வடக்கு சூரத்தின் மினா நகரில் ரேணுகா பிரதான் தனது ஒற்றை அறைகொண்ட வீட்டில் தினமும் காலை 10 மணிக்கு பணியை தொடங்கிவிடுகிறார். அவரது வீட்டு முன்வாசல், வாசற்படி, சமையலறை தொட்டியின் கீழ் என எங்கும் புடவை பண்டில்கள் விரவிக் கிடக்கின்றன. கட்டிலுக்கு அடியில் கூட திணிக்கப்பட்டுள்ளன. வேகமாக ஒரு இளஞ்சிவப்பு - நீல நிற பாலிஸ்டர் புடவையை பிரிக்கும் ரேணுகா, அறைக்கு வெளியிலுள்ள தண்ணீர் குழாயில் அதைத் தொங்கவிடுகிறார்.
அருகே உள்ள வேத் சாலை உற்பத்தி ஆலையிலிருந்து இப்புடவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இயந்திரங்களில் புடவைகளுக்கு எம்பிராய்டரி செய்யும்போது பாலியஸ்டர் துணியின் பின்புறம் தளர்வான நூல்கள் தொங்கும். இவற்றை கவனமாக இழுத்து சரிசெய்துவிட்டு துணியை தேய்க்கவும், மடிக்கவும் செய்ய வேண்டும். அதன் பிறகே ஜவுளி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இங்கு தான் ரேணுகா போன்ற பணியாளர்களின் வேலை தொடங்குகிறது.
ஆள்காட்டி விரல், கட்டை விரலைக் கொண்டு தொங்கவிடப்படும் 75 புடவைகளில் தொங்கும் நூல்களை இழுக்கிறார். பாலிஸ்டர் பட்டு போன்ற விலை உயர்ந்த புடவையாக இருந்தால் தளர்வுற்ற நூல்களை கத்தி கொண்டு நறுக்குகிறார். “ஒவ்வொரு புடவைக்கும் ஐந்து முதல் ஏழு நிமிடங்களை செலவிடுகிறேன்,“ என்கிறார் அவர். “அதிகமாக நூல்களை இழுத்துவிட்டால் துணியை சேதப்படுத்திவிடும், பிறகு புடவைக்கான செலவையும் ஒப்பந்ததாரரிடம் நானே ஏற்க வேண்டிவரும். எனவே மிகவும் கவனமாக இருப்பேன்.“
ஒரு புடவைக்கு ரூ.2 வீதம் தினமும் ரூ.150 சம்பாதிக்கிறார் ரேணுகா. சில சமயம் ஏற்படும் தவறுகளால் கிட்டதட்ட ஐந்து நாள் ஊதியத்தையும் இழக்க நேரிடுகிறது. “தினமும் [எட்டு மணி நேரம்] செய்யும் வேலையின் முடிவில் என் கைவிரல்களில் எரிச்சல் ஏற்படும்,“ என்கிறார் அவர்.









