“விடுமுறைகள், இடைவேளைகள் அல்லது முறையான வேலை நேரம் எதுவும் கிடையாது.”
ஷைக் சலாவுதீன், ஹைதராபாத்தின் ஒரு கேப் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். 37 வயது பட்டதாரியான அவர், நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை படிக்கவே இல்லை. “அதில் சட்ட நுணுக்க வார்த்தைகள் நிறைய இருந்தன.” ஒப்பந்தமும் அவர் தரவிறக்கம் செய்த செயலியில்தான் இருக்கிறது. கைவசம் இல்லை.
“ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடவில்லை,” என்கிறார் டெலிவரி ஏஜெண்ட் ரமேஷ் தாஸ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்திருக்கும் அவர், சட்டப்பூர்வ உத்திரவாதம் எதையும் எதிர்பார்க்கவில்லை. மேற்கு வங்க பஸ்சிம் மெதினிபூர் மாவட்ட பகா ருனா கிராமத்திலிருந்து வந்துவிட்ட பிறகு சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அவரின் தேவையாக இருந்தது. “எந்த ஆவணங்களும் கொடுக்கப்படவில்லை. எங்களின் அடையாள அட்டை செயலியில் இணைக்கப்பட்டது. அது மட்டும்தான் ஒரே அடையாளம். நாங்கள் ஒப்பந்ததாரர்கள் (மூன்றாம் நபர்களின்) வழியாக வேலையில் சேர்க்கப்பட்டோம்,” என சுட்டிக் காட்டுகிறார்.
ஒரு பார்சலுக்கு 12லிருந்து 14 ரூபாய் வரை ரமேஷுக்கு கமிஷன் வரும். 40லிருந்து 45 பார்சல்களை ஒருநாளில் எடுத்து சென்று உரியவர்களிடம் கொடுத்தால் 600 ரூபாய் அவர் சம்பாதிக்க முடியும். ஆனால் அதில், “எரிபொருள் செலவு இல்லை. காப்பீடு இல்லை. மருத்துவ பலன் இல்லை, எந்த சலுகைத் தொகையும் இல்லை,” என்கிறார் அவர்.
மூன்று வருடங்களுக்கு முன் பிலாஸ்பூரிலிருந்து ராய்ப்பூருக்கு இடம்பெயர்ந்தபிறகு, சாகர் குமார் நிலைத்து நீடிக்கும் வாழ்க்கை பெற பல மணி நேரங்கள் உழைத்தார். 24 வயதாகும் அவர், தலைநகர் சட்டீஸ்கரிலுள்ள ஓர் அலுவலகக் கட்டத்துக்கு காவலாளியாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணியாற்றுகிறார். பிறகு நள்ளிரவு வரை ஸ்விகி ஆர்டர்கள் டெலிவரி செய்யும் வேலையை செய்கிறார்.
பெங்களூருவின் பிரபலமான உணவகம் ஒன்றுக்கு வெளியே பல டெலிவரி ஏஜெண்ட்கள் நிற்கின்றனர். கைகளிலுள்ள ஸ்மார்ட்ஃபோனை பார்த்துக் கொள்கின்றனர். அடுத்த ஆர்டருக்கான சத்தம் ஃபோனில் வர காத்திருக்கிறார் சுந்தெர் பகதூர் பிஷ்ட். எட்டாம் வகுப்போடு படிப்பை முடித்துக் கொண்ட அவர், சமீபமாய் கற்றுக் கொண்டிருக்கும் மொழியில் வரும் தகவல்களை தெரிந்து கொள்ள சிரமப்படுகிறார்.
“ஆங்கிலத்தில் வாசிக்கிறேன். ஓரளவுக்குதான் தெரியும். வாசிக்குமளவுக்கு பெரிதாக இருக்காது… முதல் தளம், ஃபிளாட் 1 ஏ…” என அவர் வாசித்துக் காட்டுகிறார். மேலும் அவரிடமும் கைவசம் ஒப்பந்தம் இல்லை. அலுவலகத்துக்கு செல்ல வேண்டியது கிடையாது. “விடுமுறை, நோய் விடுமுறை எதுவும் கிடையாது.”
