தெபாசிஷ் மொண்டல் தனது வீட்டின் இடிந்த சுவரை வெறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிறந்த இந்த வீட்டில் எஞ்சியிருப்பது எல்லாம் உடைந்த செங்கல் சிமென்ட் துண்டங்களும், உடைந்த கூறையும் தான்.

நவம்பர் 11 ஆம் தேதி அன்று, வடக்கு கொல்கத்தாவின் தல்லா பாலத்தின் கீழ், அவர் வாழ்ந்த காலனி, சுமார் 60 குடும்பங்களின் வீடாக இருந்தது, இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அன்று காலை 10:30 மணி அளவில் உள்ளூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப் பணித்துறையின் பணியாளர்கள், போலீசாருடன் வந்திருந்தனர். இடிப்பதற்காக அவர்கள் தொழிலாளர்களையும்  அழைத்து வந்திருந்தனர், இரண்டு நாட்களுக்குப் பிறகு சில சிமெண்ட் கட்டிடங்களை இடிப்பதற்கு புல்டோசரையும் வரவழைத்தனர். பஸ்தியை இடிப்பதற்கு ஒரு வாரம் ஆனது. இரண்டு பாதி இடிக்கப்பட்ட வீடுகள் இன்னமும் இருக்கின்றன அதே வேளையில் தினக் கூலிகள் (டிசம்பர் மாதத்தில்) தரையை சமன் செய்ய இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.

தல்லா பாலம் பி.டி சாலையின் நஸருல் பாதையில் அமைந்துள்ளது. பஸ்தியில் வசித்து வந்த மக்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தில் அவர்களது கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கூறுகின்றனர்.

"அது ஒரு மின்னலைப் போல நடந்தது", என்று கூறுகிறார், அவசர மருத்துவ ஊர்தி ஓட்டுநராய் மாதம் 9,000 ரூபாய் சம்பாதித்து வரும், தெபாசிஷ். அவரது தந்தை பிறந்த வீடான குடிசை வீட்டினை கல் வீடாக மாற்றுவதற்கு தனது நண்பர்கள் மற்றும் உள்ளூர் கடன் கொடுப்பவர்களிடமிருந்து அவர் 1.5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அவரது தாத்தா பாட்டி பல தசாப்தங்களுக்கு முன்னர் சுந்தரவனத்தின் ஒரு பகுதியான, வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியின் இரண்டாம் தொகுதியில் இருந்து கொல்கத்தாவிற்கு வேலை தேடி வந்தனர்.

தெபாசிஷ் கட்டிய வீடு இடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிக வட்டிக்கு அவர் வாங்கிய கடனில் பெரும்பகுதி இன்னமும் இருக்கிறது.

செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று தல்லா காலனியில் வசிப்பவர்களுக்கு சிக்கல் துவங்கியது, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இந்த பாலத்தை சரி செய்ய வேண்டும் என்று வாய்மொழியாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் சில உடமைகளை விட்டு விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும், பழுது நீக்கம் முடிந்தபின்பு திரும்பி அங்கு வந்து கொள்ளலாம் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது. செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி மாலை இங்குள்ள 60 குடும்பங்களும் அருகிலுள்ள இரண்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் - ஒன்று ரயில்வேக்கு சொந்தமான நிலம், மற்றொன்று மாநில நீர்ப்பாசனத்துறை சொந்தமான கால்வாய் அருகே உள்ள நிலம்.

PHOTO • Smita Khator

இடிபாடுகள்: இடிக்கப்பட்ட தல்லா பாலம் பஸ்தி மற்றும் (மேல் வலது) தெபாசிஷ் மொண்டல்  தான் கடன் வாங்கி கட்டிய வீடு இடிக்கப்பட்ட பின் எஞ்சியிருப்பது

