பாரியிலுள்ள நாங்கள் இன்று மீண்டும் உலக மொழிபெயர்ப்பு நாளையும் உலகெங்கும் இருக்கும் செய்தித்தளங்களிலேயே சிறந்த எங்களின் மொழிபெயர்ப்புக் குழுவையும் ஒருங்கே கொண்டாடுகிறோம். எனக்குத் தெரிந்தவரை, உலகிலேயே பன்மொழி செய்தித்தளமாக விளங்குவது பாரிதான் எனக் கருதுகிறேன். இதில் தவறு இருப்பதாக யாரேனும் கருதி தங்களின் தரவை அளித்தாலும் நான் சந்தோஷப்படுவேன். 14 மொழிகளில் பாரியின் கட்டுரைகள் பிரசுரமாக உதவும் 170 மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்ட அற்புதமானக் குழுவுக்கு நன்றிகள். சில ஊடக நிறுவனங்கள் 40 மொழிகளில் கூட பிரசுரிக்கின்றன. ஆனால் அங்கு வலுவான படிநிலை இருக்கிறது. சில மொழிகள் பிறவற்றைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே சமத்துவத்தை அங்கு எட்ட முடிகிறது.
மேலும் நாங்கள் ஒவ்வொரு இந்திய மொழியும் உங்களின் மொழி என்கிற கொள்கையுடன் பிரசுரிக்கிறோம். எல்லா மொழிகளையும் இக்கொள்கை சமத்துவமாக பாவிக்க வைக்கிறது.ஒரு மொழியில் ஒரு கட்டுரை பிரசுரமாகும்போது அது மற்ற 14 மொழிகளிலும் பிரசுரிக்கப்பட வேண்டுமென்பது எங்களின் தீர்மானகரமான முடிவு. இந்த வருடத்தில் சட்டீஸ்கரி மொழியும் பாரிக் குடும்பத்துடன் இணைந்திருக்கிறது. அடுத்ததாக போஜ்புரி மொழி இணையவிருக்கிறது.
இந்திய மொழிகளை உயர்த்துவது மொத்த சமூகத்துக்கும் அவசியம் என நாங்கள் நம்புகிறோம்.ஒவ்வொரு மூன்று நான்கு கிலோமீட்டர்களுக்கும் நீரின் ருசி மாறுபடுவது போல, ஒவ்வொரு 12-15 கிலோமீட்டர்களுக்கும் மொழி வித்தியாசப்படும் என்கிற சொல்லாடல் பிரயோகம் நாட்டின் மொழிப் பன்முகத்தன்மையை உணர்த்துவிதமாக உருவானதுதான்.
ஆனால் அதைக் கொண்டு மட்டும் நாம் இனி மனநிறைவு கொள்ள முடியாது. கிட்டத்தட்ட 800 மொழிகள் உயிர்ப்புடன் இருக்கும் இந்த நாட்டில் கடந்த 50 வருடங்களில் மட்டும் 225 மொழிகள் அழிந்திருக்கின்றன என மக்களின் மொழிகளுக்கான கணக்கெடுப்பு சொல்லும் சூழலில் நாம் நிச்சயமாக மனநிறைவு கொள்ள முடியாது. உலகில் பேசப்படும் மொழிகளில் 90 - 95 சதவிகித மொழிகள் இந்த நூற்றாண்டின் இறுதியில் அழிந்துவிடும் அல்லது அழியும் கட்டத்தை எட்டியிருக்கும் என ஐநா சபை சொல்லும் நிலையில் மனநிறைவுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. உலகத்தில் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு பழங்குடி மொழி அழியும் நிலையில் நிச்சயமாக மனநிறைவுக்கு கொள்ள முடியாது.
ஒரு மொழி அழியும்போது, நம் சமூகத்தின், கலாசாரத்தின், வரலாற்றின் ஒரு பகுதியும் அழிந்து போகிறது. அதோடு சேர்ந்து நினைவுகளும் இசையும் புராணங்களும் பாடல்களும் கதைகளும் கலையும் செவிவழி உலகமும் வாய்மொழிப் பாரம்பரியமும் வாழ்க்கைமுறையும் அழிந்து போகின்றன. உலகத்துடன் அச்சமூகம் தொடர்பு கொள்ளக் கூடிய திறன், அடையாளம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் இழப்பாக அது மாறிவிடுகிறது. நாட்டில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பன்முகத்தன்மைக்குமான இழப்பாக அது ஆகிவிடும். நம் சுற்றுச்சூழலும் வாழ்வாதாரங்களும் ஜனநாயகமும் மொழிகளின் எதிர்காலத்துடன் மிக நுட்பமாக தொடர்பு கொண்டிருக்கின்றன. மொழிகள் கொண்டு வரும் அபரிமிதமான வகைமைகளின் மதிப்பு பொருட்படுத்தப்பட்டதே இல்லை. எனினும் அவற்றின் நிலை நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டதுமில்லை.
இந்திய மொழிகளை கட்டுரைகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலமாக பாரி கொண்டாடுகிறது. அவற்றின் மொழிபெயர்ப்புகளின் வழியாகக் கொண்டாடுகிறோம். கிராமப்புற இந்தியாவின் தூரப்பகுதிகளில் வசிக்கும் விளிம்புநிலைச் சமூகங்களிலிருந்து அவரவர் மொழிகளில் பல பொக்கிஷங்கள் எங்களை வந்தடைந்திருக்கின்றன. புது எழுத்துகள், சொல்லாடல்கள் ஆகியவற்றைக் கொண்ட பல நிலப்பரப்புகளைச் சேர்ந்த இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்க எங்களின் மொழிபெயர்ப்பாளர் குழு பணிபுரிகிறது. இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மட்டும் மொழிபெயர்க்கப்படும் ஒரு வழிப் பாதை அல்ல இது. பாரியின் மொழியுலகம் பன்முகத்தன்மை பற்றிய பரந்துபட்ட லட்சியத்தைக் கொண்டிருக்கிறது.
இந்த நாட்டின் வியப்புக்குரிய வளத்தின் ஒரு சிறு பிரதிபலிப்பாக இன்று எங்களின் மொழிபெயர்ப்புக் குழுவினர், நாங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் மொழிகளான அசாமி, வங்காளி, சட்டீஸ்கரி, குஜராத்தி, கன்னம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சிறு முத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். இந்த பன்முகத்தன்மையில் ஒற்றுமை, வேற்றுமையில் மகிழ்ச்சியை நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறோம்.
தமிழில் இங்கு சுப்ரமணிய பாரதி, வேற்றுமையில் ஒற்றுமை பற்றி பூனைகளை உதாரணமாகக் கொண்டு ‘முரசு’ என்கிற கவிதையில் பாடுகிறார்.
பூனை
வெள்ளை நிறத்தொரு பூனை
– எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப்
பூனை, – அவை
பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி
– கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி
– வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
– அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்
– இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப்
பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக
ளெல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல்
காணீர்
கவிஞர்: சுப்ரமணிய பாரதி
மூலம்: பாரதியார் கவிதைத் தொகுப்பு