மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில், தண்டவாளத்தில் தூங்கிய 16 மத்தியப்பிரதேச தொழிலாளர்கள் ரயிலேறி உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களை நடந்து செல்லும் நிலைக்கு தள்ளியவர்கள் யாரென கேட்க வேண்டிய நாம், ஏன் தொழிலாளர்கள் தண்டவாளத்தில் தூங்கினார்கள் என கேட்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரயிலேறி இறந்த தொழிலாளர்களின் பெயர்களை எத்தனை ஆங்கில நாளிதழ்கள் குறிப்பிட்டன? அவர்கள் முகங்களற்றவர்களாகவும் பெயர்களற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அதுவே ஏழைகளிடம் நாம் கொண்டிருக்கும் அணுகுமுறை. இதுவே விமான விபத்து என்றால் சேவைக்கு என உதவி எண்கள் எல்லாம் இருந்திருக்கும். 300 பேர் இறந்திருந்தாலும் கூட எல்லாருடைய பெயர்களையும் செய்தித்தாள்கள் குறிப்பிட்டிருக்கும். மத்தியப்பிரதேசத்திலிருந்து வந்த 16 ஏழைகளை பற்றி, அதிலும் 6 கோண்ட் ஆதிவாசிகள் இருந்த குழுவை பற்றி யாருக்கென்ன கவலை? அந்த தண்டவாளங்களை தங்களின் வீடுகளுக்கு செல்லும் வழிகாட்டிகளாக நினைத்து அவர்கள் நடந்தார்கள். ஏதோவொரு ஸ்டேஷனிலிருந்து ரயிலேறி வீட்டுக்கு சென்று விடலாமென நம்பியிருந்தார்கள். அவர்கள் தண்டவாளத்தில் தூங்கியதற்கு காரணம் சோர்வு. அந்த தண்டவாளத்தில் ரயில்கள் வராது என அவர்கள் நினைத்திருக்கலாம்.

உழைப்புச்சக்தி பெரியதாக இருக்கும் இந்தியா போன்ற நாட்டில், தொழிலாளர்களுக்கு அரசுகள் தரும் சேதி என்னவென நினைக்கிறீர்கள்?

130 கோடி பேர் வாழும் ஒரு நாட்டில் அனைவரும் ஊரடங்குக்கு தயாராக நான்கு மணி நேரம் மட்டும்தான் கொடுத்தோம். ஆட்சிப்பணியில் பணிபுரிந்த நம் பெருமைக்குரிய  M.G.தேவசகாயம் கூறுகையில், ”ஒரு மிகப்பெரும் களத்தில் இறக்கப்படும் சிறு காலாட்படைப் பிரிவுக்கு கூட அதை பற்றிய அறிவிப்பு நான்கு மணி நேரங்களுக்கும் முன்னரே கொடுக்கப்படும்,” என்கிறார்.  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செய்வதில் நமக்கு ஏற்பு இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் கிளம்பிச் செல்வதற்கான தார்மீகக் காரணம் வலுவாக இருக்கிறது. அவர்களுக்கு தெரியும். நாம் எந்த அளவுக்கு நம்ப முடியாதவர்களாகவும் அவர்களை பொருட்படுத்தாதவர்களாகவும் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறோம். நம்மை போன்ற நடுத்தர வர்க்க முதலாளிகளும் ஆலை முதலாளிகளும் அரசுகளும் அவர்களுக்கு எத்தனை கொடூரமாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் நடப்பதற்கு தடை விதிப்பதற்கான சட்டங்களின் வழியாக மேலும் அவற்றை நாம் உறுதிப்படுத்துகிறோம்.

நீங்கள் பீதியை உண்டாக்கினீர்கள். பல லட்சம் பேர் நெடுஞ்சாலையில் இருக்கும்போது நீங்கள் மொத்த நாட்டையும் குழப்பத்துக்குள் தள்ளினீர்கள். மூடப்பட்டிருந்த திருமண மண்டபங்களையும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் சமூகக் கூடங்களையும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வீடில்லாதவர்களுக்கான புனரமைப்பு மையங்களாக எளிமையாக மாற்றியிருக்க முடியும். ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான தனிமை சிகிச்சைக்கு நட்சத்திர ஓட்டல்களை பயன்படுத்தப்படும் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டோம்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில் ஏற்பாடு செய்கையில் முழுக் கட்டணம் விதிக்கிறோம். குளிர்சாதன ரயில்களை அனுப்பி ராஜ்தானி வகுப்பு கட்டணமான 4500 ரூபாயை கட்டணமாக விதிக்கிறோம். அவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன்கள் இருக்குமென்ற யூகத்தில், பயணச்சீட்டுகளை இணையத்தில் பதிவு செய்யலாம் என அறிவித்து நிலைமையை இன்னும் மோசமாக்கினீர்கள். சில பேர் மட்டும் பயணச்சீட்டுகள் பெறுகிறார்கள்.