குறுகிய சாலையின் எதிர் புறத்தில் இருக்கும் தல்லா பஸ்தியின் விரிவாக்கத்தில் இருக்கும் சுமார் பத்து குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக காத்திருக்கின்றன. அந்தப் பத்து குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் பருல் கரண். இப்போது 70 வயதாகும் அவர் ஒரு முன்னால் வீட்டுவேலைகள் செய்யும் தொழிலாளி. அந்தப் பாலத்தை சுட்டிக்காட்டி "இது முதன்முதலில் மரத்தால் கட்டப்பட்டது", என்று கூறினார். பல வருடங்களுக்கு முன்னர் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று அதிலிருந்து விழுந்துவிட்டது. பின்னர் அந்த மரப்பாலம் கான்கிரீட் பாலமாக மாற்றப்பட்டது அப்போது யாரும் வெளியேற்றப்படவில்லை. பருல் கணவரை இழந்தவர். தவிர நீரிழிவு நோயாளி. வீட்டு வேலை செய்து வரும் அவரது மகள் அந்த வருமானத்தை வைத்து இவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கரணின் குடும்பமும் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாவூத்பூர் என்னும் கிராமத்தில் இருந்து  கொல்கத்தாவிற்கு வந்திருக்கின்றது, என்று அவர் நினைவு கூர்கிறார். "சுந்தரவனத்தில் பாம்புகள் மற்றும் தவளைகளுடன், நீரிலும் சேற்றிலும் வாழ்வது எளிதான காரியமல்ல. நாங்கள் கிராமத்தில் இருந்து இங்கு வந்த போது இந்த இடம் புதர்கள் மண்டிக் கிடந்தது, இங்கு ரவுடிகளும் அதிகமாக வந்தனர்", என்று அவர் நினைவு கூர்கிறார். "எஜமானர்களின் வீடுகளில் வேலை முடிந்தவுடன் மதிய வேளையிலேயே நாங்கள் எங்களது வீடுகளுக்கு திரும்ப வேண்டி இருந்தது", என்று கூறினார்.

பருலின் அண்டை வீட்டுக்காரர் தங்கியிருக்கும் தற்காலிக முகாம், மூங்கில் கம்பங்களில் கருப்பு நிற தார்பாய்களைச் சுற்றி, மாநகராட்சி ஊழியர்களால் இயற்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கூடாரமும் நூறு சதுர அடி கொண்ட அறைகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. மின்சாரம் மாலை 5 மணியில் இருந்து காலை 5 மணி வரை மட்டுமே கிடைக்கும். கருப்பு தார்பாய்கள் சுற்றி இருப்பதால் பகல் நேரத்தில் அறைகள் இருட்டாகத்தான் இருக்கும். ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் முகாம் தாழ்வான பகுதி என்பதால், நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று வந்த புல்புல் புயலின் போது அது வெள்ளக்காடானது.

"புயல் வந்த நாளன்று இந்த இடம் முழுவதும் நீரால் சூழப்பட்டு இருந்தது", என்று அருகில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது மாணவியான ஸ்ரேயா மொண்டல் கூறுகிறார். அவரும் பஸ்தியைச் சேர்ந்த மற்ற குழந்தைகளும் ரயில்வே நிலத்தில்  இருக்கும் அவர்களது முகாமை நான் பார்வையிடச் சென்ற போது அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்தனர். "எங்களது அறைகளில் முழங்கால் அளவு நீர் இருந்தது. புத்தகங்களை காப்பாற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது. வீடுகள் இடிக்கப்பட்ட போது எங்களது விளையாட்டுச் சாமான்களை நாங்கள் இழந்துவிட்டோம்", என்று அவர் கூறினார்.

PHOTO • Smita Khator

மேல் இடது: பருல் கரண், பருல் மொண்டல் (நடுவில் இருப்பவர்) மற்றும் அவரது மைத்துனி ஆகியோர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் அடியில் குடியேறியதாகக் கூறுகின்றனர். மேல் வலது: இதுவரை வேறு இடத்திற்கு மாற்றப்படாததால்  அவரும், அவரது மகளும் தாங்கள் சட்டங்களுக்கு உட்பட்டு தங்கியிருப்பதை நிரூபிப்பதற்காக தங்களது மின்சார கட்டண ரசீதினை காண்பிக்கின்றனர். கீழ் வரிசை: தற்காலிக முகாம்கள்: ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில் இருப்பது (இடது) மற்றும் சித்பூர் கால்வாய்க்கு அருகில் இருக்கும் இடம் (வலது)