நாடு முழுவதும் மெட்ரோக்களிலும் டவுன்களிலும் பரவியிருக்கும் ஷைக், ரமேஷ், சாகர் மற்றும் சுந்தர் போன்ற இந்தியாவின் கிக் எனப்படும் உதிரித் தொழிலாளர்கள் 77 லட்சம் பேர் இருப்பதாக 2022ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட நிதி அயோக் அறிக்கை குறிப்பிடுகிறது.
கேப் ஓட்டுபவர்கள், உணவு மற்றும் பார்சல் டெலிவரி செய்பவர்கள், வீட்டுக்கு சென்று ஒப்பனை செய்பவர்கள் அவர்களில் அடக்கம். அவர்களில் இளையோர்தான் அதிகம். அவர்களுக்கு செல்ஃபோன்கள்தான் அலுவலகம். பணி விவரங்களை செயலி அனுப்பும். வேலை பாதுகாப்பு என்பது தினக்கூலி தொழிலாளர் அளவுக்கு ஆபத்தை கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களில், செலவை குறைப்பதாக சொல்லி குறைந்தபட்சம் இரண்டு நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பியிருக்கிறது.
தொழிலாளர் கணக்கெடுப்பு (ஜுலை - செப்டம்பர் 2022)ன்படி, 15-29 வயதுகளில் உள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்பின்மை 18.5 சதவிகிதமாக உள்ள நிலையில், சட்ட பாதுகாப்பின்மையோ ஒப்பந்த குறைபாடோ இருந்தாலும்கூட ஒரு வேலை கிடைத்துவிட வேண்டுமென்கிற பதற்றம் நிலவுகிறது.
தினக்கூலி உழைப்பை விட உதிரி உழைப்பு நகரத்தில் அதிகமாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. “நான் கூலியாக ஆடை மற்றும் பை கடைகளில் வேலை பார்த்திருக்கிறேன். ஸ்விகியை பொறுத்தவரை ஒரு பைக்கும் செல்ஃபோனும் மட்டும்தான் எனக்கு தேவை. கனமான பொருட்களை நான் தூக்க வேண்டியதில்லை. கஷ்டமான வேலை எதையும் செய்ய வேண்டியதில்லை,” என்கிறார் சாகர். மாலை 6 மணிக்கு மேல் ராய்ப்பூரில் உணவு மற்றும் பிற பொருட்களை டெலிவரி செய்து அவர் நாளொன்றுக்கு 300லிருந்து 400 ரூபாய் வரை ஈட்டுகிறார். விழாக்காலத்தில் 500 ரூபாய் வரை கிட்டும். 2039ம் ஆண்டு வரை செல்லுபடி ஆகும் அவரின் அடையாள அட்டையில் ரத்தப்பிரிவு குறித்த தகவல் இல்லை. தொடர்பு எண்ணும் இல்லை. அவற்றை நிரப்புவதற்கான நேரம் இல்லை என்கிறார் அவர்.
ஆனால் மற்றவரை போலல்லாமல், சாகர் பகலில் செய்யும் காவலாளி பணியில் மருத்துவக் காப்பீடும் வருங்கால வைப்பு நிதியும் உண்டு. மாத வருமானம் ரூ.11,000. நிலையான இந்த வருமானமும் டெலிவரி வேலை செய்து கிடைத்த மேலதிக வருமானமும் சேர்ந்து சேமிப்பு வைக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கின. “ஒரு வேலையைக் கொண்டு என்னால் சேமிக்கவோ வீட்டுக்கு பணம் அனுப்பவோ கொரோனா கால கடன்களை அடைக்கவோ முடியவில்லை. இப்போது ஓரளவுக்கு சேமிக்க முடிகிறது.”
