“இந்த இரவு விரைவில் முடிந்துவிட வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். இப்போது இந்த கிராமத்தில் வேலை செய்யும் அனைவரின் வேண்டுதலும் அதுவாகத்தான் இருக்கும். ஏனெனில் பாம்புகள் இங்குமங்கும் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும்“ என்று காவாலா ஸ்ரீதேவி கூறுகிறார். அவரும், அவரது குடும்பத்தினரும், 2016ம் ஆண்டு மே மாதம் முதல் அவரது கிராமத்தில் மின்சார இணைப்புகளை அரசு துண்டித்தது முதல், கடும் இருட்டில் இரவுகளை அச்சத்துடனே கழித்து வருகிறார்கள்.
மேற்கு கோதாவரி மாவட்டத்தின் போலாவரம் மண்டலத்தில் உள்ள பிடிபக்கா கிராமத்தில் தங்கியுள்ள பத்தே பத்து குடும்பங்களுள் ஸ்ரீதேவியின் குடும்பமும் ஒன்று. இப்பகுதி கோதாவரி ஆற்றுக்கு அருகில் உள்ளது. அரசு பாசன வசதி திட்டங்களுக்காக இப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தியபோது, 2016ம் ஆண்டு ஜீன் மாதம் இங்கிருந்து 429 குடும்பங்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். ஜலயாக்னம் எனப்படும் ஒரு மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப்பணிகள் நடைபெறுகிறது. இந்த பெரிய திட்டம் 2004ம் ஆண்டு துவங்கி 2018ம் ஆண்டு முடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. எனினும் 60 சதவீத பணிகள் மட்டும்தான் இப்போது முடிக்கப்பட்டுள்ளது.
“மின்சார இணைப்புகளை துண்டித்த ஒரு மாதத்திற்கு பின்னர் அவர்கள் குடிநீர் இணைப்புகளையும் துண்டித்தனர்“ என்று ஸ்ரீதேவி கூறுகிறார். அவர் இப்போது போலாவரம் நகரிலிருந்து ஒரு கேன் தண்ணீரை ரூ.20க்கு வாங்குகிறார். இந்நகர் அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆட்டோவில் தனது கணவர் சூர்யச்சந்திரத்துடன் நகருக்கு சென்று வாங்கி வருகிறார்.
சில காலம் அந்த தம்பதியினர், தங்களின் 3 குழந்தைகளுடன் (மேலே உள்ள அட்டை படத்தை பார்க்கவும்), கோபாலபுரம் மண்டலத்தில் உள்ள ஹீக்கூம்பேட்டையில் உள்ள மறுகுடியமர்வு காலனியில் சென்று தங்கியிருந்தனர். ஆனால் ஒரு மாதத்திற்கு பின்னர் பிடிபக்கா திரும்பி வந்துவிட்டனர். “நாங்கள் அரசு அதிகாரிகளை நம்பினோம். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை“ என்று ஸ்ரீதேவி கண்ணீருடன் கூறுகிறார்.