இரண்டு முகாம்களிலும் இருக்கும் மக்கள் இன்னமும் பாலத்திற்கு அடியில் கட்டப்பட்ட கழிவறைகளைத் (எஞ்சி இருப்பது)  தான் பயன்படுத்தி வருகின்றனர். கால்வாய்க்கு அருகில் இருக்கும் தற்காலிக முகாம் தல்லா பாலத்திலிருந்து ரயில்வே முகாமை விட அதிக தொலைவில் இருக்கிறது, அதனால் அங்கு தங்கியிருக்கும் மக்கள் கட்டண பொது கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர், அதுவும் மாலை எட்டு மணிக்கு மூடப்பட்டுவிடும். அதன் பிறகு அவர்கள் இடிக்கப்பட்ட பஸ்தி பகுதியில் இருக்கும் கழிவறைகளுக்கு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது, மேலும் இவ்வாறு செய்வது பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்று பெண்கள் புகார் கூறுகின்றனர்.

கால்வாயின் அருகே, நீலம் மேத்தா என்ற 32 வயது  பெண்ணை நான் சந்தித்தேன். அவரது கணவர் பீகாரில், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்திலிருந்து கொல்கத்தாவிற்கு வந்திருக்கிறார் அவர் ஒரு தெருவோரக் கடையில் மாவு விற்பவர். நீலம், வீட்டு வேலை செய்பவர். "நாங்கள் எங்கே போவது?" என்று கேட்கிறார் நீலம். "நாங்கள் எப்படியோ வாழ்ந்து வந்தோம். நாங்கள் இங்கு தான் பல வருடங்களாக இருக்கிறோம். எனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னை போல அவளும் அடுத்தவர் வீட்டில் வேலை செய்வதை நான் விரும்பவில்லை. எனது மகனும் படித்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது என்று கூறுங்கள்?" என்று கேட்கிறார்.

கால்வாய் முகாமுக்கு அருகில் கழிவறை கட்டப்படும் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். அதுவரை அவரும் மற்றவர்களும் ஒவ்வொரு முறை பொது கழிப்பறைக்குச் செல்லும் போதும் இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. "கழிவறைக்கும் பணம் எப்படி எங்களால் செலுத்த முடியும்? பெண்களும், இளம் பெண்களும் இரவு நேரத்தில் எங்கே செல்வது? ஏதோ ஒன்று நடந்தால் யார் பொறுப்பேற்றுக் கொள்வது? என்று அவர் கேட்கிறார்.

அவரது 15 வயது மகள் நேகா தாயின் அருகில், தற்காலிக முகாமின் அறையில் தரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். "இதைப் போன்ற சூழ்நிலையில் படிப்பது மிகவும் கடினமானது", என்று அவர் கூறுகிறார். "பகல் முழுவதும் மின்சாரம் இருப்பதில்லை. பிறகு நாங்கள் படித்து முடிப்பது எப்படி?" என்று அவர் கேட்கிறார்.

Left: 'Where will we go?' asks Neelam Mehta, while her daughter Neha struggles to study. Right: Dhiren Mondo asks, 'Tell me, where should we go?'
PHOTO • Smita Khator
Left: 'Where will we go?' asks Neelam Mehta, while her daughter Neha struggles to study. Right: Dhiren Mondo asks, 'Tell me, where should we go?'
PHOTO • Smita Khator

இடது: நாங்கள் எங்கே செல்வது? என்று நீலம் மேத்தா கேட்கிறார், அவரது மகள் நேகா படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். வலது:  "நாங்கள் எங்கே செல்வது என்று கூறுங்கள்?" என்று தீரன் மொண்டல் கேட்கிறார்