பிலாஸ்பூரில், சாகரின் தந்தை சாய்ராம் ஒரு காய்கறி கடையை டவுனில் நடத்துகிறார். அவரின் தாய் சுனிதா, தம்பிகளான ஆறு வயது பாவேஷையும் ஒரு வயது சரணையும் பார்த்துக் கொள்கிறார். சட்டீஸ்கரில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள். “10ம் வகுப்பில் பொருளாதார சிக்கலின் காரணமாக படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. நகரத்துக்கு இடம்பெயர்ந்து வேலை பார்க்கத் தொடங்கினேன்,” என்கிறார் அவர்.
கார் ஓட்டக் கற்றுக் கொள்ளுதல் எளிது எனச் சொல்கிறார் செயலியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கேப் டிரைவர் ஷைக். மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் அவர், சங்க வேலைக்கும் வாகனம் ஓட்டுவதற்கும் இடையே நேரத்தை பிரித்துக் கொள்கிறார். பெரும்பாலும் வாகனத்தை இரவில் ஓட்டுகிறார். “நெரிசல் குறைவாக இருக்கும். கொஞ்சம் அதிகமாக பணம் கிடைக்கும்.” கிட்டத்தட்ட 15,000லிருந்து 18,000 ரூபாய் வரை செலவு போக மாதத்துக்கு ஈட்டுகிறார் அவர்.
கொல்கத்தாவிலிருந்து வேலைக்காக இடம்பெயர்ந்த ரமேஷ், வருமானம் ஈட்ட சுலபமான வழியென்பதால் செயலி அடிப்படையிலான டெலிவரி வேலையில் சேர்ந்தார். தந்தை இறந்து குடும்பத்தை பார்த்துக் கொள்ள பள்ளிப்படிப்பை நிறுத்தியபோது அவர் 10 வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். “தாய்க்கு உதவ நான் சம்பாதிக்க வேண்டியிருந்தது. கடைகளில் வேலை பார்த்தேன். கிடைத்த வேலைகள் செய்தேன்,” என்கிறார் அவர் கடந்த 10 வருடங்களை பற்றி.
பார்சல் டெலிவரிகளுக்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூருக்குள் செல்லும்போது, டிராபிக் சிக்னலில் நிற்கையில் மனதில் பதற்றம் உருவாவதாக சொல்கிறார். “நான் எப்போதும் வேகத்தில் இருப்பேன். வேகமாக செல்வேன். எல்லாவற்றையும் நேரத்துக்கு செல்ல வேண்டுமென்ற பதற்றம் இருக்கும். மழைக்காலம் எங்களுக்கு பிரச்சினை. ஓய்வு, உணவு, ஆரோக்கியம் ஆகியவற்றை தியாகம் செய்து நாங்கள் எங்கள் இலக்கை எட்டுவோம்,” என்கிறார் அவர். பெரிய அளவில் முதுகில் பைகளை சுமந்து செல்வதால் முதுகு காயங்களும் ஏற்படுகின்றன. “பெரிய பொருட்களை சுமக்கிறோம். ஒவ்வொரு டெலிவரி நபரும் முதுகு வலியில் கஷ்டப்படுவார். ஆனால் எங்களுக்கென எந்த ஆரோக்கிய வசதியும் (காப்பீடு) இல்லை,” என்கிறார் அவர்.
பெங்களூருவில் வேலையில் சேரவென சுந்தர் நான்கு மாதங்களுக்கு முன் ஒரு ஸ்கூட்டர் வாங்கினார். மாதத்துக்கு 20,000 முதல் 25,000 வரை சம்பாதிப்பதாக சொல்கிறார் அவர். அதில் ஸ்கூட்டருக்கான மாதத் தவணை, பெட்ரோல், வாடகை, வீட்டுச் செலவு ஆகியவற்றிலேயே 16,000 ரூபாய் செலவாகி விடுகிறது.
