“கவனமாக வாருங்கள்“ என்று முகமது இலியாஸ் எச்சரிக்கை விடுக்கிறார். அவரும், ஷபீர் ஹீசேனும் ஹண்டர்மேன் ப்ரோக்கில் உள்ள குடியிருப்புகளில் நான் நடந்து செல்லும்போது இவ்வாறு கூறுகிறார்கள். நாம் இந்த ஆட்களின்றி விடப்பட்ட குடியிருப்புக்கு வந்திருக்கிறோம். லடாக்கில் உள்ள கார்கில் சந்தையிலிருந்து 8 கிலோ மீட்டர் மலையேறி இங்கு வந்துள்ளோம். குறுகலான வளைந்து நெளிந்த சாலைகளின் வழியே, அதன் மயக்கமுறச்செய்யும் வளைவுகளின் வழியாக பயணித்து இங்கு வந்துள்ளோம்.

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், இதன் வளமான தோற்றத்தை கூறவேண்டுமெனில், அளவுக்கதிகமான நீர்வள ஆதாரங்கள் மற்றும் இமயமலைக்கு மத்தியில் உயர்ந்த இடமாக இருந்தது. கார்கிலின் இரண்டு கிராமங்களான போயன் மற்றும் கர்கேச்சு (மக்கள்தொகை கணக்கெடுப்பில் போயான் மற்றும் கார்கிட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது)வில் 30 குடும்பங்கள் வசித்து வந்தன. இது ப்ரோக் என்று அழைக்கப்படுகிறது (பல்டி மொழியில் ப்ரோக் என்றால், கோடை காலத்தில் ஆடு, மாடுகள் மேய்பதற்கான சொர்க்கம் என்று பொருள்). இங்கு குடியிருப்புகள் கற்கள், மரம், உமி மற்றும் மண் கொண்டு ஆறு படிகள் மற்றும் அதற்கு மேலும் கட்டப்பட்டுள்ளது. அந்த  தொடர் கட்டுமானத்தின் பாரத்தை மலைகள் தாங்கிக்கொள்கின்றன. அது மலையுடன் 2.700 மீட்டர் உயரத்தில் கலக்கிறது.

இங்குள்ள ஒவ்வொரு வீடும் நுணுக்கமாக அடுத்த வீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் 5 முதல் 7 அடி வரை பனிக்கட்டிகளால் உறைந்திருக்கும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர் காலங்களில் வெளியே செல்வது குறைக்கப்படுகிறது. “முடிந்தளவு கதகதப்பான சூழலை உருவாக்குவதற்காக முந்தைய காலங்களில், மேற்கூரை, கதவுகள், ஜன்னல்கள் சிறிதாகவும், தாழ்வாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கின் மேற்கூரையிலும் அறையில் ஒரு புற சுவர் காற்றோட்டத்திற்காகவும், குளிர்ந்த வாடை காற்றை அனுபவிப்பதற்காகவும் வில்லோ என்ற மரத்தின் கிளைகளால் பின்னப்பட்ட தடுப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது“ என்று இலியாஸ் நம்மை மாடியின் மேலே ஒரு உடைந்த பகுதிக்கு அழைத்துச்செல்லும்போது கூறுகிறார்.

PHOTO • Stanzin Saldon
PHOTO • Stanzin Saldon

ஹண்டர் ப்ரோக்கின் கட்டுமானம் இப்பகுதிக்கு தகுந்ததும், நெகிழ்திறன் உடையதுமானது. ஒவ்வொரு அடுக்கிலும் காற்றோட்டத்திற்காக வில்லோ என்ற மரத்தின் கிளைகளால் பின்னப்பட்ட தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது

