நம் உலகம் மிகக் கொந்தளிப்பான கடுமையான காலத்தை சந்தித்துக் கொண்டிருப்பதால் இப்பாடலை நான் எழுதினேன். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் வீடுகளுக்குள் அமர்ந்துகொண்டு தாழ்ப்பாள்களை போட்டுக் கொண்ட நேரத்தில், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் மக்கள் தங்களின் தொலைதூர வீடுகளுக்கு நடந்து செல்லத் தொடங்குவார்கள் என்பதை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. இது என்னை துயரத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியது. மிகவும் வளர்ந்த நம் நாட்டில், மிகச் சிறந்த நாட்டில், பல துறைகளில் முன்னோடிகளாக நம்மை அறிவித்துக் கொள்ளும் நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் தங்க இடமின்றி, வீடுகளிலும் குடும்பங்களுடனும் இருப்பதற்காக நெடுந்தூரம் நடக்கிறார்கள். இது என்னை துயரமுறச் செய்தது.
’வீட்டிலிருக்க வேண்டியதுதானே?’ எத்தனை பேருக்கு வீடு இருக்க்கிறது? பல கிலோமீட்டர்கள் நடந்ததில் சிலர் வழியிலேயே இறந்தும் போனார்கள். அந்த கால்களும் அந்த குழந்தைகளும், அப்படங்களை நான் பார்த்தபோது இந்த வேதனையை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. இது நம் நாட்டில் மட்டும் நடப்பதாக நான் நினைக்கவில்லை. மொத்த உலகமுமே இத்துன்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. பலர் கொரோனா வைரஸ்ஸை பற்றி மட்டுமே யோசித்து பிற மனிதர்களை பொருட்படுத்தாமலிருக்கும் சூழலில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துக்கத்தை பற்றி நான் பேச விரும்பினேன். அந்த சோகமே இப்பாடலை நான் உருவாக்க காரணம்.
உலகத்தையும் அதன் பயணங்களையும் பார்க்க விரும்பும் பயணி நான். மனிதர்களிடம் இருக்கும் நேயத்தை போற்றுகிறவன். அவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்த முயலுபவன். இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டே இப்பாடல் பிறந்தது.



