இரண்டு புல்டோசர்கள் வந்த போது மதியம் ஆகியிருந்தது. பள்ளியின் மைதானத்தில் இருந்த குழந்தைகள் "புல்டோசர், புல்டோசர், சார்... சார்..." என்று கூச்சலிட்டனர். அவர்களின் அழுகையைக் கேட்டு பள்ளியின் முதல்வர் பிரகாஷ் பவாரும் நிறுவனர் மதின் போசாலேவும் பள்ளியின் அலுவலகத்திலிருந்து ஓடி வந்தனர்.
"நீங்கள் எதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள்", என்று பவார் அவர்களைக் கேட்டார். "நாங்கள் நெடுஞ்சாலை அமைப்பதற்காக இந்த வகுப்பறைகளை இடிக்க விரும்புகிறோம். தயவு செய்து ஒதுங்கி இருங்கள்", என்று ஒரு புல்டோசரின் ஓட்டுனர் கூறினார். "ஆனால் எங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லையே", என்று போசாலே எதிர்ப்பு தெரிவித்தார். "இந்த உத்தரவு மேலிடத்திலிருந்து வந்துள்ளது (அமராவதி ஆட்சியாளர் அலுவலகத்திலிருந்து)", என்று அந்த ஓட்டுனர் கூறினார்.
பள்ளி ஊழியர்கள் விரைந்து பெஞ்சுகள் மற்றும் பச்சை நிற எழுதும் பலகைகளை வெளியே எடுத்து வந்தனர் மேலும் அவர்கள் தற்காலிக நூலகத்தையும் காலி செய்தனர் அதில் அம்பேத்கர், பூலே, காந்தி, உலக வரலாறு மற்றும் பலவற்றை பற்றிய மராத்தி மொழியிலான சுமார் 2,000 புத்தகங்கள் இருந்தன. இவை அனைத்தும் அருகில் உள்ள பள்ளி விடுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது. விரைவில் புல்டோசர்கள் இடிக்கத் தொடங்கின. ஒரு சுவர் அப்படியே தரையில் இடிந்து விழுந்து நொறுங்கியது.
பிரஷ்னாசின் ஆதிவாசி ஆசிரமசாலை (கேள்விக்குறி ஆதிவாசி தங்கும் விடுதி பள்ளி)யில் ஜூன் 6ஆம் தேதி அன்று இப்பணி இரண்டு மணி நேரம் தொடர்ந்தது. விடுதியில் தங்கியிருந்த குழந்தைகள் -ஏப்ரல் முதல் அங்கு கோடை விடுமுறையில் தங்கியிருந்தவர்கள் - தங்கள் வகுப்பறைகள் இடிக்கப்படுவதை பார்த்தார்கள். "எங்களது பள்ளி ஜூன் 26 அன்று தொடங்கப்பட்டதா? ஏன் அவர்கள் இதைச் செய்கிறார்கள்?", என்று அவர்களில் சிலர் கேட்டனர்.












