இது இந்தியன் பிரீமியர் லீக்கின் உச்சகட்டமான காலகட்டம். ஆனாலும் நயாகான் கிராமத்தில் மக்களின் மனங்களில் கிரிக்கெட் எதுவும் இல்லை. பக்கத்து கிராமம் துமாஸ்பூரில் நடந்த வன்முறையின் மிச்சங்கள் இன்னமும் இங்கே இருக்கின்றன. இந்த வருடத்தின் ஹோலிப் பண்டிகையான மார்ச் 21 அன்று இரண்டு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு ஒரு முஸ்லிம் சமூகம் மீதான தாக்குதலாக மாறியது. இதைப் பற்றிய செய்திகளை எல்லா ஊடகங்களும் வெளியிட்டன. கம்பிகளையும் கம்புகளையும் வைத்து அடித்தவர்கள் “போய் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடு” என்று திட்டியிருக்கின்றனர். வன்முறைத்தாக்குதலை நடத்திய ஐந்து பேர்களில் மூன்றுபேர் நயாகான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
“இந்தப் பகுதியின் விவகாரங்களைக் கவனிக்கிற காவல்துறை, இந்தத் தாக்குதல்கள் பற்றி நடவடிக்கைகள் எடுப்பதில் மெத்தனமாக இருக்கிறது. “ என்கிறார் ஒரு இல்லத்தரசியான ராகி சவுத்ரி (31). “ கிராமத்து பையன்கள் பெண்களை பாலியல்ரீதியாக சீண்டும்போது, சண்டைகள் வரும்போது தலையிடுவதற்கு நாங்கள் எட்டு பத்து பெண்களைக் கொண்ட குழுவை அமைத்திருக்கிறோம். இதுதான் எங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி. காவல்துறையினர் போக்குவரத்தை கண்காணிக்கின்றனர். அல்லது அரசியல்வாதிகள் வந்தால் அவர்களைப் பாதுகாக்கிறார்கள். பணக்காரர்கள் அழைத்தால் உடனடியாக வேலை செய்வார்கள். எங்களை அவர்கள் ஜந்துக்களைப் பார்ப்பதுபோல பார்க்கிறார்கள்.”
நயாகானின் கிருஷ்ண குன்ஞ் காலனியில் ராகி வசிக்கிறார். (மாருதி குன்ஞ் காலனியும் இங்கே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சஞ்சய் காந்தி இந்தப் பகுதியில் ஜப்பான் கார் கம்பெனியான சுசுஹியோடு இணைந்து மாருதி கார் கம்பெனியை 1970களில் உருவாக்கியபோது இந்தப் பகுதியில் அந்தக் கம்பெனியின் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் உருவானபோது இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
அரியானா மாநிலத்தின் குருக்ராம் மாவட்டத்தில் சோக்னா தாலுகாவின் போன்ட்சி கிராமத்திலிருந்து 2016 ஜனவரியில் தனியாகப் பிரிக்கப்பட்டது நயாகான் பகுதி. குருக்ராம் மக்களவைத் தொகுதியின் தேர்தலுக்காக இந்த கிராமத்தில் மே 12 அன்று தேர்தல்கள் நடைபெற உள்ளது.
குருக்ராம் நாடாளுமன்றத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது வெற்றியை ராவ் இந்தர்ஜித் சிங் பெற்றார். ஏறத்தாழ 18.46 லட்சம் வாக்காளர்கள் இங்கே உள்ளனர். அதில் 13.21 லட்சம் வாக்குகள் வரை பதிவாகின. இந்திய தேசிய லோக்தள் கட்சியின் ஜாகிர் உசேனை அவர் 2.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2009 ஆம் ஆண்டு வரையில் இந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் கட்சியின் தரம்பால் சிங் 133,713 வாக்குகள்தான் பெற்றார். அது பதிவான வாக்குகளில் 10.12 சதவீதம்தான். ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவ் 79,456 வாக்குகளை வாங்கினார். மொத்த வாக்குகளில் 6.02 சதவீதம் அது.









