ராம் வக்சௌரே தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சந்தையில் தினமும் காலையில் 275 மாணவர்கள் மற்றும் பிறருக்கு தேவையான காய்கறிகளை வாங்குகிறார் - மூன்று கிலோ உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், தக்காளி மற்றும் பல. "ஒவ்வொரு காய்கறியின் விலையும் மனப்பாடமாக எனக்குத் தெரியும். எனது மோட்டார் சைக்கிளில் காய்கறி பைகளை தொங்கவிட்டு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்வேன்", என்கிறார் வீர்காவுன் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் இந்த ஆசிரியர்.
ஜூன் மாதம் அகமதுநகரின் அகோலா தாலுகாவிலுள்ள கலாஸ்கவுன் கிராமத்தில் வசிக்கும் 44 வயதாகும் வக்சௌரே, 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீர்கவுனில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டார். கலாஸ்கவுன் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக அவர் கடந்த 18 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறார். இப்போது அவரது முக்கிய கடமை மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது ஆகும் (துவக்கப் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் இதை செயல்படுத்த வேண்டும்).
"தலைமை ஆசிரியரால் எல்லாவற்றையும் செய்ய முடியாது, எனவே அவர் பொறுப்புகளை பிரித்து ஒப்படைத்துள்ளார்", என்று அப்போது அவர் நிரப்பிக் கொண்டிருக்கும் மதிய உணவு பதிவேட்டிலிருந்து கண்ணெடுத்தும் பாராமல் கூறுகிறார். "அரசாங்க வேலையில் இருப்பது ஒரு வகையில் பாதுகாப்பு அளித்தாலும் நான் ஒரு ஆசிரியராகவே உணரவில்லை" என்று கூறுகிறார்.
வக்சௌரேவுக்கு வழங்கப்படும் கல்வி சாராத பணிகள் வழக்கமானதே - மகாராஷ்டிராவில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இத்தகைய கல்வி சாராத பணிகள் அடிக்கடி ஒதுக்கப்படுகிறது. இது அவர்கள் கல்வி கற்பிக்கும் நேரத்தை குறைத்து விடுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஏழாம் வகுப்பு வரை கொண்ட வீர்காவுன் பள்ளியில் வக்சௌரேவுடன் பணியாற்றுபவரான 42 வயதாகும் சபாஜி தாதிர், இந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வேலைகள் வழங்கப்பட்டு இருக்கின்றது என்று கூறுகிறார். சராசரியாக ஒரு வாரத்திற்கு 15 மணி நேரம் கல்வி சாராத பணிகளில் தான் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறுகிறார். அவை பெரும்பாலும் பள்ளி நேரத்துடன் ஒத்துப் போவதாகவும் (ஒரு நாளைக்கு 4 மணி நேரம்) கூறுகிறார். "நாங்கள் எங்களால் முடிந்த வரை பள்ளி நேரத்திற்குப் பிறகு வேலை செய்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடிக்க முயற்சிக்கிறோம்". ஆனால் இரண்டு வேலைகளும் ஒத்துப் போகின்ற வேளையில் கல்வி சாராத பணிகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.