இலியாஸ் மற்றும் ஷபீர் இருவரும், முப்பதுகளின் துவக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் குழந்தைப்பருவத்தை இந்த கிராமத்தில் கழித்தவர்கள். கார்கிலில் இலியாஸ் ஒரு சிறு அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஷபீர் டாக்ஸி ஓட்டுகிறார். இவர்கள் இருவரும் தான் நம்மை இங்கு அழைத்து வந்தவர்கள். கடந்த சில பத்தாண்டுகளாக, ஹண்டர்மேன் ப்ரோக்கில் வசித்த அனைத்து குடும்பங்களும் (அரசு பதிவுகளின்படி போய் கிராமத்தில் உள்ள குடியிருப்பு) அதற்கு மேலே இடம்பெயர்ந்துவிட்டனர். இரண்டு குடும்பங்கள் மட்டும் ஹண்டர் ப்ரோக்கில் வசிக்கின்றனர். ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் அது பரந்துவிரிந்த இடமாகும். முதலில் 1971ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போராலும், பின்னர் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் (2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அங்குள்ள மக்கள்தொகை 216), குளிர் காலத்தில் ஏற்படும் பனிச்சரிவு அபாயத்தினாலும் இந்த இடப்பெயர்வு நடைபெற்றது. புதிய குடியிருப்பும் ஹண்டர்மேன் என்று அழைக்கப்பட்டது.

கார்கிலில் இருந்த கட்டிட பொறியாளர் அந்த இடத்தை அதன் வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷமாக 6 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கும் வரை ப்ரோகின் பழைய குடியிருப்பு, கால்நடைகளுக்கு கொட்டகை மற்றும் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. அவர் தான் அஜாஸ் உசேன் முன்ஷியின் பார்வைக்கு எடுத்துச்சென்றார். அவர் கார்கிலில் வசிக்கக்கூடிய ஒரு முக்கிய நபர் மற்றும் அருங்காட்சியக கண்காணிப்பாளர். இவர்கள் புதிய குடியிருப்பில் வசிக்கும் மக்களிடம் இந்த இடத்தின் சுற்றுலா சாத்தியக்கூறுகளை எடுத்துக்கூறி அவர்களை சம்மதிக்க வைத்தார். ஒன்றாக அவர்கள் ஹண்டர்மேன் ப்ரோக்கை பாரம்பரிய இடமாகவும், மூன்று அறைகள் கொண்ட ஒரு அருங்காட்சியகத்தையும் அமைத்து, அதில் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களை காட்சிப்படுத்தினர். இந்த இடம் தற்போது நினைவுகளின் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு பழைய கட்டுமானமாக உள்ளது. அபோ ஹசன் என்பவரின் மூதாதையர்கள் இல்லம் அது. அவர் தற்போது புதிய குடியிருப்பில் வசிக்கிறார். அவர் அங்கு பார்லி மற்றும் காய்கறிகள் பயிரிடுகிறார்.

நாங்கள் அந்த அருங்காட்சியகத்தைச் சுற்றி நடந்தபோது, ப்ரோக்கில் நடந்த சில இயக்கங்களை பார்த்தோம். சரிவில் முகமது முசா வேகமாக ஓடிவந்து “அஸ்லாம் அழைக்கும்“ என்று புன்னகையுடன் நம்மை வரவேற்றார். “மலையில் நீங்கள் நடைபாதையை பார்த்தீர்களா?“ என்று முசா கேட்டார். சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தார். 50 வயது இருக்கும் அவர் தற்போது மின்துறையில் தொழிலாளியாக உள்ளார். “நான் சிறுவனாக இருந்தபோது, குழந்தைகள் அருகில் உள்ள ப்ரோல்மோ கிராமத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து செல்வதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரமாகும். அந்த கிராமம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது“ என்று அவர் மேலும்  கூறினார்.

PHOTO • Sharmila Joshi
PHOTO • Stanzin Saldon

“நான் அந்த போர் காலங்களில் வாழ்ந்தேன்“ என்று முகமது முசா கூறுகிறார். வலது : ஷபீர் ஹீசேன், முகமது இலியாஸ் மற்றும் அஜாஸ் முன்ஷி ஆகியோர் ஹண்டர்மேனில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் உள்ளனர்

மலையில் ஹண்டர்மேனுக்கு செல்லும் சாலையில், உயரமான மலை பகுதியில் ப்ரால்மோவின் சில பகுதிகள் பள்ளதாக்கு முழுவதிலும் நன்றாக தெரிகிறது. அது 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த குடியிருப்புகள் அனைத்தும் வடக்கு கார்கிலில் உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ளது. எனவே, எப்போதும் அங்கு ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.