தங்கும் இடத்திற்கு செல்லும் வழியில் ஒரு துர்கை அம்மன் கோவில் உள்ளது. அங்கு இரவு பூஜை செய்யும், 80 வயதாகும் தீரன் மொண்டல், இப்போது ரயில்வே நிலத்தில் இருக்கும் தற்காலிக முகாமில் தங்கி இருக்கிறார்.  "நான் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இங்கு தான் வசித்து வருகிறேன்", என்று கூறுகிறார். "நான் சுந்தரவனத்தின் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்தவன். இங்கு வேலை செய்வதற்காக, நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறோம். எங்களது கிராமமே ஆற்றில் மூழ்கிவிட்டது. நாள் முழுவதும் தள்ளுவண்டி இழுத்து பணம் சம்பாதிக்கிறார், தல்லா பஸ்தியில் மூங்கில் கம்பத்தால் ஆன வீட்டில், மெண்டல் தனது மூன்று குழந்தைகளையும் வளர்த்திருக்கிறார், பின்னர் அதை கஷ்டப்பட்டு காங்கிரீட் வீடாக மாற்றி அமைத்திருக்கிறார்.

"நகராட்சி கவுன்சிலர் எங்களது வீடுகளை நாங்கள் கட்ட அவரிடம் அனுமதி வாங்கி இருக்கிறோமா என்று கேட்கிறார்!" என்று அவர் கூறுகிறார். நான் அவரிடம் நாங்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இங்குதான் தங்கி இருக்கிறோம் சரியான மாற்று இடம் வழங்கப்படாமல் இதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் எப்படி செல்ல முடியும்? என்று கேட்டேன். எங்களைப் போன்ற மக்களை அவர் எவ்வாறு வெளியேற்றம் செய்ய முடியும்? நாங்கள் எங்கே செல்வது என்று கூறுங்கள்?" என்று தீரன் மொண்டல் கேட்டிருக்கிறார்.

செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று மாலை போலீசார் வந்து குடியிருப்பாளர்கள் வெளியேறும்படி கூறினர், "அப்போது அவர்கள் என் மாமியாரை மோசமாக பேசத் துவங்கினார். எனது மைத்துனரை சட்டையின் காலரை பிடித்து இழுத்துச் சென்று முகாமில் விட்டனர். நான் அவர்களை தடுக்க சென்ற போது, நான் கீழே தள்ளிவிடப்பட்டேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன், அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்ளவில்லை. பெண்களின் முடியை பிடித்து இழுத்தனர். அப்போது ஒரு பெண் போலீஸ்காரர் கூட இல்லை. அவர்கள் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தினர்", என்று 22 வயதாகும் தும்பா மொண்டல் குற்றம்சாட்டுகிறார்.

(இருப்பினும், இந்த நிருபருக்கு அளித்த பேட்டியில் தல்லா பஸ்தியில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்பூர் காவல் நிலையத்தின், பொறுப்பில் இருக்கும் அதிகாரியான அயன் கோஸ்வாமி, தான் எந்த விதமான தவறுதலான கையாளுதலையும், வற்புறுத்தலையும்  மேற்கொள்ளவில்லை என்று மறுத்தார். மேலும் இந்த குடும்பங்களின் மீது தான் இரக்கம் கொள்வதாகவும், ஆனால் தகுதி வாய்ந்த கட்டடக் கலைஞர்களால் இப்பாலம் ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டதால், இம்மக்களை வெளியேற்றுவது தன்னால் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றும் கூறினார். இந்தப் பாலம் இடிந்து விழும் பட்சத்தில் பஸ்தியில் வசிப்பவர்கள் தான் முதலில் உயிரிழப்பர் என்று அவர் கூறினார்.)

