2015 நவம்பர் மாதம் ஷிகா மோண்டல் தனது கணவர் அசித்தை இழந்தார். “அவர் நண்டு பிடிப்பதற்காக பாகன்பாரி வனப்பகுதியில் உள்ள கரல் ஆற்றிற்கு இரண்டு பேருடன் சென்றிருந்தார். மற்ற இருவரும் திரும்பிவிட்டனர், என் கணவரை புலி இழுத்துச் சென்றுவிட்டதாக கூறினர்,” என்கிறார் அவர். அசித் மோண்டல் இறந்தபோது அவருக்கு வயது 22. பள்ளி செல்லும் இரண்டு மகன்களுக்கு தந்தை, குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர்.
மேற்கு வங்கத்தின் கோசாபா வட்டாரத்தில் உள்ள ஜாஹர் காலனி கிராமத்தைச் சேர்ந்த ஷிகா இழப்பீடு கோரும் நோக்கில் உதவி கோரி வழக்கறிஞருக்கு ரூ.10,000 செலுத்தினார். “வனத்துறை மற்றும் காவல்துறையிடம் தடையில்லா சான்றிதழ் (NOCs), இன்சூரன்ஸ் அட்டை, கிராமத் தலைவரிடம் கடிதம், இறப்புச் சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்களை சேகரிக்க வேண்டியிருந்தது.”
இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1 லட்சம் இழப்பீடு தருவதற்கு வழக்கறிஞர் முயன்றார். ஆனால் அடர் வனப்பகுதியில் அவரது கணவர் இறந்துள்ளதால் தடையில்லாச் சான்றிதழ் அளிக்க வனத்துறை மறுத்துவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனமும் அவரது ஆவணங்களை திருப்பி அளிக்கவில்லை.
நண்டு பிடிப்பது, இறால் பிடிப்பது, விவசாயக் கூலி வேலை என ஷிகா கிடைக்கும் வேலைகளை செய்து தனது மகன்களை பள்ளிக்கு அனுப்புகிறார். தனியாக இருந்து வீட்டை கவனித்துக் கொள்ள முடியாது என்பதால் அவரும், பிள்ளைகளும் மாமாவின் வீட்டில் வசிக்கின்றனர்.
சுந்தரவனக் காடுகளில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் புலிகளின் தாக்குதலில் கணவர்களை இழந்துள்ளனர். கிழக்கு இந்தியாவில் சுமார் 4,200 சதுர அடிக்கு பரவியுள்ள இந்த டெல்டா பகுதி முழுக்க சதுப்புநிலக் காடுகளால் நிறைந்துள்ளது. புலிகளின் வாழ்விடங்களாக இச்சதுப்புநில காடுகள் உள்ளன.