ப்ரோல்மோவைப்போல், ப்ரோக்கும், ஹண்டர்மோ என்றுதான் உண்மையில் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டது. மேஜர் மேன் பகதூர் என்ற ராணுவ அதிகாரிக்கு மரியாதை அளிக்கும் வகையில் அது ஹண்டர்மேன் என்று அழைக்கப்பட்டது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானின் படைகளை திரும்பியோடச்செய்ததில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்களவு இருந்ததால், அவருக்கு இவ்வாறு மரியாதை செய்யப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். 1965ம் ஆண்டு வரை அப்பகுதி பாகிஸ்தானின் பகுதியாகத்தான் இருந்தது. 1965ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்குப்பின்னர் அது “யாருக்கும் இல்லாத“ இடமாகத்தான் இருந்தது. 1971ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்போது ப்ரோல்மோ மற்றும் ஓல்டிங் ஆகியவை பாகிஸ்தானுடன் சென்றுவிட்டது.

“இந்தப்பகுதியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் சென்றுவிட்டார்கள்“ என்று முசா கூறுகிறார். “தங்களின் வீடுகளை விட்டு செல்வதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் மட்டும் இங்கேயே தங்கிவிட்டார்கள்“ எல்லைகள் மற்றும் இரண்டு நாடுகளிடையே உள்ள விரோததத்தாலும், குடும்பங்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

எல்லை கடந்து நடந்த இலியாஸ் உறவினரின் திருமண புகைப்படங்களை அவர் காட்டினார். “இதைப்பாருங்கள் எனது மாமா அவரது மகளுடன் உள்ளார். அவரது மகளின் திருமணத்திற்கு எங்களால் செல்ல முடியாது. அவர்களின் வீட்டிற்கு செல்வதற்கு தேவையான நடைமுறைகளை முடிப்பதற்கே பல மாதங்கள் ஆகிறது. முன்பெல்லாம் இங்கிருந்து ஒருநாளில் அங்கு சென்றுவிடலாம். எங்களைப்போல் பல குடும்பங்களும் தொலைதூரத்திற்கு பிரிந்துவிட்டன. புவியியல் அளவில் நாங்கள் தொலைவில் இருந்தாலும், உறவு ரீதியாக நாங்கள் மிக நெருக்கமாவே இருக்கிறோம்“ என்று அவர் மேலும் கூறினார்.

PHOTO • Stanzin Saldon
PHOTO • Stanzin Saldon

இந்தப்பள்ளத்தாக்கு முழுவதும் “தங்கை கிராமம்“ என்று அழைக்கப்படும் ப்ரோல்மோ (இடது). அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களில், கடிதங்கள் மற்றும் பாகிஸ்தானின் கடவுச்சீட்டு ஆவணங்களும் அடங்கும்

“ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்த ஒரு சுற்றுலா பயணியோ அல்லது பயணியோ ராணுவ அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ஹண்டர்மேன் பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை“ என்று அஜாஸ் முன்ஷி மேலும் கூறுகிறார். கார்கிலிலிருந்து வந்திருந்த ஆவண காப்பாளர். (கார்கிலில் அமைக்ககப்பட்டுள்ள முன்ஷி அஷிஷ் பட் அருங்காட்சியகம் குறித்து வேறு ஒரு கதை கொடுக்கும்) அருங்காட்சியகத்தின் வாசலில் விழும் இளஞ்சூரியனின் கதகதப்பில் நாம் இருக்கிறோம். “இங்குள்ள இவ்வளவு சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் உயர் பாரம்பரியம் இருந்தாலும், ராணுவம், அந்த பாரம்பரிய பகுதிகளை மட்டுமே வெளி உலகம் பார்க்க அனுமதிக்கிறது“ இதற்கே நீண்ட காலமும், முயற்சியும் தேவைப்பட்டது.