PHOTO • Smita Khator

இடிக்கப்பட்ட தல்லா காலனியில் ஒரு நிழலில் சுலேகா மொண்டல் மதிய உணவினை சமைத்துக் கொண்டிருக்கிறார். மேல் வலது: "ஏழை எளிய மக்கள் எப்போதுமே அரசாங்க நிலத்தில் தான் வசித்து வருகின்றனர், இல்லையென்றால் நாங்கள் வேறு எங்கு வசிப்பது?" என்று லக்கி தாஸ் கேட்கிறார். கீழ் வரிசை: தற்காலிக முகாம்களில் உள்ள பெண்கள் தங்களது பழைய பஸ்தியின் கழிப்பறைகளுக்கு நீண்டதூரம் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் கவுன்சிலரான தருண் சாஹா, தொலைபேசியில் என்னிடம், "அவர்களெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள், என்று கூறினார். அவர்கள் அங்கு தங்குவதற்கு சட்டபூர்வ அனுமதி எதுவும் இல்லை. அவர்கள் குடிசைகளில் வசித்து வந்தனர். மனிதாபிமான அடிப்படையில் தண்ணீரும், சுகாதாரமும் அவர்களுக்கு (தல்லா பஸ்தி மக்களுக்கு) வழங்கினோம். பின்னர் அவர்கள் குடிசை வீடுகளை கல் வீடுகளாக மாற்றிவிட்டனர்". "இந்தப் பாலம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதற்கு அவசர புனரமைப்பு தேவைப்படுகிறது. பழுது பார்க்கவில்லை என்றால் உயிர்களை பலி வாங்கி விடும். அவர்களை இடம்பெயரச் செய்யதே ஆக வேண்டும்", என்று கூறினார்.

தல்லாவில் வசித்த குடும்பங்களுக்கு நிரந்தர மறுவாழ்வு வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. "இப்போதைக்கு, நாங்கள் அவர்களை தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளோம். எதிர்காலத்தில் அந்த முகாம்களில் டின் கூரைகள் அமைக்கப்படலாம், ஆனால் கான்கிரீட் கட்டிடங்களுக்கு அனுமதி கிடையாது", என்று அவர் கூறுகிறார். அவர்களது வீடு வேறு இடத்தில் உள்ளது என்று, அவர்களது கிராமத்தை குறிப்பிட்டு கூறுகிறார் மேலும் சில குடும்பங்கள் ஒதுக்குப் புறத்தில் உள்ள இடங்களை வாங்கியிருக்கின்றனர் என்றும் கூறுகிறார். "அவர்கள் தங்களது வேலையின் பொருட்டு தான் இந்த இடத்தை ஆக்கிரமித்து இருக்கின்றனர். அவர்கள் இங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களது குடும்பத்தையும் இங்கேயே அழைத்து வந்துவிட்டனர். அவர்களில் பலர் இப்போது வசதியாகத் தான் இருக்கின்றனர்", என்று கூறினார்.

"ஏழை எளிய மக்கள் எப்போதுமே அரசாங்க நிலத்தில் தான் வசித்து வருகின்றனர், இல்லையென்றால் நாங்கள் வேறு எங்கு வசிப்பது?" என்று 23 வயதாகும், குடும்பத் தலைவியான லக்கி தாஸ் கேட்கிறார், அவரது கணவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவர்களது இரண்டு மகள்களுடன் அவர்களும் தல்லா பஸ்தியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். "நாங்கள் ஏழைகள். நாங்கள் எங்களது உழைப்பால் தான் சம்பாதிக்கிறோம்", என்று லக்கி மேலும் கூறுகிறார். "இந்த சிரமங்களை எல்லாம் நான் எனது பெண் குழந்தைகளுக்காகத் தான் எதிர்கொள்கிறேன்", என்று கூறினார்.

இடிக்கப்பட்ட பஸ்தியில் வாசித்தவர்கள் பாலம் பழுது பார்க்கப்பட்ட பின்னர், தாங்கள் திரும்பி வந்து வசித்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று கவுன்சிலரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கேட்டனர். ஆனால் அத்தகைய உத்தரவாதம் எதுவும் இன்று வரை வழங்கப்படவில்லை.

Left: The eviction notice, pasted on November 6. A poster calling for a meeting on November 18 to demand proper and permanent rehabilitation of evicted families. Right: The Tallah basti residents at a protest march on November 11
PHOTO • Soumya
Left: The eviction notice, pasted on November 6. A poster calling for a meeting on November 18 to demand proper and permanent rehabilitation of evicted families. Right: The Tallah basti residents at a protest march on November 11
PHOTO • Smita Khator
Left: The eviction notice, pasted on November 6. A poster calling for a meeting on November 18 to demand proper and permanent rehabilitation of evicted families. Right: The Tallah basti residents at a protest march on November 11
PHOTO • Soumya

