“நீங்கள் சீக்கிரமே வந்துவீட்டீர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக மாலை 4 மணிக்கு முன் அவர்கள் வருவதில்லை. ஹார்மோனியம் வாசிக்க கற்றுக் கொள்வதற்காக நான் இந்த நேரத்திற்கு வந்துள்ளேன்,” என்கிறார் பியூட்டி.
‘இது‘ பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டம் முஷாலி வட்டாரத்தில் உள்ள மிக பழமையான சதுர்புஜ் ஸ்தான் விபச்சார விடுதி. ‘இந்நேரம்‘ நான் அவரை சந்தித்தபோது காலை 10 மணி. மாலை நேரங்களில் தான் அவரை வாடிக்கையாளர்கள் சந்திப்பார்கள். பியூட்டி - வேலைக்காக சூட்டப்பட்ட பெயர். 19 வயது பாலியல் தொழிலாளி ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொழிலில் உள்ளார். இப்போது அவர் மூன்று மாத கர்ப்பம்.
இப்போதும் அவர் தொழிலை தொடர்கிறார். அத்துடம் ஹார்மோனியம் வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். “என் குழந்தைக்கு இசை நல்ல தாக்கத்தை தரும் என என் அம்மா சொல்வார்” என்கிறார்.
அவர் பேசிக்கொண்டே ஹார்மோனிய பொத்தான்களை விரல்களால் அழுத்தியபடி, “இது எனக்கு இரண்டாவது குழந்தை. எனக்கு ஏற்கனவே இரண்டு வயதில் மகன் இருக்கிறான்” என்கிறார்.
அவரது பணியிடத்தில் பாதியளவுக்கு, பெரிய மெத்தை போடப்பட்டுள்ளது. பின்னால் சுவற்றில் 6க்கு 4 அடி அளவுள்ள கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. அறை 15க்கு 25 அடி நீள, அகலம் கொண்டிருக்கலாம். வாடிக்கையாளர்கள் அமரவும், சாய்ந்து கொள்ளவும் மெத்தையில் குஷன்கள், திவான் தலையணைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில்தான் வாடிக்கையாளர்க அமர்ந்துகொண்டோ, சாய்ந்துகொண்டோ இப்பெண்கள் ஆடும் முஜ்ரா நடனத்தை ரசிப்பார்கள். இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு முன்பே இந்த நடன முறை தோன்றிவிட்டது. சதுர்புஜ் ஸ்தானும் முகலாயர் காலம் முதலே இருந்து வருகிறது. விபச்சார விடுதியில் உள்ள சிறுமிகள், பெண்கள் அனைவருக்கும் முஜ்ரா ஆட தெரிந்திருக்க வேண்டும். பியூட்டிக்கும் முஜ்ரா தெரியும்.












