18 வயதில் 12ஆம் வகுப்பு முடித்த பிறகு பண்டலா லக்ஷ்மணா ராவ் கல்வியைத் தொடர முடியவில்லை. “என்னிடம் சாதிச் சான்றிதழ் கேட்டார்கள் [அஸ்வராவ்பேடா நகர பட்டப் படிப்பு கல்லூரியில் சேர்வதற்கு]. என்னிடம் இல்லை என்பதால் படிப்பை பின்தொடர முடியாமல் போனது,” என்கிறார் அவர்.
இப்போது 23 வயதாகும் லக்ஷ்மனா தனது குடும்பத்தின் ஒரு ஏக்கர் பொது நிலத்தில் [வன நிலத்தை விளைச்சலுக்கு பயன்படுத்துவது] வேலை இல்லாதபோது நயகுலகுடம் குக்கிராமத்தில் விவசாய தொழிலாளியாக வேலை செய்கிறார்.
ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் டி. நரசபுரம், சிந்தலபுடி மண்டலங்களைச் சேர்ந்த 30 கிராமங்களில் வசிக்கும் நாயக்போட் பழங்குடியினருக்கு சொல்வதற்கு என இதுபோன்ற பல கதைகள் உள்ளன. 18 வயதாகும் குசினி சீதா மற்றும் குசினி நாகமணியும் அவர்களின் குக்கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மர்ரிகுடேமில் பழங்குடியின உறைவிட பள்ளியில் பட்டியலின பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டதால் 5ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். “எங்களால் மேற்கொண்டு படிக்க முடியாது,” எனும் நாகமணி “எங்களுக்கு திருமணமாகிவிட்டது. நாங்கள் பொது நிலத்தில் அல்லது பிறருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்ய வேண்டும்,” என்கிறார்.
நாயகுலகுடம் குக்கிராமத்தில் (பழங்குடியினரால் பெயரிடப்பட்டது) வசிக்கும் சுமார் 100 நாயக்போட் குடும்பங்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் நெல், ரஜ்மா போன்ற பயிர்களை பயிரிடுகின்றனர். வாழ்வாதாரத்திற்கு வனத்தை நம்பியுள்ள இவர்கள் தேன்களை சேகரிக்கின்றனர் அல்லது முடைவளிமா என்னும் விலங்கினத்தை (உணவிற்காக) வேட்டையாடுகின்றனர், அவற்றை டி நரசபுரம் நகரில் உள்ள வாரச் சந்தையில் விற்கின்றனர்.