இடது: வெளியேற்ற அறிவிப்பாணை நவம்பர் 6 ஆம் தேதியன்று ஒட்டப்பட்டது. வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு முறையாகவும் நிரந்தரமாகவும் மறுவாழ்வு வழங்கக்கோரி நவம்பர் 18 ஆம் தேதி அன்று நடக்கும் கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கும் சுவரொட்டி ஒன்று. வலது: நவம்பர் 11ஆம் தேதியன்று நடந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பில் தல்லா பஸ்தியின் குடியிருப்பாளர்கள்

செப்டம்பர் 25 ஆம் தேதியன்று அவர்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டி இருந்த போது சிறிய எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்தது, தல்லா காலனி குடியிருப்பாளர்கள் இரவு 10 மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கு பாலத்தை முற்றுகையிட்டனர். நவம்பர் 11 ஆம் தேதி அன்று பேரணி ஒன்றை நடத்தினர். நவம்பர் 18 ஆம் தேதியன்று தங்களது கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பதற்காக ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தினர். பஸ்தீவாசி ஷ்ரம்ஜீவி அதிகார் ரக்ஷா கமிட்டியாக ஒன்றிணைந்து, அவர்களின் கழிப்பறைகள் மற்றும் சீரான மின்சாரத்திற்காக பரப்புரை செய்கின்றனர், மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் செலவினை குறைக்கும் வகையில் ஒரு சமூக சமையலறையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

நவம்பர் 25 ஆம் தேதி அன்று, தெருவில் பொருட்களை விற்று வரும் ராஜா ஹஸ்ரா 9அவரும் தனது குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டவர்) வெளியேற்றப்பட்ட சேரி குடும்பங்களின் சார்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர்களின் மிக முக்கிய கோரிக்கைகள்: முறையான மறுவாழ்வு - அவர்கள் வெளியேற்றப்பட முடியாத இடத்தில் வாழ்வதற்கு ஒரு நிரந்தர இடம், அதுவும் இடிக்கப்பட்ட பஸ்தியின் அருகிலேயே (ஏனெனில் அது அவர்களது பணியிடங்களுக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் நெருக்கமாக இருக்கின்றது) மேலும் மின்சாரம், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளும் முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதே.

தற்காலிக முகாமில் சுலேகா மொண்டல் ஒரு மண் அடுப்பை பற்ற வைத்திருக்கிறார். மணி மதியம் 2:30 மணி ஆகிறது அவர் இப்போது தான் அருகிலிருக்கும் வீடுகளில் வேலை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் - மீண்டும் மாலை நேரம் வேலை செய்வதற்கு செல்வார். வாணலியில் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவரை ஆகியவற்றை கிளறி விட்டபடியே, "கவுன்சிலர் மீண்டும் எங்களை கிராமத்திற்கே செல்லும்படி கூறுகிறார். நாங்கள் நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் தாவூத்பூரைவிட்டு இங்கு வந்தோம். இப்போது மீண்டும் திரும்பிச் செல்லும்படி  பணிக்கப்படுகிறோம்? என்று கூறுகிறார். சுந்தரவனத்தின் நிலை என்ன என்பது அனைவரும் அறிந்ததே. ஓரளவுக்கு எங்களிடம் இருந்ததையும் ஐலா புயல் அழித்துவிட்டது. நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. நாங்களும் அந்தப் பாலம் சரி செய்யப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறோம். ஆனால் அரசாங்கம் நிச்சயமாக எங்களுக்கு மறுவாழ்வு அளித்தாக வேண்டும்", என்று கூறுகிறார்.

இக்கட்டுரையின் நிருபர், சௌமியா, ராயா மற்றும் ஆர்கோ ஆகியோரின் உதவிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்.

தமிழில்: சோனியா போஸ்

Smita Khator

स्मिता खटोर कोलकात्यात असतात. त्या पारीच्या अनुवाद समन्वयक आणि बांग्ला अनुवादक आहेत.

यांचे इतर लिखाण स्मिता खटोर
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

यांचे इतर लिखाण Soniya Bose