“100 நாட்கள் இல்லை, இதுவரை வெறும் 50 நாட்களே இந்த ஆண்டு. அவ்வளவுதான்“ என்று ஆர். வனஜா கூறுகிறார். பங்களாமேடு குடியிருப்பில் உள்ள வெள்ளிக்காத்தான் மரத்தடியின் நிழலில் அமர்ந்து 18 பெண்களும், 2-3 ஆண்களும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் நூறு நாள் வேலை குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தைதான் நூறு நாள் வேலை என்று கூறுகிறார்கள். 2019ந் ஒரு டிசம்பர் காலையில் அவர்களது கூலி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். வனஜா 20 வயதானவர். அந்த காலனியில் வசிக்கும் 35 இருளர் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான பெரியவர்கள் அவரைப் போல தினக்கூலிகளாக உள்ளனர்.
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி வட்டத்தில் உள்ள செருக்கானூர் பஞ்சாயத்தில் உள்ள இந்த குடியிருப்பில் உள்ள ஆண்கள் பெரும்பாலும் ஊரக வேலை உறுதி திட்டம் இல்லாத வேலைகளை தேடிக்கொள்கின்றனர். விளை நிலங்களுக்கு வாய்க்கால் வெட்டுவது, மாம்பழத்தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, கட்டுமான பணிகளில் கூலி வேலை செய்வது, சாரம் கட்டுவதற்கு, விறகுக்கு. காகித கூழ் தயாரிப்பதற்கு மற்றும் பல்வேறு வேலைகளுக்குப் பயன்படக்கூடிய சவுக்கு மரங்கள் வெட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். அதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.300ஐ கூலியாகப் பெறுகின்றனர்.
இந்த வேலைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் கணிக்க முடியாதவையாகும். பருவமழைக்காலங்களில், வேலை கிடைக்காத காலங்களில் இருளர்களை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களாக தமிழகத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். வருமானமின்றியே குடும்பம் நடத்துகின்றனர். அருகில் உள்ள காடுகளில் சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்கின்றனர். பழங்கள் மற்றும் கிழங்குகளை எடுத்து தங்கள் உணவுகளில் கூடுதலாக சேர்த்துக்கொள்கின்றனர். (பார்க்க பங்களாமேட்டின் புதையல்கள் மற்றும் பங்களாமேடுவில் எலிகளுடன் வேறொரு வாழ்க்கை )
பெண்களுக்கு, அந்த வேலைகளும் அரிதாகவே கிடைக்கின்றன. சில நேரங்களில் அவர்கள் தங்கள் கணவருடன் சேர்ந்து அருகில் உள்ள செங்கல் சூளையில் ஜனவரி – பிப்ரவரி முதல் மே – ஜீன் வரை பணி செய்கின்றனர். ஆனால் வேலை தொடர்ந்து அல்லாமல் விட்டுவிட்டுதான் கிடைக்கும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ரூ.6 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கின்றனர்.
சில நேரங்களில், பெண்கள் கடலைப் பயிர் பறிப்பார்கள். அவர்கள் கணவர்களுடன் சேர்ந்து பறிப்பதில், நாளொன்றுக்கு ரூ.110 முதல் ரூ.120 வரை ஊதியம் பெறுகின்றனர். கடலைகளின் ஓடுகளை பிரித்து, சுத்தம் செய்து, அதை கட்டிக்கொடுப்பதற்கு நாளொன்றுக்கு ரூ.400-450 வரை கூலி பெறுகின்றனர். ஆனால், இதுவும் அரிதாகவே கிடைக்கும் வேலை.
மொத்தத்தில், கூலி வேலைக்கு பெரும்பாலும் பெண்கள் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தையேச் சார்ந்துள்ளனர். “பெண்களுக்கான வேலை எங்கே?“ என்று 28 வயதான சுமதி கேட்கிறார். அவர் வனஜாவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர். அவர் மண் மற்றும் ஓலைக்கூரையலான குடிசையில் தனது கணவர் 36 வயது ஸ்ரீராமலுவுடன் வசித்து வருகிறார். அவரும் தினக்கூலித்தொழிலாளர்தான். “நூறு நாள் வேலை மட்டுமே எங்களுக்கு உள்ள ஒரே வேலை“ என்று கூறுகிறார்கள்.