வடக்கு கார்கிலில் எல்லை கிராமங்களில் மறுசீரமைப்புக்கான சூழலை உருவாக்குவது, பொருளாதார மற்றும் கலாச்சார தடைகள் சம்மந்தப்பட்டது. ஒரு நகரில், சுற்றுலா என்பது தற்போதைய கருத்து. இதுவரை தன்னார்வலர்கள் மற்றம் தனிநபர்களின் நன்கொடையிலிருந்து தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களை  கிராமத்தினர் சிலர் முன்பு எதிர்த்தனர். அவர்கள் கலாச்சார மற்றும் மத மதிப்பீடுகள் நீர்த்துப்போகும் என்று அஞ்சினர். “சுற்றுலாவுக்கு ஏற்ற மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை இங்கு உருவாக்குவதில், அப்போதும், இப்போதும் மக்கள் மற்றும் நிர்வாகத்தை ஏற்க வைப்பது சவாலாகவே உள்ளது“ என்று முசாமில் ஹீசேன் கூறுகிறார். அவர் கார்கிலில் வழித்தடங்களை கண்டுபிடிப்பது குறித்து வேலை செய்கிறார். இது பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் மற்ற பிரச்னைகள் குறித்தும் பணிபுரிகிறது. ஹண்டர்மேன் திட்டத்தில் பணிபுரிபவர்களில் இதுவும் ஒன்று. “துவக்கத்தில் பழைய மற்றும் உடைந்த இல்லங்களை பார்க்கத்துவங்கியது இவர்களுக்கு ஆச்சர்யமளித்தது. மற்றவர்களிடம் இருந்து வந்த எதிர்மறையான எண்ணங்களும், இதற்கு முட்டுக்கட்டை போட்டது. எனினும், காலம் செல்ல செல்ல மக்களும் ஏற்றுக்கொள்ள துவங்கினார்கள். குறிப்பாக இளைஞர்கள் ஏற்றுக்கொண்டது எங்களின் முயற்சிகளை மேலும் ஆதரித்தது“

2015ம் ஆண்டு, ஜெர்மனி மற்றும் பிரான்சில் இருந்து வந்தவர்களுடன் குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராவில் இருந்து வந்த கட்டிடக்கலை மாணவர்கள் குழு ப்ரோக்கின் மறுசீரமைப்பிற்கு கிராமமக்களுக்கு உதவினர். அப்போது முதல் நினைவுகளின் அருங்காட்சியகம், கடந்த கால வாழ்க்கையின் களஞ்சியமாக மாறியது. கலாச்சார கலைப்பொருட்களாக (மலையில் வசிப்பவர்களின் வீடுகளில் உபயோகிக்கும்) சமையலறை உபகரணங்கள், துணிகள், கருவிகள் மற்றும் பாரம்பரிய உள்விளையாட்டுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் படைவீரர்கள் போரில் விட்டுச்சென்ற பொருட்கள் மற்றும் எல்லைதாண்டி சென்ற கிராமத்தினரின் புகைப்படங்கள் உள்பட, இந்தியா – பாகிஸ்தான் போரின் நினைவுச்சின்னங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. சில கடிதங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இலியாசின் மாமா அவர்களின் குடும்பம் திரும்பியது குறித்து விசாரிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு அவர் வழங்கு ஆசிர்வாதங்கள் அடங்கிய கடிதமும் அதில் ஒன்று.

PHOTO • Stanzin Saldon
PHOTO • Stanzin Saldon
PHOTO • Stanzin Saldon

பழைய சமையலறை பாத்திரங்கள், பாரம்பரிய உள்விளையாட்டுகள் இந்தியா – பாகிஸ்தான் போரில் சிதறிய ஏவுகனைகள்

இந்தியா – பாகிஸ்தான் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள், சிதறிய ஏவுகனைகள், துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் ஆகியவை இங்கு கலைப்பொருட்களாகவும், நினைவுச்சின்னங்களாகவும் உள்ளன. “நான் அந்த போர் நடந்த காலத்தில் இங்கு வசித்துள்ளேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்த குடியிருப்பில் வசிக்கிறேன்“ என்று முசா கூறுகிறார். “எனது தந்தை மற்றும் எங்கள் குடியிருப்பில் இருந்த பெரும்பாலான ஆண்கள் பாகிஸ்தானின் ராணுவத்தினருக்கு சுமை தூக்கும் தொழிலாளர்களாக இருந்தவர்கள். நானும், என் வயதையொத்த பெரும்பாலான ஆண்கள் இந்திய ராணுவத்திற்கு சுமை தூக்குபவர்களாக இருந்தோம். அனைத்து பொருட்களையும் தூக்க வேண்டும் (சாப்பாடு, மருந்துகள், வெடி மருந்துகள் மற்றும் பல்வேறு மற்ற பொருட்களும் அதில் அடங்கும்) மலைகளுக்கு எனது கழுதையின் முதுகில் ஏற்றிச்செல்வேன். இந்த அருங்காட்சியகத்தில் நிறைய நினைவுகள் உள்ளது. அது மக்கள் தங்கள் கடந்த காலங்களுடன் தொடர்புபடுத்தி பார்ப்பதற்காக பாதுகாக்கப்பட வேண்டும். மற்றவர்கள் இங்கு வருகைபுரிந்து ஹண்டர்மேன் மற்றும் அதன் மக்களின் கதைகளை தெரிந்துகொள்வதை நான் விரும்புகிறேன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