பிறகு கர்நாடகாவில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஏனெனில் முதல்வர் கட்டுமான நிறுவன முதலாளிகளை சந்தித்துவிட்டார். அடிமைகள் தப்பிச் செல்கிறார்கள் என அவர்கள் சொல்லிவிட்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடிமைகளின் எழுச்சியை ஒடுக்கும் வேலையைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நாம் எப்போதும் ஏழைகளுக்கு ஒரு அணுகுமுறையையும் பிறருக்கு வேறொரு அணுகுமுறையையும் கொண்டிருக்கிறோம். அத்தியாவசிய சேவைகளை நீங்கள் பட்டியலிடும்போது மருத்துவர்களுக்கு அடுத்து ஏழை மக்களே அத்தியாவசியமானவர்கள் என்பதை கண்டுபிடிக்கிறீர்கள்.  பல செவிலியர்கள் பணக்காரர்கள் கிடையாது. தூய்மைப் பணியாளர்களும் ASHA சுகாதார தன்னார்வலர்களும் அங்கன்வாடி ஊழியர்களும் மின்சார ஊழியர்களும் மின்சாரத் துறை தொழிலாளர்களும் ஆலைத் தொழிலாளர்களும் பணம் படைத்தவர்கள் கிடையாது. திடுமென இந்த நாட்டின் பணக்காரர்கள் எத்தனை அவசியமற்றவர்கள் என்ற உண்மை உங்களுக்கு புரிகிறது.

PHOTO • M. Palani Kumar ,  Jyoti Patil ,  Pallavi Prasad ,  Yashashwini & Ekta

இடப்பெயர்ச்சி பல ஆண்டுகளாக நடக்கிறது. அவர்களின் நிலை ஊரடங்குக்கு முன்னும் கூட கொடுமையாகத்தான் இருந்தது. புலம்பெயர் தொழிலாளர்களை நாம் நடத்தும் விதத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?

புலம்பெயர்பவர்கள் பல விதங்களில் இருக்கிறார்கள். இடப்பெயர்ச்சியில் இருக்கும் வர்க்க வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சென்னையில் பிறந்தவன். தில்லியில் உயர்கல்வி படித்தேன். அங்குதான் நான்கு வருடங்கள் வாழ்ந்தேன். பிறகு மும்பைக்கு வந்தேன். இங்கு 36 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு இடப்பெயர்வும் எனக்கு ஆதாயம் கொடுப்பதாகவே இருந்தது. ஏனெனில் நான் குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தையும் சாதியையும் சார்ந்தவன். எனக்கென சமூக மூலதனமும் தொடர்புகளும் இருக்கிறது.

நீண்ட காலத்துக்கு புலம்பெயர்பவர்களும் இருக்கிறார்கள். ஓரிடத்திலிருந்து கிளம்பி இன்னொரு இடத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுபவர்கள்.

பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் புலம்பெயர்பவர்கள் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு மகாராஷ்டிராவின் கரும்பு விவசாயிகள் ஐந்து மாதங்களுக்கு மட்டும் கர்நாடகாவுக்கு இடம்பெயர்வார்கள். கொஞ்ச காலத்துக்கு அங்கு வேலை பார்த்துவிட்டு பிறகு மீண்டும் கிராமங்களுக்கு திரும்புவார்கள். கலஹந்தியிலும் புலம்பெயர்பவர்கள் இருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் வரும் காலத்தில் ராய்ப்பூருக்கு சென்று கொஞ்ச காலம் ரிக்‌ஷா ஓட்டும் வேலை பார்ப்பார்கள். ஒடிசாவின் கொராப்புட்டில் இருப்பவர்கள் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயநகரத்துக்கு சென்று செங்கல் சூளைகளில் சில மாதங்களுக்கு வேலை பார்ப்பார்கள்.