MGNREGA
அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005, வீட்டில் ஒருவருக்கு ஆண்டில் 100 நாள் வேலையை உறுதியளிக்கிறது.
அங்குள்ள சீமை கருவேல மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் குழுவினர் அனைவரின் பெயரையும் எண்ணி, பங்களாமேட்டில் உள்ள 35 குடும்பத்தில் 25 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு ஊரக வேலை உறுதித்திட்ட அடையாள அட்டை உள்ளதாக நம்மிடம் கூறுகின்றனர். “ஏரி வேலைக்கு எங்களை அவர்கள் கூப்பிடுவார்கள்“ என்று சுமதி உள்ளூர் வழக்கில் கூறினார். வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்கள் வெட்டுவதற்கு, காய்ந்த ஏரிக்கரையில் களையெடுப்பது அல்லது சில நேரங்களில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவது போன்ற அனைத்து வேலைகளும் இதில் அடக்கம்.
ஆனால், ஊரக வேலை உறுதித்திட்டமும் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. அதனால் வருமானம் குறைவாகவே கிடைக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் செருக்கானூர் பஞ்சாயத்தில் சராசரி வேலை நாட்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்று தரவுகள் சொல்கின்றன. பங்களாமேடு மக்களுக்கு அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. பஞ்சாயத்தால் சில புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டதால் என்று நினைக்கிறார்கள். 2019-20(நிதியாண்டில்), ஒரு குடும்பத்திற்கு 49.22 நாட்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. இது 2016-17ம் ஆண்டின் 93.48டுன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.
“கடந்தாண்டுக்கு முன்னர் வரை நாங்கள் 80 முதல் 90 நாட்கள் வரை வேலை செய்திருக்கிறோம். இனி அதுபோல் இல்லை“ என்று வனஜா கூறுகிறார். அவரின் கணவர் 21 வயதான ஜான்சன் மற்றும் 3 வயது மகன் சக்திவேல் ஆகியோர் கொண்ட தனது குடும்பத்திற்கான செலவுகளை வனஜா ஊரக வேலைத்திட்டத்தின் மூலம் வரும் வருமானத்தை கொண்டே சமாளிக்கிறார். கூலித்தொழில் மூலம் வரும் ஜான்சனின் வருமானம் அனைத்தும் அவர்கள் வாங்கிய பழைய பைக்கிற்க்கு மாதத்தவணை கட்டுவதற்கே சரியாகிவிடும்.
ஆனால், 2019 அக்டோபர் மத்தியில் துவங்கி 2020 ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலத்தில் வனஜாவுக்கு 13 நாள் மட்டுமே ஊரக வேலை உறுதி திட்டப்பணி கிடைத்தது. மற்ற காலங்களில் குடும்பம் ஜான்சனின் வருமானத்தை நம்பியே இருந்தது. அவரின் வருமானத்தையே நாங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பயன்படுத்தினோம்“ என்று வனஜா கூறினார்.
தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதி திட்டக்கூலி நாளொன்றுக்கு ரூ.229 (2019-20) ஆக உள்ள நிலையில், வேலை அட்டைகளில் கூலி ரூ.140 முதல் ரூ.170 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செருக்கானூர் பஞ்சாயத்தின் கீழ் உள்ள ராமகிருஷ்ணபுர குடியிருப்பைச் சேர்ந்த 31 வயதான நித்யா, பங்களாமேட்டிற்கு பணிதள பொறுப்பாளராக உள்ளார். முறையான அளவைவிட கூலி குறைவாக உள்ளதற்கு காரணம் என்ன என்பது தனக்கு தெரியாதென்று அவர் கூறுகிறார்.
