“திங்கட்கிழமை (மார்ச் 16) முதல் எங்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. எங்கிருந்து நாங்கள் பணத்தை கொண்டு வருவது?”, 5 ரூபாய் கேட்டுக்கொண்டிருக்கும் தன் 7 வயது பேத்தியைச் சுட்டிக்காட்டி கேட்டிகிறார் வந்தனா உம்பர்சதா.
பல்கர் மாவட்டத்தில் கவடேபாடாவில் தன் முற்றத்தில் அமர்ந்துக்கொண்டு, 55 வயதாகும் வந்தனா கேட்கிறார் - “எங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வெளியில் ஏதோ நோய் பரவிகிறது, அதனால் வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என அரசு கூறியிருப்பதாக என் மகன் சொல்கிறான். எங்களையும் வீட்டில் இருக்கும்படி கூறுகிறான். வந்தனா, மகாரஷ்ட்ராவில் வடா தாலுகாவிலுள்ள பல்வேறு கட்டுமான தளங்களுக்கு பணிக்கு செல்பவர்.
மாலை 4 மணி. வந்தனாவின் அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டு வாசல் முன் கூடி, பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர், குறிப்பாக தற்போதைய கோவிட் 19 நெருக்கடி குறித்து. அவர்களில் ஒரு இளம்பெண் மட்டும், பேசும்போது ஒருவருக்கொருவர் தள்ளி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். கவடேபாடாவில் கிட்டதட்ட 70 வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் அனைவரும், ஆதிவாசியின் வர்லி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
என் மகன்களுக்கும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. நாங்கள் வேலை எதுவும் செய்யாமல் உணவு வாங்க வேண்டும்; எங்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்? எங்களிடம் இருக்கும் மளிகை பொருட்களும் தீரும் நிலையில் உள்ளது. நாங்கள் என்ன வெறும் சட்னியை மட்டும் செய்து, எங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதா? இந்த நிலை விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.”
வந்தனாவுக்கு மூன்று மகன்கள், 11 பேரக்குழந்தைகள். அவரின் மகன்கள் வடாவில் செங்கல் சூளை அல்லது கட்டுமான தளங்களில் வேலை செய்கின்றனர். இந்த தாலுகாவில் 168 கிராமங்கள் உள்ளன; அதில் 154,416 மக்கள் உள்ளனர். வந்தனாவின் கணவர் லக்ஷ்மண், அதீத குடிப்பழக்கம் காரணமாக பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி 15 வருடங்களுக்கு முன்னர் இறந்து போனார். அவர் ஒரு சிறுக் கடையில் வேலை பார்த்துவந்தார் .
கவடேபாடாவிலிருந்து பலரும் அவ்வப்போது கிட்டதட்ட 90 கிலோமீட்டர்கள் தூரம் இருக்கும் மும்பைக்கு, தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு செல்கின்றனர். “என் மகனும் மருமகளும் பிவந்தியில் இருக்கின்றனர் (பாடாவில் இருந்து 45 கிலோமீட்டர்) ; மூன்று மாதங்களாக ஒரு கட்டுமான தளத்தில் தினக்கூலி வேலை செய்கின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு உணவு அளிக்கவும், பார்த்து கொள்வதும் என் பொறுப்பு. இப்போது பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்களுக்கு மதிய சத்துணவு கூட கிடைக்காது”,என்கிறார் வந்தனா.
அவரின் இரண்டாவது மகன் மாருதி, 32, வடா நகரத்தில் கட்டுமான தளங்களில் வேலை செய்கிறார். அவர் கூறுகையில், “இந்த அரசு எல்லா இடங்களிலும் நோய் பரவுவதை தடுக்க எல்லாவற்றையும் மூடிவிட்டது.”. இவருக்கும் மார்ச் 16ஆம் தேதி முதல் வேலை கிடைக்கவில்லை.
”செய்தி தொலைகாட்சிகளில், நாம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சோப்பு மற்றும் நிறைய தண்ணீர் கொண்டு கழுவி இந்த நோயை விரட்ட முடியும் என்று காட்டுகிறார்கள். ஆனால், முதலில் நாங்கள் பசியால் இறந்துப்போனால், எங்கள் உயிர்களை சோப்பு காப்பாற்றாது.”