விவசாயிகளும் தினக்கூலிகளும் கொண்ட குடும்பத்தின் எட்டு சகோதரர்களில் கடைசி சகோதரரான அவர் மட்டும்தான், வேலை தேடி நேபாளிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம்பெயர்ந்து இங்கு வந்திருக்கிறார். “நிலம் வாங்கவென நான் கடன் வாங்கியிருந்தேன். அதை அடைப்பதற்காக இந்த வேலையை செய்ய திட்டமிட்டிருக்கிறேன்,” என்கிறார் அவர்.
*****
“மேடம், உங்களுக்கு வாகனம் ஓட்ட தெரியுமா?”
ஷப்னம்பானு ஷெகாதலி ஷைக்கிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி அது. அகமதாபாத்தின் 26 வயது பெண் கேப் டிரைவரான அவர், நான்கு வருடங்களுக்கு மேல் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அத்தகைய கேள்வியை அவர் பொருட்படுத்துவதில்லை.
கணவர் இறந்தபிறகு அவர் இந்த வேலையில் சேர்ந்தார். “சொந்தமாக நான் சாலையை கூட கடந்ததில்லை,” என்கிறார் அவர் கடந்த நாட்களை நினைவுகூர்ந்து. முதலில் கணிணி வழியாக பயிற்சி பெற்று பின் சாலையிலும் பயிற்சி எடுத்தார் ஷப்னம்பானு. ஒரு குழந்தைக்கு தாயான அவர் 2018ம் ஆண்டில் ஒரு காரை வாடகைக்கு எடுத்து, செயலி சார்ந்த கேப் சேவையில் இணைந்தார்.
“இப்போது நான் நெடுஞ்சாலையில் ஓட்டுகிறேன்,” என புன்னகைக்கிறார்.
வேலைவாய்ப்பின்மை தரவு களின்படி, 24.7 சதவிகித பெண்கள் வேலையற்று இருக்கின்றனர். ஆண்களை காட்டிலும் அதிகம். ஷப்னம்பானு விதிவிலக்குகளில் ஒருவர். கிடைக்கும் வருமானத்தில் மகளை படிக்க வைப்பதில் பெருமை கொள்கிறார்.
பாலினம் பல பயணிகளை ஆச்சரியப்படுத்தினாலும் 26 வயதான அவருக்கு வேறு பல பிரச்சினைகள் இருக்கின்றன. “சாலையில், கழிப்பறைகள் தூரத்தில் இருக்கின்றன. பெட்ரோல் நிலையங்களில் அவை பூட்டப்பட்டிருக்கின்றன. ஆண்கள் மட்டுமே இருப்பதால் அவர்களிடம் சாவி கேட்கவும் சங்கடமாக இருக்கிறது.” Women Workers in the Gig Economy in India என்கிற ஆய்வு, கழிவறைகள் இல்லை என்கிற பிரச்சினையைத் தாண்டி, பெண் ஊழியர்கள் ஊதிய இடைவெளியையும் குறைந்த பணியிட பாதுகாப்பையும் கொண்டிருக்கின்றனர் என்கிறது.
அழுத்தம் அதிகமாகும்போது, அருகாமையிலுள்ள கழிவறைகளை ஷப்னம்பானு கூகுளில் தேடி பிறகு ஒரு ரெண்டு, மூன்று கிலோமீட்டர்கள் ஓட்டி சென்று இடத்தை அடைகிறார். “குறைவாக நீர் குடிப்பதை தவிர்த்து வேறு வழி ஏதுமில்லை. ஆனால் அப்படி செய்தால், இந்த வெயிலில் தலை கிறுகிறுத்துப் போகிறது. மயக்கம் வந்து விடுகிறது. காரை ஓரமாக சற்று நேரம் நிறுத்திவிடுவேன்,” என்கிறார் அவர்.
