“என் கணவர் சனிக்கிழமைகளில் இவ்வளவுப் பெரிய மது பாட்டில்கள் மூன்றை வாங்கி வருகிறார்” என்று தனது கையில் முழம் போட்டு காட்டுகிறார் கனகா. “அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அது தீரும் வரை குடிப்பார். மது புட்டிகள் காலியான பிறகு தான் வேலைக்குப் போவார். சாப்பாட்டுக்குத் தேவையான பணம் ஒருபோதும் கிடைத்ததில்லை. என்னையும், என் குழந்தையையுமே என்னால் கவனித்துக்கொள்ள முடியவில்லை. இதில் என் கணவர் இன்னொரு குழந்தை வேறு கேட்கிறார். எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம்” என்று வெறுமையுடன் சொல்கிறார் அவர்.
கூடலூர் பழங்குடியினர் மருத்துவமனையில் மருத்துவரைப் பார்ப்பதற்காகக் காத்திருக்கும் 24 வயது தாயான கனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெட்ட குறும்பர் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். உதகமண்டலத்தில் (ஊட்டி) இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கூடலூர் நகர பழங்குடியினர் மருத்துவமனை. 50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்ட பந்தலூர் தாலுக்கா, கூடலூரைச் சேர்ந்த 12,000க்கும் அதிகமான பழங்குடியின மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
வெளுத்துப் போன சிந்தடிக் புடவை கட்டியிருக்கும் கனகா, தனது ஒரே பெண் குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக இங்கு வந்துள்ளார். கடந்த மாதம் அவர் வசிக்கும் கிராமத்தில் அவரது மகளுக்கு, நீலகிரி சுகாதார நலப் பணியாளர் கூட்டமைப்பின் (அஷ்வினி) பணியாளரால் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கனகாவின் இரண்டு வயது குழந்தை வெறும் 7.2 கிலோ எடையுடன் இருந்தது கண்டறியப்பட்டது (வழக்கமாக இரண்டு வயது குழந்தை 10-12 கிலோ இருக்கும்). எடை குறைவு காரணமாக தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டு வரிசையில் அக்குழந்தையை வைத்துள்ளனர். குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்படி சுகாதாரப் பணியாளர்கள் கனகாவிடம் கூறியுள்ளனர்.
இந்த ஊட்டச்சத்து குறைபாடு ஒன்றும் ஆச்சரியத்துக்குரியது அல்ல. கனகாவைப் போன்றவர்கள், தங்களுடைய வருமானத்தை தாங்களே பெருக்கிக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். கனகாவின் கணவருக்கு இருபது, இருபத்தைந்து வயது இருக்கும். அவர் அருகிலுள்ள தேயிலை, காபி, வாழை, மிளகு எஸ்டேட்டுகளில் தினக்கூலியாக வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.300 சம்பாதிக்கிறார். “அவர் உணவுக்காக மாதம் ரூ.500 தான் தருகிறார், இதை வைத்துக் கொண்டு நான் முழு குடும்பத்திற்கும் சமைக்க வேண்டும்” என்கிறார் கனகா.
தினக்கூலிகளாக வேலை செய்யும் 50 வயதுக்கு மேற்பட்ட கணவரின் அத்தை, மாமாவுடன் கனகா ஒன்றாக வசிக்கிறார். இரண்டு குடும்பங்களுக்கும் தனித்தனி ரேஷன் அட்டை உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் 70 கிலோ இலவச அரிசி, மானிய விலையில் 2 கிலோ பருப்பு, இரண்டு கிலோ சர்க்கரை, 2 லிட்டர் எண்ணெய் கிடைக்கின்றன. “என் கணவர் சில சமயம் குடிப்பதற்காக எங்கள் ரேஷன் அரிசியைக் கூட விற்றுவிடுவார். சில நாட்கள் சாப்பிடக் கூட எதுவும் இருக்காது“ என்கிறார் கனகா.