அவர் தன் தாய், மைத்துனி வைஷாலி, மனைவி மனிஷா (இருவரும் வீட்டில் இருப்பவர்கள்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன், கவடேபாடாவில் 12/12 அடி நீள வீட்டில் வசிக்கிறார். “ஒவ்வொரு வாரமும் என் மைத்துனியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும். அவருக்கு அதிகமான நீரிழிவு நோய் உள்ளது; தொடர்ந்து ஊசி போட வேண்டும். ஒரு இன்சுலின் ஊசிக்கு ரூ.150. நாங்கள் தினக்கூலியில் தான் வாழ்கிறோம். இப்போது எந்த வேலையும் இல்லாமல் எங்கள் குடும்பம் எப்படி பிழைக்கும்?”
மனிதா உம்பர்சாதா, 48, வந்தனாவுக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர், அந்த மதியம் பேசுவதற்காக கூடியவர்களுள் ஒருவர். அவரும் எட்டு மணி நேர உழைப்புக்கு தினமும் 200 ரூபாய் வாங்குபவர். கட்டுமான தளங்களில் அதிக எடையுடைய பொருட்களை ஏற்றியிறக்கும் பணி! “ஆனாலும், அந்த வேலை விவசாய வேலையை விட சிறந்ததாக இருந்தது. குறைந்தபட்சம் இங்கு எங்களுக்கு சரியான நேரத்திற்கு பணம் கிடைத்துவிடும்; முழுநாளும் வெயிலில் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை ; ஆனால், இப்போது வடாவில் யாரும் எங்களுக்கு வேலை அளிப்பதில்லை. அதனால், அருகில் ஏதாவது விவசாய வேலை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்”.
இந்த மாதம் மீதமிருக்கும் தானியங்கள் இருக்கிறது. வரும் நாட்களில் என்னாகும் என்று தெரியவில்லை
மனிதாவின் கணவர் பாபு, 50, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நீரிழிவு நோய் காரணமாக ஒரு காலை இழந்தார். குத்தகைகாரர் விவசாயியாக இருந்தவர் அன்றிலிருந்து பணிக்கு செல்வதில்லை. அவர்களுக்கு ஐந்து மகன்கள்; வடாவில் கட்டுமான தளங்களும், சிறிய தொழிற்சாலைகளிலும் பணி செய்கின்றனர். அவரின் இளைய மகன் கல்பேஷ், 23, மாதம் 7000 ரூபாய் சம்பளத்திற்கு பைப்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிக்கிறார். “அவர்கள் பணிக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளனர். எங்களுடைய சம்பளத்தை பிடித்தம் செய்வார்களா அல்லது கொடுப்பார்களா என்று தெரியவில்லை” என்று கவலையுடன் கூறுகிறார்.
அவர்கள் குடும்பத்தில் ஆறு பேரக்குழந்தைகள் உட்பட 15 பேர். தற்போது யாருக்கும் வருமானம் இல்லை. அவர்கள் தற்போது ஏற்கனவே சேமித்துவைத்த மளிகைப் பொருட்கள் வைத்து சமாளிக்கின்றனர். ஆனால், கையில் வேலையும், பணமும் இல்லாமல், இனி வரும் நாள்களில் எப்படி அவர்கள் பிழைப்பார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
மூன்று வீடுகள் தள்ளி இருக்கும் சஞ்ஜய் தும்டா, 18 வயது, மார்ச் 17ம் தேதியில் இருந்து வருமானம் இல்லாமல் இருக்கிறார். அவர் தினக்கூலியாக ரூ.300-400க்கு மாதம் 20 நாள்கள் பல்கர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் பணி செய்கிறார். வடாவிலுள்ள தொழிலாள ஒப்பந்தகாரர் ஏதாவது வேலை இருந்தால் சொல்வதாக கூறியிருக்கிறார். ஆனால், அவர் ஒருவாரமாக வரவில்லை. சஞ்ஜய் கூறுகையில், “இந்த மாதம் முழுவதும் அனைத்து கடைக்களும் மூடப்பட்டு இருக்கும் என்று செய்தி தொலைகாட்சிகளில் கூறுகின்றனர். எங்களிடம் உணவு தானியங்கள் ஏற்கனவே குறைவாக இருக்கின்றது. அடுத்த வாரம், அதுவும் தீர்ந்துவிடும்”, என்கிறார்.
