காலை 8 மணிக்கு அமைதியாக இருக்கும் சாலையின் ஒரு ஓரத்திலிருந்து உரத்த டொக் - டொக் என்ற சத்தம் வருகிறது. பாலப்பா சந்தர் தோத்ரே நடைபாதையில் பெரிய கற்களை தன்னைச் சுற்றி வைத்து அமர்ந்துகொண்டு, உளியால் செதுக்கி கொண்டிருக்கிறார். அவரது தற்காலிக 'பட்டறைக்கு' பின்னால் நிறுத்தப்பட்டுள்ள ரிக்க்ஷாக்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் உரிமையாளர்கள் விரைவில் தங்கள் வேலைக்குச் சென்று விடுவர். தோத்ரேவும் சில மணி நேரங்களில் இங்கிருந்து நகரத் துவங்கி விடுவார் - வடக்கு மும்பையின் புறநகர் பகுதியான கண்டிவாலி கிழக்கில் உள்ள அந்த நடைபாதையிலிருந்து, தான் செய்த உரல்களை எடுத்துக்கொண்டு செல்வார்.
சட்னிகள் மற்றும் மசாலாக்களை அரைக்க பயன்படும் ஒரு உரலையும், குழவியையும் செதுக்க அவருக்கு ஒரு மணி நேரமாகும். அவர் அதை தோராயமாக கல்லு ரப்பு என்றும், கன்னடத்தில் கல் உரல் அல்லது மராத்தியில் கல்பட்டா என்றும் அழைக்கிறார். அவர் அவற்றை செய்து முடித்ததும் ஒரு கனமான ரெக்சின் பையில் வைப்பார் - வழக்கமாக 2 முதல் 3 உரல்கள், ஒவ்வொன்றும் 1 முதல் 4 கிலோ வரை எடை உள்ளவை. பிறகு அவர் தனது நடைபாதை 'பட்டறையில்' இருந்து அருகிலுள்ள பகுதிகளுக்கு நடக்கத் துவங்குவார். அங்கு பரபரப்பான சாலைகளின் மூலைகளில் அவர் 'கடை' அமைக்கிறார். அவர் சில சமயங்களில் சில காலா பாத்தர்களை (கருங்கல்லை) கைவசம் வைத்திருக்கிறார். ஒருவேளை அதிகமான வாடிக்கையாளர்கள் உரல்களைக் கேட்டு வந்தால் அவர் அந்த இடத்திலேயே உரலை செதுக்கி தருவார்.
"அவர்கள் என்னை பாத்தர்வாலா என்றே அழைக்கின்றனர்", என்று தோத்ரே கூறுகிறார்.
சிறிய கல் உரலை ரூபாய் 200 க்கும், பெரியவற்றை ரூபாய் 350-400 ஆகிய விலைக்கும் விற்கிறார். "சில வாரங்களில் நான் ரூபாய் 1000-1200 வரை சம்பாதிக்கிறேன் சில நேரங்களில் நான் எதையுமே சம்பாதிப்பது இல்லை" என்கிறார். இதை வாங்குபவர்களில் முக்கியமாக இரண்டு சாரர்கள் இருக்கிறார்கள் மின்சார அரைப்பான்களை வாங்க முடியாதவர்கள் அல்லது இந்தக் கல் உரலைத் தங்கள் வாழ்வியல் அறைகளில் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் அல்லது பாலப்பாவின் மனைவி நாகுபாயைப் போல, கல் உரல்களையே பயன்படுத்த விரும்புபவர்கள். "எனக்கு மிக்ஸியை (மின்சார அரைப்பானை) பிடிக்கவில்லை","அதில் எந்த சுவையும் இருப்பதில்லை. இந்தக் கல் தான் உணவுக்கு புதிய நல்ல சுவையைத் தருகிறது", என்கிறார் அவர்.