கொல்கத்தாவில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாக செல்லும்போது ரமேஷுக்கும் இது பிரச்சினையாக இருக்கிறது. “தினசரி இலக்கை முடிப்பதற்கான பதற்றத்தில், இவை முதன்மை பிரச்சினையாக இல்லாமல் போய்விடுகிறது,” என்கிறார் அவர் கவலையுடன்.
“கழிவறைக்கு ஒரு ஓட்டுநர் செல்ல வேண்டியிருக்கும்போது, ஒரு சவாரிக்கான அழைப்பு வந்தால், அந்த அழைப்பை நிராகரிக்க அவர் பலமுறை யோசிக்க வேண்டியிருக்கிறது,” என்கிறார் தெலெங்கானா கிக் மற்றும் நடைபாதை ஊழியர் சங்கத்தின் (TGPWU) நிறுவனத் தலைவரான ஷைக். ஒரு அழைப்பை ஏற்க மறுத்தால், செயலியில் நீங்கள் கீழிறக்கப்படுவீர்கள். தண்டனை கொடுக்கப்படும் அல்லது ஓரங்கட்டப்படுவீர்கள். முகமறியா ஒரு விஷயத்தை நோக்கி நீங்கள் பிரச்சினை குறித்த கேள்வி கேட்டு விட்டு, நல்லது நடக்குமென நம்ப மட்டும்தான் முடியும்.
India's Roadmap for SDG 8 என்கிற நிதி அயோக்கின் அறிக்கை, “இந்தியாவின் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 92 சதவிகிதம் பேர் அமைப்புசாரா துறையில் வேலை செய்கின்றனர். சமூக பாதுகாப்பு எதுவும் அவர்களுக்கு கிடையாது…” என சுட்டிக் காட்டுகிறது. ஐநா சபையின் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கான இலக்குகள் - 8, பிற விஷயங்களுடன் சேர்த்து “தொழிலாளர் உரிமை மற்றும் பாதுகாப்பான வேலைச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்,” என வலியுறுத்துகிறது.
நாடாளுமன்றம் சமூகப் பாதுகாப்பு விதிகள் சட்டத்தை 2020ல் நிறைவேற்றி, 2029-30ல் மும்மடங்காகி 23.4 மில்லியன் எண்ணிக்கையை எட்டவிருக்கும் கிக் மற்றும் நடைபாதை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை வகுக்க கேட்டிருக்கிறது.
*****
இக்கட்டுரைக்காக பேசிய பலரும் “முதலாளியிடமிருந்து” விடுதலை பெற்றுவிட்ட உணர்வை வெளிப்படுத்தினார்கள். பாரியுடன் பேசிய முதல் நிமிடத்தில், பெங்களூருவில் பார்த்த துணி விற்பனையாளர் வேலையைக் காட்டிலும் இந்த வேலை ஏன் தனக்கு பிடித்திருக்கிறது என சுந்தர் பேசினார். “எனக்கு நான்தான் முதலாளி. என் நேரத்துக்கு நான் வேலை பார்க்கலாம். இப்போது கிளம்ப வேண்டுமென நினைத்தாலும் என்னால் முடியும்.” ஆனாலும் கடனை அடைத்ததும் நிலையான, பளு இல்லாத ஒரு வேலையை தேட வேண்டுமென்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
ஷம்புநாத் திரிபுராவை சேர்ந்தவர். பேசுவதற்கு அதிக நேரம் அவரிடம் இல்லை. புனேவின் பரபரப்பான உணவகப் பகுதி ஒன்றுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். சொமேட்டோ மற்றும் ஸ்விகி ஏஜெண்ட்கள் பைக்குகளில் உணவு பார்சல் வாங்க வரிசையாகக் காத்திருக்கின்றனர். கடந்த நான்கு வருடங்களாக அவர் புனேவுக்கு செல்லவில்லை. மராத்தி மொழியை சரளமாக பேசுகிறார்.