“ஓவர்ஸ் என்பவர்கள் ஒருவருக்கு எவ்வளவு வேலை கொடுக்க வேண்டும்? அதற்கு என்ன கூலி கொடுக்க வேண்டும் என்று அவர்களே முடிவெடுக்கிறார்கள்“ என்று அவர் கூறுகிறார். பொறியாளர்கள் ஓவர்ஸ் என்று அழைக்கப்படுகின்றர்கள். அவர்களை ஓவர்சார் அல்லது ஓவர்சம்மா என்று அழைக்கின்றனர். “அவர்கள் குழி தோண்டினால், ஓவர்ஸ்கள், அளவு மற்றும் எத்தனை குழிகள் தோண்ட வேண்டும் மற்றும் வேலைக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர் அல்லது வாய்க்கால் வெட்ட வேண்டுமெனில் ஓவர்ஸ்கள் அளவு மற்றும் கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர்“ என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வேலை அட்டைகள் பணியாளர்களுக்கு அவர்கள் எத்தனை நாட்கள் வேலை செய்துள்ளனர், அதற்கு எவ்வளவு கூலி வழங்கப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்வதற்கு உதவுகிறது. பணியாளர்கள் இந்த அட்டையை தினமும் வேலைக்கு வரும்போது எடுத்துவரவேண்டும். பணிதளப்பொறுப்பாளர்கள் அதில் வருகைபதிவை குறிப்பிடுவார். ஆனால், பங்களாமேட்டில் பெரும்பாலான வேலை அட்டையில் உள்ள இந்த விவரங்கள் தொழிலாளர்களின் மதிப்பீடுகளோடு ஒத்துப்போவதில்லை.
அதற்கு காரணம் பணியாளர்கள் அட்டையை எடுத்து வராதது அல்லது பணிதளப்பொறுப்பாளர் அதில் வருகைப்பதிவை குறிப்பிடாததால் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பணிதளப்பொறுப்பாளரும் ஒரு பதிவேடு பராமரிக்கிறார். பெரும்பாலும் அதில் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்படுகிறது. அது திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலத்தில் உள்ள கணினி இயக்கும் பணியாளருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு வருகைப்பதிவு விவரம் ஆன்லைனில் குறித்து வைத்துக்கொள்ளப்படுகிறது. இது 2017ல் கூலி பரிமாற்றம் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதற்கு பின்னர் முதல் இவ்வாறு செய்யப்படுகிறது.
டிஜிட்டல் மயமாக்கலுக்கு முன்னர், பணிதளப்பொறுப்பாளர், வேலை அட்டையில் கூலி விவரங்களை, கூலி கொடுக்கும்போது நிரப்பிக்கொடுப்பார். “நாங்கள் எங்கள் நூறு நாள் வேலைக்கூலியை பணமாக பெற்றபோது, எங்களுக்கு ஒவ்வொரு வாரமும் எவ்வளவு கூலி கிடைக்கிறது என்பது தெரிந்தது. தற்போது அது வங்கிகளுக்கு வருகிறது. நாங்கள் பள்ளிக்கு சென்றிருந்தால், எங்களுக்கு கணக்கு தெரிந்திருக்கும்“ என்று 43 வயதான வி.சரோஜா குறிப்பிட்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் டிஜிட்டல் பதிப்பில் புதுப்பிக்கப்பட்ட வருகைப்பதிவு மற்றும் கூலி விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அது யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளும் வகையில், பொதுபயன்பாட்டிற்கு உள்ளது, ஆனால் இணையதள பரிச்சயம் அற்ற இருளர்களால் அதை எளிதாக பயன்படுத்த முடியாமல் உள்ளது. பெரும்பாலானோரிடம் செல்போன்கள் இல்லை அல்லது அதில் இணையதள வசதி இல்லை. ஆன்லைன் உலகம் குறித்த குறைவான பரிச்சயம், சிக்கலான விண்ணப்பங்கள் மற்றும் இணையபக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வதை கடினமாக்குகிறது.அதனால், தற்போது வேலை அட்டைகள், வங்கிக்கணக்கை பணியாளர்கள் சரிபார்த்த பின்னரே புதுப்பிக்கப்படுகின்றன. விவரங்களை உறுதிப்படுத்திவிட்டு, பணிதளப்பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். “கட்டணம் பெறுவதற்கு முன், அட்டையில் நாங்கள் கூலி விவரங்களை நிரப்பினால், அது தவறாகிவிடுகிறது“ என்று எஸ்.எஸ்.நித்யா விளக்கினார். “பணம் பெறப்பட்டதைப்போல் கணக்கில் காட்டினாலும், வங்கிக்கு பணம் வந்திருக்காது. மக்கள் இதுகுறித்து புகார் கூறியுள்ளனர்“ என்று அவர் மேலும் கூறினார்.
