பிரஹலாத் தோகே எப்படியாவது தனது பசுவை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார். ஆனால் அதற்கு அவர் தனது மூன்று ஏக்கர் கொய்யாப் பழத்தோட்டத்தைப் பலி கொடுத்தாக வேண்டும்.
“ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றை ஈடுகட்டி வருகிறேன். என்னுடைய சேமிப்பு, தங்கம் என எல்லாவற்றையும் செலவழித்துவிட்டேன். ஆனால் இப்போது மரங்களைக் காப்பாற்றுவதற்காக என்னால் தினமும் தண்ணீர் வாங்க முடியாது. ஆகையால் என்னுடைய பசுவைக் காப்பாற்ற முடிவு செய்தேன். இது கடினமான முடிவுதான்” என 7 முதல் 8 அடி உயரமுள்ள தண்ணுடைய கொய்யா மரங்களுக்கு முன் நின்று கண்ணீர் வழிய கூறுகிறார் 44 வயது தோகே.
ஒருமுறை விற்றுவிட்டால் மீண்டும் பசுவை வாங்குவது கடினம். மகராஷ்ட்ரா அரசின் வறட்சி நிவாரண நடவடிக்கையாக, பீட் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான வகோன் தோகின் புறவெளியில் ஏப்ரல் மாதம் கால்நடை முகாம் அமைக்கப்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு லட்ச ரூபாய் என உள்ளூர் சந்தையில் வாங்கிய இரண்டு கீர் பசுக்கள் உள்பட பிரஹலாத்தின் 12 பசு மாடுகளையும் முகாம்களுக்கு அனுப்பிவிட்டார். ஆனால் மரங்களை கைவிடுவது ஈடுகட்ட முடியாத இழப்பைத் தரும்.
“என்னுடைய மூத்த சகோதரர் நான்கு வருடங்களுக்கு முன்பு லக்னோ சென்ற போது, அங்கிருந்து கொய்யாச் செடிகளை வாங்கி வந்தார்” என்கிறார் அவர். அதை தோட்டமாக வளர்த்தெடுக்க பிரஹலாத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் நான்கு வருடங்கள் ஆனது. ஆனால், வறண்ட மராத்வாடா பகுதியில் 2018-ல் ஏற்பட்ட மோசமான பருவமழை மற்றும் அடுத்து வந்த தொடர்ச்சியான வறட்சி காரணமாக, அவரால் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை.
மாநிலத்தின் சில தாலுகாக்களில் ஒவ்வொரு வருடமும் பஞ்சம் தலைவிரித்தாடினாலும், 2012-13 விவசாயப் பருவம் (2012ல் பருவமழை பொய்த்துப் போனதால், 2013ம் ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது), அதை தொடர்ந்து 2014-15 மற்றும் 2018-19 ஆண்டுகளில் மராத்வாடா பகுதி முழுவதும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை தொடங்கியது. ஒவ்வொரு கோடை காலத்திலும் தண்ணீர் பற்றாக்குறை நிலவினாலும், 2012-ம் ஆண்டிலிருந்து வானிலை வறட்சி (பருவமழை பொய்த்துப் போனது), விவசாய வறட்சி (காரிஃப் மற்றும் ராபி பயிர்கள் பொய்த்துப் போனது) மற்றும் நீர்நிலை வறட்சி (நிலத்தடி நீர் குறைந்து போனது) போன்றவை மராத்வாடாவில் அதிகரிக்கத் தொடங்கின.
வகோன் தோக் கிராமம் கியோரி தாலுகாவில் உள்ளது. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மகராஷ்ட்ரா அரசாங்கம் அறிவித்த வறட்சி பாதித்த 151 தாலுகாவில் இதுவும் ஒன்று. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி, 2018ம் ஆண்டு ஜுன் முதல் செப்டம்பர் வரை, 50 சதவிகிதத்திற்கும் குறைவாகவே – 288மிமீ - கியோரியில் மழை பதிவாகியுள்ளது. இதே காலத்தில் நீண்டகால சராசரி மழையளவு 628மிமீ ஆகும். பயிர்களுக்கு மிக முக்கிய மாதமான செப்டம்பரில் சராசரி மழையளவான 170மிமீ-யை விட 14.2மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது.