சுந்தரைப் போலவே, இவருக்கும் இந்த வேலைதான் பிடித்திருக்கிறது. இதற்கு முன் ஒரு வணிக அங்காடியில் 17,000 ரூபாய் ஊதியத்தில் அவர் வேலை செய்தார். “இந்த வேலை நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். நண்பர்கள் ஒன்றாக வசிக்கிறோம். நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்,” என்கிறார் ஷம்புநாத்.
கோவிட்
தொற்றின் ஊரடங்கு காலத்தில்தான் ருபாலி கோலி ஒப்பனைக் கலைஞர் வேலைகளை முயற்சித்து பார்க்கத்
தொடங்கினார். “நான் பணிபுரிந்த அழகு நிலையத்தில் எங்களின் சம்பளங்களை பாதியாக குறைத்தனர்.
எனவே நானே ஒப்பனை வேலை செய்வதென முடிவெடுத்தேன்.” செயலி சார்ந்த வேலையில் சேர அவரும்
நினைத்தார். ஆனால் சேர வேண்டாமென முடிவெடுத்தார். “நான் கடும் உழைப்பை செலுத்தி, ஒப்பனை
பொருட்களையும் கொண்டு வந்து, பயணத்துக்கும் செலவு செய்கையில், யாரோ ஒருவருக்கு ஏன்
40 சதவிகித வருமானத்தை கொடுக்க வேண்டும்? என்னுடைய 100 சதவிகிதத்தை கொடுத்து விட்டு
60 சதவிகிதத்தை மட்டும் திரும்பப் பெற நான் விரும்பவில்லை.”
32 வயதாகும் அவர், மும்பையின் மத் தீவிலுள்ள அந்தேரி தாலுகாவைச் சேர்ந்த மீனவக் குடும்பத்தை சேர்ந்தவர். பெற்றோரையும் கணவரையும் கணவர் வீட்டாரையும் சுயாதீன ஒப்பனைக் கலைஞர் பணி செய்து அவர் பார்த்துக் கொள்கிறார். “இதில்தான் என் சொந்த வீட்டை கட்டினேன். மணம் முடித்தேன்,” என்கிறார். அவரின் குடும்பம் கோலி சமூகத்தை சேர்ந்தது. மகாராஷ்டிராவில் சிறப்பு பிற்படுத்தப்பட்ட சாதி அது.
கிட்டத்தட்ட எட்டு கிலோ ட்ராலி பேகை இழுத்தபடி மூன்று கிலோ பையை முதுகில் சுமந்து கொண்டு நகரத்தில் பயணிக்கிறார் ருபாலி. அடுத்தடுத்த பணிகளுக்கு இடையில் வீட்டு வேலை செய்யவும் நேரம் ஒதுக்கிக் கொள்கிறார். வீட்டுக்கு மூன்று வேளை உணவை சமைப்பார். முடிவாக அவர், “தனக்கு தானே முதலாளியாக ஒருவர் இருக்க வேண்டும்,” என்கிறார்.
இக்கட்டுரை எழுதப்பட ஹைதராபாத்திலிருந்து
அம்ருதா கொசுருவும்
ராய்ப்பூரிலிருந்து
புருசோத்தம் தாகூரும்
அகமதாபாத்திலிருந்து
உமேஷ் சொலாங்கியும்
கொல்கத்தாவிலிருந்து
ஸ்மிதா கடோரும்
பெங்களூருவிலிருந்து
ப்ரிதி டேவிடும்
புனேவிலிருந்து
மேதா கலேவும்
மும்பையிலிருந்து
ரியா பெல்லும்
பங்களித்திருக்கின்றனர். ஆசிரியர்
குழு ஆதரவை
மேதா கலேவும்
,
பிரதிஷ்தா பாண்டியாவும் ஜோஷுவா போதிநெத்ராவும் சன்விதி ஐயரும்,
ரியா பெல்லும் ப்ரிதி டேவிடும் அளித்திருக்கின்றனர்
.
முகப்பு படம்: ப்ரிதி டேவிட்
தமிழில் : ராஜசங்கீதன்