இன்னும் பல வித குழுக்களும் இருக்கின்றன. ஆனால் நாம் அதிகம்  கவலைப்பட வேண்டியது, ‘ஊர் ஊராக செல்பவர்’ என நாம் அழைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை பற்றிதான். ஊர் ஊராக செல்லும் தொழிலாளருக்கு சென்றடைய வேண்டிய இடமென ஒன்று இருக்காது. ஒரு ஒப்பந்தக்காரருடன் வருவார். மும்பையின் ஒரு கட்டுமான தளத்தில் 90 நாட்களுக்கு வேலை பார்ப்பார். அதற்கு பிறகு அவர்களுக்கு ஒன்றும் இருக்காது. ஒப்பந்தக்காரர் அவர்களை மகாராஷ்டிராவின் வேறொரு பகுதியில் இருக்கும் ஒருவரை தொடர்பு கொண்டு பேருந்தில் அனுப்பி வைப்பார். இது இப்படியே முடிவுறாமல் தொடரும். முடிவிலாத பாதுகாப்பின்மையுடன் கூடிய மிக மோசமான வாழ்க்கை. அத்தகையோர் பல கோடி பேர் இருக்கின்றனர்.

புலம்பெயர் தொழிலாளரின் நிலை எப்போது மோசமடையத் தொடங்கியது?

இடப்பெயர்ச்சிகள் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 28 வருடங்களில் அவை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஒரு முக்கியமான குறிப்பு வருகிறது. 2001லிருந்து 2011ம் ஆண்டு வரைதான் சுதந்திர இந்தியாவின் அதிகபட்ச இடம்பெயர்ச்சிகள் நடந்திருப்பதாக அது குறிப்பிடுகிறது.

மேலும் 1921ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக, நகரங்களில் அதிகரிக்கும் மக்கள் தொகையின் விகிதம் கிராமங்களில் அதிகரிக்கும் மக்கள் தொகையை விட அதிகமாக இருப்பதாக 2011 கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. பிறப்பினால் வளரும் மக்கள்தொகை விகிதம் நகரங்களில் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் வந்து சேரும் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது.

2011ம் ஆண்டு வெளியான மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிடும் இத்தகவல்களை முன்வைத்து எடுக்கப்பட்ட நேர்காணலோ வல்லுனர்கள் கொண்டு நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியோ ஒரு தொலைக்காட்சியிலேனும் வந்திருக்கிறதா என தேடிப் பாருங்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமத்திலிருந்து நகரத்துக்கும் கிராமத்திலிருந்து கிராமத்துக்கும் இடம்பெயரும் தீவிரத்தை பற்றி எத்தனை பேர் விவாதித்திருக்கிறார்கள்?

PHOTO • Parth M.N.
PHOTO • Varsha Bhargavi

இடப்பெயர்ச்சிக்கான அடிப்படை காரணமான கிராமப்புறத் துயரங்களை பேசாத இடப்பெயர்ச்சி உரையாடல்கள் எதுவும் முழுமை கொள்ள முடியாது, இல்லையா?

நாம் விவசாயத்தை நொறுக்கிவிட்டோம். பல கோடி பேரின் வாழ்க்கைகள் உருக்குலைந்துவிட்டன. கிராமங்களில் இருக்கும் எல்லா வாழ்வாதாரங்களும் காட்டுத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. நாட்டிலேயே விவசாயத்துக்கு அடுத்தபடியான வேலைவாய்ப்பை கொடுப்பது கைத்தறி மற்றும் கைவினைத் தொழில்கள்தாம். படகு ஓட்டுபவர்கள், மீனவர்கள், கள் இறக்குபவர்கள், பொம்மை செய்பவர்கள், சாயத்தொழில் செய்பவர்கள் என ஒவ்வொரு வேலையும் ஒன்றன்பின் ஒன்றாக சரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கெல்லாம் வேறு என்ன வழி இருக்கிறது?

புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்ப நகரங்களுக்கு வருவார்களா என்று கூட சந்தேகம் எழுந்துவிட்டது. அவர்கள் ஏன் முதலில் நகரங்களுக்கு வந்தார்கள்?

கணிசமான எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்ப நகரங்களுக்கு வருவார்கள் என நம்புகிறேன். அதற்கு நீண்ட காலம் வேண்டுமெனில் ஆகலாம். கிராமங்களில் அவர்களுக்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் ரொம்ப காலத்துக்கு முன்பே நாம் அழித்துவிட்டோம். குறைகூலியில் வேலை பார்க்கும் பட்டாளத்தை உருவாக்குவதில் உறுதியாக இருந்தோம்.

