ஆரம்பத் தொகையாக ரூ.2500 செலுத்தி வாழ்க்கையில் முதல் முறையாக ஸ்மார்ட்போன் வாங்கினார் ராஜேஷ். இரண்டு வருடம் ஆகியும் அவரால் அதை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. “பள்ளியில் தேர்வானதற்காக என் மூத்த மகன் தினேஷிற்கு வாங்கி கொடுத்த பரிசு இது. போனின் மொத்த விலை ரூ.7500. மீதமுள்ள தொகையை ஆயிரம் ரூபாயாக ஐந்து தவணையில் கட்டினோம்” என கூறுகிறார் 43 வயதாகும் ராஜேஷ்.
16 வயதான தினேஷிடம் தான் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஆனால் மகராஷ்ட்ரா பால்கர் மாவட்டத்தின் டோங்கரி கிராமத்தில் உள்ள வீட்டில் இதை ராஜேஷூம் பயன்படுத்த முயற்சிக்கிறார்
அந்தப் போனின் விலை, ராஜேஷின் ஒரு மாத சம்பளத்திற்கு ஈடானது. அவர் தினசரி ரூ. 250 முதல் 300 வரை சம்பாதிக்கிறார். “அதை பயன்படுத்த எவ்வுளவோ முயற்சித்தேன். ஆனால் சில நாட்கள் கழித்து கைவிட்டு விட்டேன். எனக்கு என்னுடைய பழைய போனே போதும். அதில் நல்ல கீபேட் உள்ளது.”
இத்தகைய கடினமான நிலப்பரப்பிலும் தலசாரி தாலுகா – ஆதிவாசி மக்கள்தொகையில் பெரும்பாலும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களே - போன்ற கடினமான சூழலிலும் இவரது மகனின் தலைமுறையினர் நன்றாகவே ஸ்மார்ட்போனுக்கு பழகிவிட்டனர். ஆனால் விலை மற்றும் நெட்வொர்க் தொடர்பில் மற்றவர்களோடு குறைந்து காணப்படுகின்றனர்.
குஜராத் எல்லையோரமாக இருக்கும் இந்த ஆதிவாசிப் பகுதி மும்பையிலிருந்து வெறும் 130கிமீ தொலைவில் இருந்தாலும், இணையத் தொடர்பு மோசமாகவே உள்ளது. “மின்சார விநியோகமும் சீரற்றே உள்ளது, குறிப்பாக பருவமழை காலத்தில்” என்கிறார் வார்லி பழங்குடி இணத்தைச் சேர்ந்த ராஜேஷ்.
டோங்கரியில் ஏதாவது மரத்துக்கு அடியில் சிறுவர்கள் குழுமியிருப்பதை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அந்த இடத்தில்தான் நன்றாக நெட்வொர்க கிடைக்கிறது என தைரியமாக கூறலாம். அந்தக் குழுவில் ஒன்று அல்லது இருவரிடம் ஸ்மார்ட்போன் இருக்கும். மற்றவர்கள் சுற்றி நின்று ஆர்வத்தோடு வேடிக்கை பார்ப்பார்கள். இங்கு ஸ்மார்ட்போனை சொந்தமாக வைத்திருக்கும் பெண்களை கண்டுபிடிப்பது அரிது.









