ஆர்.கைலாசம் வங்கியை விட்டு எப்போதும் குழப்பத்துடனே கிளம்புகிறார். “ஒவ்வொரு முறை வங்கி பாஸ்புக் பதிவிட சென்றாலும் இயந்திரம் கோளாறாக இருப்பதாக சொல்லி மீண்டும் ஒரு நேரம் வரச் சொல்லி அனுப்பி விடுகிறார்கள்,” என்கிறார் அவர்.
இதைக் கேட்க அவர் வசிக்கும் பங்களாமேடு கிராமத்திலிருந்து, ஐந்து கிலோமீட்டர் தொலைவை இரண்டு மணி நேரம் நடந்து கே.ஜி.கண்டிகை டவுனில் இருக்கும் வங்கிக்கு வந்திருக்கிறார். (ஒரு வருடத்துக்கு முன் வரை, பேருந்து சேவை பாதி தூரம் வரை இருந்தது. இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது).
வங்கியில்தான் அவரின் உண்மையான போராட்டம் தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கே.ஜி. கண்டிகை டவுன் கனரா வங்கிக் கிளையில் பாஸ்புக் பதிவேற்ற தானியங்கி இயந்திரம் இருக்கிறது. அதை கைலாசம் இயக்கவே முடிந்ததில்லை. “எனக்கு அது இயங்க மறுக்கிறது,” என்கிறார் அவர்.
ஒருநாள் காலை அவர் வங்கி பிரச்சினைகளை என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த வேலிக்காத்தான் மர நிழலில் அமர்ந்திருந்த சில பெண்களும் இணைந்து கொண்டனர். “உங்கள் பாஸ்புக்கில் ஒரு ஸ்டிக்கர் இருந்தால்தான் பதிவேற்ற முடியும் தாத்தா,” என்றார் அவர்களில் ஒருவர். அவர் சொன்னது சரிதான். கைலாசத்தின் பாஸ்புக்கில் பார்கோடு இல்லை. இயந்திரம் இயங்க பார்கோடு அவசியம். “அவர்கள் ஏன் ஸ்டிக்கர் கொடுக்கவில்லை எனத் தெரியவில்லை. இத்தகைய விஷயங்கள் எனக்கு புரிவதில்லை,” என்கிறார் அவர். பெண்களுக்கும் ஸ்டிக்கர் ஏன் கொடுக்கப்படவில்லை என தெரியவில்லை. ஆனால் யூகித்தனர். “ஏடிஎம் கார்டு நீங்கள் வாங்கினால் ஸ்டிக்கர் கொடுப்பார்கள்,” என்றார் ஒருவர். “நீங்கள் 500 ரூபாய் கொடுத்து புதிய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்,” என்றார் இன்னொருவர். “இருப்புத் தொகை தேவைப்படாத வங்கிக் கணக்காக இருந்தால், ஸ்டிக்கர் உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள்,” என்றார் மூன்றாவது பெண். கைலாசம் குழப்பத்துடன் இருந்தார்.
வங்கியுடனான போராட்டத்தில் அவர் தனியாக இல்லை. பங்களாமேட்டில் இருக்கும் பலருக்கு வங்கிக் கணக்குகளை கையாளுவதும் வருமானத்தை சரிபார்ப்பதும் பணம் எடுப்பதும் சுலபமான காரியங்களில்லை. செருக்கனூர் இருளர் காலனி என்கிற அந்த குக்கிராமம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள ஒரு திறந்த புதர்வெளியில் இருக்கும் ஒற்றை தெருதான். தெருவின் இரு பக்கங்களிலும் சிறு குடிசைகளும் சில கார வீடுகளும் இருக்கின்றன. மொத்தமாக 35 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றனர். (அரசு ஆவணங்களில் சமூகத்தின் பெயர் இருளர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.)
60 வயது கைலாசமும் அவரது மனைவி 45 வயது கே.சஞ்சயம்மாவும் கூரை வேயப்பட்ட ஒரு மண் வீட்டில் வசிக்கின்றனர். நான்கு ஆடுகள் இருக்கின்றன. சஞ்சயம்மா அவற்றை பார்த்துக் கொள்கிறார். அவர்களின் நான்கு குழந்தைகள் வளர்ந்து தனித்தனி குடும்பங்களாகி விட்டனர். தினக்கூலி வேலை செய்யும் கைலாசம் சொல்கையில், “நிலத்தில் வேலை பார்த்தால் ஒரு முழு நாளும் குனிந்து வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது. எலும்புகள் வலிக்கின்றன. ஏரி வேலை (ஊரக வேலைவாய்ப்பு வேலைகள்) எனக்கு பிடித்திருக்கிறது,” என்கிறார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு வருடத்தில் நூறு நாட்களுக்கு வேலையை உத்தரவாதப்படுத்துகிறது. எனினும் பங்களாமேடு இருளர்களுக்கு நூறு நாட்களுக்கும் குறைவாகதான் வேலைகள் கிடைக்கின்றன.