பல மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

அரசியல் சாசனத்தையும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களையும் வலுவிழக்க வைக்கும் முயற்சியே அவசர சட்டம் ஆகும். அடுத்து, கொத்தடிமை முறைக்கான சட்டப்பூர்வமான அனுமதியாக அது இருக்கப்போகிறது. மேலும் உழைக்கும் நேரத்துக்கான விதிகளை ஒரு நூற்றாண்டுக்கு பின்னிழுத்துப் போகவிருக்கிறது. உலகில் இருக்கும் ஒவ்வொரு வகை உழைப்புக்கும் அடிப்படையாக எட்டு மணி நேர உழைப்பே மதிக்கப்படுகிறது.

குஜராத்தின் அறிவிப்பை பாருங்கள். அதிக நேர உழைப்புக்கு கூலி கிடையாது என சொல்கிறது. ராஜஸ்தான் அரசு, அதிக நேர உழைப்புக்கு கூலி கொடுப்பதாக சொல்லியிருக்கிறது. ஆனால் அதுவும் வாரத்துக்கு 24 மணி நேரங்கள் வரை மட்டும்தான். பணியாளர்கள் வாரத்தின் ஆறு நாட்களுக்கும் 12 மணி நேரங்கள் உழைக்க வேண்டும்.

இவை எல்லாமும் Factories சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஓர் ஊழியர் அதிகபட்சமாக, ஒரு வாரத்தில் மிகை நேர உழைப்பையும் சேர்த்து 60 மணி நேரங்கள் வரை வேலைக்கு அழைக்கலாம். ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் என கணக்கெடுத்துக் கொண்டால், மொத்தமாக 72 மணி நேரங்கள்.

முக்கியமாக மிகை நேர உழைப்பை ஊழியர்கள் வேண்டாம் என சொல்ல முடியாது. உழைக்கும் நேரம் அதிகரிக்கப்படும்போது உற்பத்தியும் அதிகமாகும் என நம்பப்படுகிறது. ஆனால் பல ஆய்வுகளுக்கு எதிரான நம்பிக்கை அது. கடந்த நூற்றாண்டில் பல ஆலைகள் எட்டு மணி நேர உழைப்பை ஏற்றதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது. பல ஆய்வுகள் மிகை நேர உழைப்பு கேட்கப்பட்டால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதாக தெரிவித்தன. மிகை நேர உழைப்பால் சோர்வும் களைப்பும் மட்டுமே மிஞ்சும். உற்பத்தி அதிகரிக்காது.

அது மட்டுமில்லாமல், இது அடிப்படை மனித உரிமையையே இல்லாமலாக்கும் விஷயம். இது உழைப்பை அடிமைப்படுத்துவது. நிறுவனங்களுக்கு கொத்தடிமை பிடித்துக் கொடுக்கும் தரகு வேலையைத்தான் அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் தலித்களையும் பழங்குடிகளையும் பெண்களையும் இது மிக அதிகமாக பாதிக்கும்.

இந்தியாவின் 93 சதவிகித தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் சாதாரணமாகவே கிடைப்பதில்லை. ஏனெனில் அவர்கள் முறைசாரா வேலைகள் பார்ப்பவர்கள். இப்போது நீங்கள், “மீதமிருக்கும் 7 சதவிகிதத்தின் உரிமையையும் அழிக்கலாம் வாருங்கள்” எனக் கூறுகிறீர்கள். தொழிலாளர் சட்டங்களில் கொண்டு வரும் மாற்றம் மூலதனத்தை கொண்டு வரும் என அரசுகள் வாதிடுகின்றன. ஆனால் மூலதனம், சிறந்த உள்கட்டமைப்பு, நல்ல நிலை மற்றும் நிலையான சமூகம் ஆகியவை இருக்கும் இடங்களுக்குதான் வரும். உத்தரப்பிரதேசம் அப்படியான ஒரு மாநிலமாக இருந்திருந்தால் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்திருக்க மாட்டார்கள்.

PHOTO • Guthi Himanth ,  Amrutha Kosuru ,  Sanket Jain ,  Purusottam Thakur

இந்த நடவடிக்கையின் விளைவு என்னவாக இருக்கும்?