பங்களாமேட்டின் இருளர்கள் தங்கள் வங்கிக்கணக்கை சரிபார்க்க அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று வருவதற்கே நேரமும், பணமும் செலவாகிறது. “எங்கள் வங்கி, நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கே.ஜி. கண்டிகை பஞ்சாயத்தில் உள்ளது. அங்கு செல்ல முக்கிய சாலைக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து ஷேர் ஆட்டோ அல்லது பஸ் பிடித்து ஒரு வழிக்கு ரூ.10 செலவு செய்து செல்ல வேண்டும்“ என்று சுமதி கூறுகிறார். “பணம் வரவில்லையென்றால், நாங்கள் மீண்டும் செல்ல வேண்டும். சில நேரங்களில், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோம். அதற்கும் பெட்ரோல் போடுவதற்கு ரூ.50 கொடுக்க வேண்டும்“ என்று 44 வயதான சரோஜா கூறினார்.
எளிதில் செல்வதற்கு வசதியாக வங்கிகள், சிறிய வங்கிகளை அறிமுகப்படுத்த வேண்டும். இருளர்கள் பயன்படுத்தும் கனரா வங்கிக்கு செருக்கானூர் பஞ்சாயத்தில் சிறிய கிளை ஒன்று உள்ளது. அதுவும் குறைந்தபட்சம் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் இயங்குகிறது. இங்கு மக்கள் தங்கள் வங்கி இருப்பை சரிபார்த்துக்கொள்ளலாம் மற்றும் ரூ.10 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ள முடியும். அதைவிட அதிக தொகை வேண்டுமெனில் அவர்கள் முக்கிய கிளையான கே.ஜி.கண்டிகைக்குத்தான் செல்ல வேண்டும்.
சிறிய வங்கியின் கட்டண முறை ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் நடைபெறுகிறது. “எனது கட்டைவிரல் ரேகை பதிவை இயந்திரம் ஏற்றுக்கொள்ளாது. நான் மீண்டும் மீண்டும் கட்டைவிரலை வைத்துக்கொண்டே இருப்பேன். ஆனாலும் அது வேலை செய்யாது. எனவே நான் எனது ஏடிஎம் அட்டையை பயன்படுத்துவதற்காக கண்டிகை வங்கிக்கு செல்ல வேண்டும்“ என்று சுமதி கூறினார்.
வங்கி, கடைசி 5 பரிவர்த்தனைகளை சரிபார்த்துக்கொள்வதற்கு செல்போன் வங்கி சேவையையும் வழங்குகிறது. ஆனால், சுமதியும் மற்றவர்களும் அந்த சேவை குறித்து அறிந்திருக்கவில்லை. “எங்கள் போனில் அதை எப்படி செய்வது என்று எங்களுக்கு தெரியாது“ என்று அவர் கூறினார். நேரடியாக வங்கிக்கு சென்று பரிவர்த்தனைகள் செய்துகொள்வது நன்மை கொடுக்கும் என்று அவர் மேலும் கூறினார். “நம் கையில் பணம் இருந்தால், நாம் அதை எப்படி செலவு செய்தோம் என்பதே தெரியாது. தற்போது நாங்கள் எங்கள் நூறு நாள் வேலை பணத்தை வங்கியிலேயே விட்டு வைத்திருக்கிறோம்“ என்று கூறுகின்றனர்.