அருங்காட்சியகத்தின் காப்பாளர்கள் எதிர்காலத்தில் இதன் மேம்பாட்டிற்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளார். “படிப்பதற்கான இடவசதி, தியான அறைகள், லடாக்கியின் உணவுகளை சுவைப்பதற்கு ஏதுவாக உணவகம் ஆகியவற்றை எதிர்பார்க்கிறோம்“ என்று அஜாஸ் முன்ஷி கூறுகிறார். “இதற்கு இதுவரை எங்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

கிராமத்தின் பொருளாதாரம் மெதுவாக மாறி வருகிறது. சுற்றுலா பயணிகளுக்காக இப்பகுதி திறந்து விடப்பட்டுள்ளதால், இங்கு விவசாயம், மேய்ச்சல் விலங்குகள் வளர்ப்பு மற்றும் போக்குவரத்து தவிர பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன. கிராமமக்கள் சிறிய கடைகளை வைத்து உள்ளூர் உற்பத்திகள் மற்றும் திண்பண்டங்கள் ஆகியவற்றை விற்று வருகின்றனர். நம்முடன் வரும் ஷபீர் கூறுகையில், “ஒன்பது ஆண்டுகளாக நான் இங்கு டாக்ஸி ஓட்டி வருகிறேன். ஹண்டர்மேனுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடை காலத்தின் உச்சத்தில், நாளொன்றுக்கு மூன்று முறை கூட ப்ரோக்கில் இருந்து கார்கிலுக்கு பயணிகளை (உள்ளூர், உள்நாடு மற்றும் வெளிநாட்டைச்சேர்ந்த) அழைத்துச்சென்றிருக்கிறேன். மேலும், நான் ஒருவன் மட்டும் அல்ல என்போல் நிறைய பேர் உள்ளார்கள்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

குடும்பத்தினரின் வரலாறு மற்றும் ஹண்டர்மேன் ப்ரோக்கின் நினைவுகள் கொடுத்த நம்பிக்கையில், தற்போது கார்கிலை கடந்து வெளியுலகத்துடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இதை முறையாக பராமரிக்கவில்லையென்றால், வரலாற்றுக்கு அது ஒரு பெரும் இழப்பாக இருக்கும். “நாம் விரைவாக வேலை செய்ய வேண்டும். மறுசீரமைப்பு பணிகள் துவங்குவதற்கு முந்தைய காலத்தில் நாம் பல கோடை காலங்களை வீணடித்துவிட்டோம். குளிர் காலங்கள் நிறைய சேதங்களைத்தான் கொண்டுவரும்“ என்று இலியாஸ் கூறுகிறார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடக்காத பல ஆண்டுகளுக்குப்பின்னர், அவருக்கும், அவரைப்போன்ற மற்ற கிராமமக்களுக்கும் அமைதி மட்டுமே வேண்டும். “எங்களுக்கு எந்தவொரு போரும் வேண்டாம். இந்த இடத்தை பாரம்பரிய தளம் என்ற எங்கள் கனவுகளை நினைவாக்குவதற்கு எங்களுக்கு அமைதி வேண்டும்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.

தமிழில்: பிரியதர்சினி. R.

Stanzin Saldon

स्टान्झिन साल्डन २०१७ साठी लेह लडाखच्या पारी फेलो आहेत. पिरामल फौंडेशन फॉर एज्युकेशन लीडरशिप च्या राज्य शैक्षणिक परिवर्तन प्रकल्पामध्ये त्या गुणवत्ता सुधार व्यवस्थापक आहेत. त्या अमेरिकन इंडिया फौंडेशन च्या डब्लू जे क्लिंटन (२०१५-१६) फेलो होत्या.

यांचे इतर लिखाण Stanzin Saldon
Translator : Priyadarshini R.

Priyadarshini R. is a freelance translator and research scholar. She has previously worked as a journalist with newspapers like Dinamalar, Dinakaran and news channels like Sun TV etc.

यांचे इतर लिखाण Priyadarshini R.