உத்தரப்பிரதேசமும் மத்தியப்பிரதேசமும் ஏற்கனவே மூன்று வருடங்களாக பல தொழிலாளர் சட்டங்களை நிறுத்திதான் வைத்திருக்கின்றன. மூன்று, நான்கு சட்டங்களை மட்டும், அவை கொண்டிருக்கும் சட்டப்பூர்வமான சிக்கல்களினால் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள். எவ்வளவு மோசமான நிலை இருந்தாலும் பரவாயில்லை, தொழிலாளர்கள் உழைக்க வேண்டுமென நீங்கள் சொல்கிறீர்கள். மக்களை மனிதத்தன்மையற்று நடத்துகிறீர்கள். காற்றோட்டத்துக்கும் கழிவறைக்கும் இடைவேளைக்கும் கூட அவர்களுக்கு உரிமை இல்லையென சொல்கிறீர்கள். இது முதலமைச்சர்கள் கொண்டு வருகிற அவசரச்சட்டம். அதற்கு பின்னால் எந்தவித சட்டமுறையும் கிடையாது.

வருங்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

உழைப்பவர்களின் நிலையை நீங்கள் நிச்சயமாக உயர்த்த வேண்டும். கொள்ளை நோய் அவர்களை இந்தளவுக்கு பாதிப்பதற்கு காரணம் இச்சமூகம் கொண்டிருக்கும் மிகப் பெரிய சமத்துவமின்மைதான். நாம் செய்து கொண்டிருப்பது என்ன தெரியுமா? சர்வதேச அளவில் நாம் ஒப்புக் கொண்டிருக்கும் உழைப்புக்கான விதிமுறைகளை மீறிக் கொண்டிருக்கிறோம்.

பி.ஆர்.அம்பேத்கர் இதை தெளிவாக புரிந்துகொண்டார். அரசாங்கங்களுடன் மட்டும் நாம் பேசி பிரயோஜனமில்லை என்பதை தெரிந்து கொண்டார். தொழில்களின் கருணையில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் நாம் பேச வேண்டும். அவர் கொண்டு வர உதவிய, அடித்தளம் கட்ட பயன்படுத்திய சட்டங்களைத்தான் இன்று அரசுகள் ரத்து செய்கின்றன.

எல்லா மாநில அரசுகளிலும் தொழிலாளர் நலத்துறை என ஒன்று இருக்கிறது. அதனுடைய பங்கு என்னவாக இருந்திருக்க வேண்டும்?

மாநிலத்தில் இருக்கும் தொழிலாளர் நலத்துறையின் பங்கு தொழிலாளர் உரிமையை பாதுகாப்பதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் உங்களின் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரே நிறுவனங்கள் சொல்வதை கேட்கும்படி தொழிலாளர்களுக்கு சொல்கிறார். ஏதொவொரு விஷயத்தை மாற்ற வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களின் சமூக ஒப்பந்தத்தை நீங்கள் மாற்ற வேண்டும். பூமியிலேயே பெருமளவுக்கு சமத்துவமின்மை நிறைந்திருக்கும் சமூகத்தை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை எனில், அதை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அது இன்னும் மோசமாகும். மிக வேகமாக மோசமாகும்.

வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளர்களில் பலர் இளைஞர்கள். கோபத்துடன் திரும்புகிறார்கள். நாம் ஓர் எரிமலை மீது உட்கார்ந்திருக்கிறோமா?

எரிமலை வெடித்துக் கொண்டிருக்கிறது. நாம் அதை பார்க்க விரும்பவில்லை. அரசுகளும் ஊடகங்களும் ஆலை முதலாளிகளும் நாமும் கொண்டிருக்கும் போலித்தனத்தை பாருங்கள்.

மார்ச் 26ம் தேதி வரை புலம்பெயர் தொழிலாளரை பற்றி நமக்கு தெரியாது. திடுமென பல கோடி பேரை தெருக்களில் பார்க்கிறோம். நமக்கு கஷ்டம் புரிகிறது. ஏனென்றால் நமக்கு நடக்க வேண்டிய வேலைகள் நடக்கவில்லை. மார்ச் 26ம் தேதி வரை நாம் கவலைப்படவே இல்லை. அவர்களை மனிதர்களாகவோ சம உரிமைகள் பெற்றவர்களாகவோ கூட நாம் மதிக்கவில்லை. ஒரு பழமொழி இருக்கிறது. ஏழைக்கு கல்விக்கு கிடைத்துவிட்டால், பணக்காரன் பல்லக்கு தூக்கிகளை இழந்துவிடுவான். திடீரென நமக்கான பல்லக்கு தூக்கிகளை நாம் இழந்துவிட்டோம்.