சில நேரங்களில் இருளர் பெண்களின் பணம் வங்கியிலிருந்து எடுக்கும்போது அவர்கள் கணக்கிட்டு வைத்திருந்த தொகையிலிருந்து குறைகிறது. இது கே. கோவிந்தம்மாளின் அனுபவம். அவருக்கு தற்போது 40 வயது இருக்கும். தனது கணவரை 20 ஆண்டுகளுக்கு முன்னரே இழந்துவிட்டார். வளர்ந்த 3 குழந்தைகள் உள்ளனர். தனியாகவே வசிக்கிறார். 2018-19ம் ஆண்டுகளில் அவர் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அவர் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெற்றார். ஊரக வேலை உறுதி திட்டத்தின் கூலியையும், அவர், அவரின் கட்டிடத்திலே வேலை செய்துகொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். அவர், அங்கு வேலை செய்ததற்காக வழங்கப்பட்ட 65 நாள் கூலியையும், கொத்தனார் செலவு உள்ளிட்டவற்றிற்காக பயன்படுத்திவிட்டார். ஆனால், ஒருமுறை ரூ.15 ஆயிரம் பணம் போடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அந்த தொகை 14 ஆயிரைமாக குறைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையில், வீடு கட்டுவதற்கு உண்மையில் ஆகும் செலவு பிரதமரின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தொகை மற்றும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கூலியையும் விட கூடுதலாகிவிட்டது. சில நேரங்களில் வீடு கட்ட உபயோகப்படும் கட்டுமானப்பொருட்களின் விலையும் அதிகமாக இருந்தது. இதனால், கோவிந்தம்மாளின் மாடி வீட்டில் தளத்திற்கான வேலைகள் முடிவடையாமலே உள்ளது. “அதை கட்டி முடிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை“ என்று அவர் கூறுகிறார்.
2019ம் ஆண்டில், சரோஜாவும் ஏரி வேலைக்குச் செல்வதற்கு பதிலாக, தனது சொந்த வீட்டை கட்டும் வேலையில் ஈடுபட முயற்சித்தார். ஆண்டுகள் கடந்தது. ஆனால், ஊரக வேலை திட்ட கூலித்தொகை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. “அதிகாரி உதவுவதாக மே மாதத்தில் வாக்குறுதி கொடுத்துள்ளார். பார்க்கலாம்“ என்று சரோஜா கூறுகிறார். “ஏரி வேலைக்கான பணம் வரவில்லையெனில், நான் எப்படி கொத்தனார் கூலி கொடுப்பேன்? எனது அன்றாட பணிகளிலிருந்தும் இழந்து விட்டேன்“ என்று அவர் கூறுகிறார். அப்போது முதல் அவர் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கூலியாக ரூ.2 ஆயிரத்தை மட்டுமே பெறுகிறார். ஆனால் அவர் ஒரு மாதத்திற்கு அவர் வீட்டிற்கு செய்த வேலைக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஊரக வேலை உறுதித்திட்டம் பங்களாமேடு பெண்கள் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பாதிப்பதற்கு வழி ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய ஊரடங்குக்குப்பின்னர், வாழ்வாதாரத்திற்கான மற்ற வழிகளும் அடைக்கப்பட்ட பின்னர், ஊரக வேலைத்திட்டம் குடும்பங்களை கவனித்துக்கொள்ள உதவியிருக்கிறது.
சுமதி தனது ஊரக வேலை உறுதி திட்ட கூலியை தொடர்ந்து பல வாரங்கள் சேமித்து வந்தார். வீடு சரிசெய்வதற்கும், மருத்துவ செலவுகளுக்கும் உதவக்கூடும் என்று எண்ணியிருந்தார். இந்நிலையில் மே மாதத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது, அவர், 5 ஆயிரம் ரூபாய் சேமிப்பை தனது வீட்டின் முன்புறம் சிறிய கடை வைத்துக்கொள்வதற்கு உபயோகப்படுத்தினார். அங்கு அவர் சோப்பு, மளிகை போன்றவற்றை விற்று அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். (ஊரடங்கு காலத்தின்போது ஒரு கடை கூட இல்லாத அவர்கள் குடியிருப்பில் இருளர்கள் முற்றிலும் அரசு, பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களையே மளிகை மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களுக்காக சார்ந்திருந்தனர்)
“வேலையும் இல்லை, பணமும் இல்லை“ என்று சுமதி, செங்கல் சூளை மற்றும் மற்ற பணியிடங்கள் மூடப்பட்டிருந்த ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் கூறியிருந்தார். அந்த மாதத்தின் கடைசி வாரத்தில் குடியிருப்பில், ஊரக வேலை உறுதி திட்டம் செயல்பட துவங்கியது பங்களாமேடு மக்களை இறுக்கிப்பிடித்திருந்த பொருளாதார துன்பங்கள் கொஞ்சம் தளர்வதற்கு உதவியது.
தமிழில்: பிரியதர்சினி