கட்டுமான தளங்களில் பணி செய்யும் அஜய் போச்சல், 20, அதே போல் கவலை தெரிவிக்கிறார். ”என் தாய் இரண்டு நாள்களாக முருங்கை சப்ஜி மட்டுமே செய்கிறார். எனக்கு விரைவில் பணி கிடைக்கவில்லை எனில், மற்றவர்களிடம்தான் நாங்கள் பணம் கேட்க வேண்டி இருக்கும். அஜய் தாயார் சுரேகா, 42, சில மாதங்கள் முன்புதான் உடல் சோர்வு காரணமாக வீட்டு வேலை செய்வதை நிறுத்திக்கொண்டார். அவரின் கணவருக்கு குடிப்பழக்கம் அதிகம், சில காலமாகவே அவர் பணிக்கு செல்வதில்லை.
அவரின் குடும்பத்துக்கான உணவு பொருட்களில் கிட்டதட்ட தீர்ந்தே விட்டது. “அரசு திட்டமான பொது விநியோக முறை திட்டத்தின்கீழ் மாதம் நாங்கள் 12 கிலோ (கிலோ ரூ.2க்கும்) கோதுமையும், 8 கிலோ அரிசியும் (கிலோ ரூ.3க்கு) வாங்குவோம். இப்போது எங்களுக்கு அவை வாங்க பணம் வேண்டும். ஒவ்வொரு மாதம் 10ம் தேதியன்று வடாவிலுள்ள பொது விநியோக கடையில் பொருட்கள் வரும். அந்த தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் பொருட்கள் தீர்ந்துபோனால் நாங்கள் நியாய விலை கடைக்கு செல்வோம். சென்ற வாரம் மார்ச் 20ம் தேதி, அவர்கள் சேமித்தவை கிட்டதட்ட தீர்ந்துவிட்டது. நான் இரண்டு நாள்கள் முன்னர், அஜய் உடன் பேசுகையில், அவர்களின் குடும்பத்திற்கு இன்னும் உணவு பொருட்கள் கிடைக்கவில்லை. அவர்களிடம் இரவு உணவுக்கு கொஞ்சம் அரிசியும் பருப்பும் உள்ளது. தன் அம்மாவுக்கு அருகில் இருக்கும் விவசாய நிலங்களில் வேலை கிடைக்கும் என்று அஜய் நம்புகிறார்.
“தினக்கூலி பணியாளர்களின் உடனடி பிரச்சனை கோவிட் 19 இல்லை. அவர்களுக்கு சாப்பிட ஏதுவும் கிடைக்காது என்பதுதான் பயமே.”, என்கிறார் மும்பை பரேல் பகுதியிலுள்ள ஏ.இ.எம் மருத்துவமனையில் பணியாற்றும் அறுவை சிகிச்சை நிபுணரும் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்டுமான டாக்டர் அவினாஷ் சுபே கூறுகிறார். “தொழிலாளர்கள் வாழ அவர்களுக்கு தினக்கூலி தேவை. ஆனால், அவர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்ப செல்லாமல் இருப்பது அவசியம். அவர்கள் நகரங்களில் இருந்து தங்கள் ஊர்களுக்கு சென்றால் அங்கும் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. நாம் மக்களிடையே இந்த வைரஸ் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதற்கான முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கவடேபாடாவில் வசிப்பவர்களுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் (பி.எச்.சி) வடா நகரில் உள்ளது. " எங்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான எந்த சோதனைகளையும் நடத்த இங்கு வசதி இல்லை. நாங்கள் ஒரு எளிய இரத்த பரிசோதனையை மட்டுமே செய்ய முடியும், ” என்கிறார் வடாவில் உள்ள அரசு கிராமப்புற மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஷைலா அதாவ். "இந்த வைரஸ் மேலும் பரவுவதை நாங்கள் தடுக்க வேண்டும், அதற்கு ஒரே வழி - தனிமைப்படுத்து கொள்வதுதான்."
ஆனால் கவடேபாடாவில் வசிப்பவர்களுக்கு, வேலை, வருமானம் மற்றும் உணவை விட தனிமைப்படுத்திக்கொள்வது இப்போது அவசியமாகப்படவில்லை . "மோடி அரசு வைரஸ் பரவுவதால் எல்லாவற்றையும் மூடி வைத்து வீட்டிலேயே இருக்குமாறு கூறுகிறார்" எனக் கூறும் வந்தனா கவலையுடன் கேட்கிறார் - “ஆனால், நாங்கள் எப்படி வீட்டிலேயே இருக்க முடியும்”.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்