PHOTO • Sudarshan Sakharkar
PHOTO • Sudarshan Sakharkar

இடப்பெயர்ச்சிகள் குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் எப்படி பாதிக்கிறது?

குறிப்பாக அது பெண்களுக்கு குழந்தைகளுக்கும் பெரும் நாசத்தை உண்டாக்குகிறது. எங்கெல்லாம் சத்து குறைபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் பெண்களும் குழந்தைகளும்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் அவர்கள் ஆரோக்கியத்தில், எளிதில் பாதிக்கப்படும் தன்மையில் இருக்கிறார்கள். இளம்பெண்கள் அடையும் பாதிப்புகளை பற்றி நாம் யோசித்துக் கூட பார்ப்பதில்லை. நாட்டின் பல கோடி பெண் குழந்தைகளுக்கு இலவச மாதவிடாய் நேப்கின்கள் பள்ளிகளில் கொடுக்கப்படுவதுண்டு. திடுமென பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அவர்களுக்கு மாற்று வழிகள் கூட கிடையாது. சுகாதாரமற்ற வழிகளை பல கோடி பெண்கள் நாடுகின்றனர்.

வீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரும் இடர்ப்பாடுகளை பற்றி?

புலம்பெயர் தொழிலாளர்கள் எப்போதுமே நெடுந்தூரம் நடந்திருக்கிறார்கள். உதாரணமாக, குஜராத்தின் நடுத்தர வர்க்க முதலாளிகளிடமோ ஆலைகளிலோ வேலை பார்த்த தொழிலாளர்கள் தெற்கு ராஜஸ்தானை நோக்கி நடந்து செல்வார்கள். ஆனால் அவர்கள் அதை வேறு சூழல்களில் செய்திருக்கிறார்கள்.

40 கிலோமீட்டர்கள் நடப்பார்கள். பிறகு ஒரு சாலையோர உணவகத்திலோ டீக்கடையிலே நிற்பார்கள். அங்கு வேலை பார்த்துவிட்டு உணவு பெற்றுக் கொள்வார்கள். காலையில் கிளம்புவார்கள். அடுத்த பெரிய பேருந்து நிலையத்தில் அதையே அவர்கள் செய்வார்கள். வீடு திரும்பும்போதும் அவர்கள் உழைத்து சம்பாதிப்பார்கள். இப்போது அந்த இடங்களெல்லாம் மூடப்பட்டுவிட்டன. அவர்களுக்கு குடிநீரும் உணவும் கிடைக்காது. வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாவார்கள்.

அவர்களின் நிலையை மேம்படுத்த எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

வளர்ச்சிவாதத்திலிருந்து முழுமையாக விலக வேண்டும். சமத்துவமின்மையை பெரியளவில் தாக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் தவிப்புகள் சமமற்ற சூழலிலிருந்துதான் உருவாகின்றன.

உங்களின் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள ”எல்லாருக்குமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி” என்பதன் முக்கியத்துவத்தை உணராமல் உங்களால் அதை செய்ய முடியாது. மேலும் சமூகம் மற்றும் பொருளாதாரம் என்கிற வார்த்தைகள் அரசியல் என்கிற வார்த்தைக்கு முன்னால் சொல்லப்படுவது யதேச்சையானதும் அல்ல. சாசனம் எழுதியவர்களுக்கு அவற்றின் முக்கியத்துவத்தை பற்றிய தெளிவு இருந்ததாக நினைக்கிறேன். உங்களின் சாசனமே உங்களுக்கு வழியை காட்டுகிறது.

இந்தியாவின் மேட்டுக்குடியும் அரசும் மீண்டும் பழைய பாணி வாழ்க்கைக்கு திரும்பி விடலாமென்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை இன்னும் கொடுமையான ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் மட்டுமே வழிவகுக்கப்போகிறது.

முகப்புப்படம்: சத்யபிரகாஷ் பாண்டே

இந்த நேர்காணல் Firstpost-ல் மே 13, 2020 அன்று பிரசுரமானது.

தமிழில்: ராஜசங்கீதன்.

Parth M.N.

पार्थ एम एन हे पारीचे २०१७ चे फेलो आहेत. ते अनेक ऑनलाइन वृत्तवाहिन्या व वेबसाइट्ससाठी वार्तांकन करणारे मुक्त पत्रकार आहेत. क्रिकेट आणि प्रवास या दोन्हींची त्यांना आवड आहे.

यांचे इतर लिखाण Parth M.N.
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

यांचे इतर लिखाण Rajasangeethan