கிருஷ்ணா மாவட்டம் வட்லமானு கிராமத்தில் 2.5 ஏக்கர் குத்தகை நிலத்தில் ராமகிருஷ்ண ரெட்டி சோளம் பயிரிட்டுள்ளார். அவரும் மற்ற எட்டு விவசாயிகளும் ஹைதராபாத்தின் IML விதை நிறுவனத்திற்கு விற்பதற்காக ஆந்திராவில் உள்ள அகிரிபள்ளே மண்டலத்தில் உள்ள கிராமத்தில் 30 ஏக்கரில் சோளம் பயிரிட்டனர். “நாங்கள் செப்டம்பர் 2016-ல் பயிரிட்டு, விதைகளை [சுமார் 80 டன்கள்] மார்ச் 2017-ல் விற்றோம். ஒரு வருடத்திற்கு மேலாகியும், எங்கள் ஒன்பது பேருக்கும் கொடுக்க வேண்டிய 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்டத் தொகையை நிறுவனம் கொடுக்கவில்லை,” என்கிறார் 45 வயதான ராமகிருஷ்ணா.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அந்த நிறுவனம், விவசாயிகளுக்குக் கலப்பின விதைகளை வழங்குகிறது. விதை விவசாயிகள் அவற்றை வளர்த்து, பெருக்கப்பட்ட விதைகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்கிறார்கள். நிறுவனம் அவற்றை, லாபத்துக்கு நடவு விவசாயிகளிடம் சந்தையில் விற்பனை செய்கிறது. விதை விவசாயிகள் நிறுவனத்திடமிருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டியப் பணத்தைப் பூச்சிக்கொல்லிகளாகவும் 24 முதல் 36 சதவிகிதம் வருடாந்திர வட்டி விகிதக் கடனாகவும் பெறுகிறார்கள். கடனும் வட்டியும் விவசாயிகள் பெறும் இறுதித் தொகையிலிருந்து கழிக்கப்படும்.
நிறுவனம் மார்ச் இறுதிக்குள் பணம் செலுத்த வேண்டும், ஆனால் பணம் வழக்கமாக 2-3 மாதங்களுக்குப் பிறகு வரும். 2017-ம் ஆண்டுக்கானப் பணத்தை விவசாயிகளுக்கு நிறுவனம் கொடுக்கவில்லை. கொடுக்கப்படாத நிலுவைத் தொகை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகளுடன் பொருந்தாத விலைகள், பல மக்காச்சோள விதை விவசாயிகளை கடனில் தள்ளியது. சிலர் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் நேர்ந்தது.
வட்லமானு கிராமத்தின் ஒன்பது விவசாயிகளில் ஒருவரான 40 வயது பில்லி ஸ்ரீனிவாஸ், 15 ஆண்டுகளாக மக்காச்சோள விதைகளை பயிரிட்டவர். “எனக்கு [தனியார் வட்டிக்காரர்களிடம்] மொத்தம் 15 லட்ச ரூபாய் கடன் உள்ளது. எனக்கு சொந்தமாக அதிக நிலம் இல்லாததால் ஆண்டுக்கு 15,000 ரூபாய் குத்தகையாக செலுத்துகிறேன். அதனால் விவசாயத்தை விட்டுவிட்டு விவசாயக் கூலி வேலை செய்ய முடிவு செய்தேன். ஸ்ரீனிவாஸ் இப்போது தினசரி ஊதியமாக ரூ. 250-300 ஈட்டுகிறார். தனக்குச் சொந்தமான அரை ஏக்கரை விற்று கடனைச் அடைக்க முடியும் என்று நம்புகிறார்.





