் நவம்பர் 2-ல் T1 கொல்லப்பட்டது. (மேலதிக விவரங்களுக்கு T1 -ன் எல்லை: கொலைகளின் கதைகள் மற்றும் அவர் வீடு திரும்பும்போதெல்லாம் அந்தப் புலிக்கு நன்றி சொல்வேன் கட்டுரைகளை வாசிக்கவும்)
2016 இடைப்பட்ட காலத்திலிருந்து ஆவ்னி நிறைய பேரைக் கொன்றிருந்தது. கடந்த இரண்டாண்டுகளில் அது யாரையெல்லாம் கொன்றிருந்தது?








