இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
சந்தைக்கு, சந்தைக்கு...
அந்த மூங்கில்கள் அனைத்தும் அதை இங்குகொண்டு வந்த பெண்களின் உயரத்தைவிட மூன்று மடங்கு அதிக உயரமாக உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட மூங்கில்களோ ஜார்கண்டின் கோடா வார சந்தைக்கு எடுத்து வருகிறார்கள். சிலர் இங்கு வருவதற்கு 12 கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து வருகிறார்கள். மூங்கில்களை தலை அல்லது தோளில் சுமந்து வருகிறார்கள். ஆமாம் நிச்சயம் அந்த பெண்கள் அந்த மூங்கிலை மரங்களிலிருந்து வெட்டுவதற்கு நீண்ட நேரம் செலவு செய்திருக்க வேண்டும்.
அவர்களின் இந்தளவு கஷ்டங்களுக்கு பலனாக, அந்நாளின் இறுதியில் அவர்களுக்கு ரூ. 20 (40 சென்ட்) கிடைக்கும். கோடாவிலே வேறு ஒரு சந்தைக்கு அவர்கள் நகர்ந்து செல்கிறார்கள். அங்கு அதைவிட குறைவாக சிலருக்கு பணம் கிடைக்கலாம். பெண்கள் தங்கள் தலையில் சுமந்து கொண்டுவரும் பெரிய இலைகளை சேகரித்து அவற்றை ஒன்றாக சேர்த்து, அதிலிருந்து மிக அருமையான ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தட்டுகளை செய்கிறார்கள். டீக்கடைகள், உணவகங்கள், கேன்டீன்கள் இவற்றை நூற்றுக்கணக்கில் வாங்கிக்கொள்கிறார்கள். அதிலிருந்து பெண்கள் ரூ.15 முதல் 20 வரை (30 – 40 சென்ட்) பெறுகிறார்கள். அடுத்த முறை ரயில் நிலையத்தில் நீங்கள் அந்த தட்டில் உணவு உட்கொள்ள நேரிட்டால் உங்களுக்கு தெரியும் அது எங்கிருந்து வந்திருக்கும் என்று.
அனைத்து பெண்களும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். வீட்டிலும் நிறைய பொறுப்புகள் இருக்கும். சந்தையில் இருக்கும் பிரச்னைகளும் அதிகம். அது வாரசந்தை. எனவே, சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இன்று என்ன கிடைக்கிறதோ அதை வைத்து அவர்கள் ஒரு வாரத்தை கடத்தியாக வேண்டும். அவர்களுக்கு வேறு பிரச்னைகளும் உண்டு. கிராமத்தில் சில கடன்தருபவர்கள் அவர்களின் பொருளை அற்ப தொகைக்கு கேட்பார்கள். அவர்களுக்கும் கொடுக்க நேரிடும்.
மற்றவர்கள் ஒப்பந்தப்படி தங்களுக்கு கடன் தருபவர்களுகளிடம் மட்டுமே விற்க வேண்டும். நீங்கள் அவர்களை வியாபாரிகளின் கடைகளில் காணலாம். அதுவே ஒடிஷாவின் ராயகடாவில் ஆதிவாசி பெண்கள் வியாபாரிகளின் கடைகளில் அதன் சொந்தக்காரர்களுக்காக காத்திருப்பதே அவர்களின் நிலையாகும். அந்தப்பெண் அங்கு பல மணிநேரம் கூட காத்திருக்க வேண்டிவரும். ஆதிவாசி கிராமங்களின் வெளிப்புறத்தில், சந்தைக்கு அதே ஆதிவாசி குழுக்களை சேர்ந்த பெண்கள் செல்கிறார்கள். பெரும்பாலானோர் வியாபாரிகளுக்கு கடன்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு பேரம் பேசும் திறன் மிகக் குறைவு.
பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட கொடுமைகளையும் பெண் வியாபாரிகள் நாள்தோறும் கடக்க நேரிடும். இங்கு காவல் துறையினர் மட்டுமல்ல, வனத்துறையினரும் சேர்த்தே தொல்லை கொடுப்பார்கள்.
ஒடிஷாவின் மால்கன்கிரியின் போண்டா பெண்களுக்கு மார்க்கெட்டில் அன்றைய நாள் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. கடுஞ்சுமையுள்ள ஒரு பயணப்பெட்டியை அவர்கள் பஸ்சின் மேற்கூரையில் ஏற்றுவதற்கு இழுத்துச்செல்ல வேண்டும். அவர்களின் கிராமத்தில் இருந்து பேருந்து நிறுத்தம் நல்ல தொலைவில் இருந்தது. பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தப்பெட்டியை நீண்ட தூரம் சுமந்து செல்ல வேண்டும்.
ஜார்க்கண்டில் உள்ள பாலமாவு சந்தைக்கு தலைமை ஏற்றிருக்கும் பெண் தன் குழந்தையை சுமந்து வருகிறார். அவரது மூங்கில் மற்றும் அவரது மதிய உணவும் அவரிடம் உள்ளது. அவரது இரண்டாவது குழந்தையை கையில் பிடித்து அழைத்து வருகிறார்.
இந்த நாட்டில், சிறு பொருட்கள் தயாரிக்கும் மற்றும் சிறு வியாபாரம் செய்யும் பல மில்லியன் பெண்களின் வருமானம் தனித்தனியாக பார்க்கும்போது சிறிதாகவே தெரியும். ஆனால் அவர்களின் உழைப்பு அபாரமானதுதான். அவர்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு அது மிக முக்கியமான ஒன்று.
ஆந்திராவின் விஜயநகர கிராம சந்தையில் கோழிக்கறி வெட்டி விற்கும் பெண்ணின் வயது 13 தான் இருக்கும். அவள் அதே சந்தையில் காய்கறிகள் விற்கும் தனது அண்டை வீட்டுக்காரரைப்போல் விற்றுக்கொண்டிருக்கிறார். அதே வயதில் உள்ள அவளின் ஆண் சொந்தகாரர்களுக்கு பள்ளி செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்கள் இந்த சந்தையில் விற்பனை செய்யும் வேலையைவிடவும் வீட்டில் கூடுதலாக பெண்கள் செய்யும் அனைத்து வேலையையும் செய்ய வேண்டியிருக்கும்.
தமிழில்: பிரியதர்சினி. R.