அரசு அலுவலர்கள் தவிர மற்ற அனைவரின் பெயர்களும் அவர்களின் அடையாளத்தை தவிர்ப்பதற்காக மாற்றப்பட்டுள்ளன. இதேக் காரணத்தால் தான் கிராமங்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. இரண்டு பகுதியாக எழுதப்பட்ட கட்டுரையில் இது முதல் பகுதியாகும்.
மாலை 5 மணி இருக்கும், வானில் கொஞ்சம் வெளிச்சம் இருந்த போது 16 வயது விவேக் சிங் பிஷ்ட் மற்றும் சிலர் சட்பரில் உள்ள தங்களின் முகாமிற்குத் திரும்பினர். “இன்னும் நிறைய கீடா ஜடியை பறிப்பதற்காக மேலும் 10 நாட்களுக்கு நாங்கள் இங்கு இருப்போம். இந்தப் பருவம் எங்களுக்கு சிறப்பானதாக இல்லை,” எனும் அவர் என்னிடம் அன்று சேகரித்த 26 துண்டு பூஞ்சைகளைக் காட்டுகிறார்.
கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டர் உயரத்தில் உள்ள சட்பர் புல்வெளி பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு பனிக் காற்றுக்கு இடையே 35 தார்ப்பாய்க் கூடாரங்கள் கட்டப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்துள்ள விவேக் போன்ற பூஞ்சை வேட்டையர்கள் மே மாத மத்தியில் இந்த கூடாரங்களுக்கு வந்து தங்குகின்றனர். இந்தியா – நேபாள எல்லையிலிருந்து மேற்கில் சில கிலோமீட்டர் தொலைவில் பித்தோராகர் மாவட்ட தர்ச்சுலா வட்டாரத்தில் சட்பர் உள்ளது.
நல்ல நாட்களில் ஒருவர் 40 வரை எடுப்பார்கள். மோசமான நாட்களில் 10 தான் கிடைக்கும். உத்தராகண்டில் ஜூன் மத்தியில் பருவமழை தொடங்கும்போது லாபகரமான கம்பளிப் புழு வேட்டை கிட்டத்தட்ட முடிந்துவிடுகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் விவேக்கின் பெற்றோர், தாத்தா, பாட்டி, அவரது எட்டு வயது சகோதரி ஆகியோர் 900 துண்டுகளுடன் கிராமத்திற்குத் திரும்பினர். ஒவ்வொரு துண்டும் அரை கிராமிற்கும் குறைவான எடையைக் கொண்டிருக்கும். ஒரு துண்டை ரூ.150-200 வரை இக்குடும்பம் விற்கும்.









