சுமார் மாலை 7 மணி அளவில், தங்க வெள்ளி ஜரிகை மற்றும் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்ட ஒரு பாவடையை பிடித்த படி நிர்மலா தேவி உதய்பூரின் பாகூர் மாளிகையில் உள்ள மேடையில் ஏறினார். அங்கு அவர், அவரது மகள் தாரா மற்றும் சுமார் பிற 8 பெண்களுடன் - அனைவருமே ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் - அவர் சாரி நடனம், கூமர், பாவை மற்றும் பல நடன முறைகளை நிகழ்த்தத் துவங்குகிறார்.
"ஒவ்வொரு நாளும் அதே வேகத்துடன் நடனம் ஆடுவது எளிதானது அல்ல", என்று அவர் கூறுகிறார். பற்களுக்கு இடையில் வாள்களை வைத்துக் கொண்டு நடனமாடுவது அல்லது தலையில் வைக்கப்பட்டுள்ள ஒரு உலோக பாத்திரத்தின் மேல் எரியும் எண்ணெய் விளக்கை வைத்துக் கொண்டு நடனமாடுவது அல்லது கண்ணாடித் துண்டுகளின் மீது நடனமாடுவது அல்லது தலையில் மண் பானைகளை சுமந்து கொண்டு ஆடுவது ஆகியவற்றின் போது அது இன்னும் சிரமம் ஆகிறது. இருப்பினும், நிர்மலா மற்றும் அவரது குழுவினர் - அக்குழுவில் அவரின் நாத்தனார் சீமா தேவி மற்றும் மாமியார் பாம்ரி பாய் ஆகியோரும் அடங்குவர் - ஒவ்வொரு நாள் மாலையும் அதைச் செய்கின்றனர். "எனது நாத்தனார் தனது தலையில் பதினோரு பானைகளை சுமந்து கொண்டு நடனம் ஆடுவார். ஆட்டத்தின் முடிவில் அவரது உச்சி முதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியிருக்கும்", என்று நிர்மலா கூறுகிறார். "இருந்தாலும், அவர் மேடையில் புன்னகைத்துக் கொண்டே ஆடுவார், மேலும் மாற்றும் அறைக்கு திரும்பிச் சென்று அடுத்த நடனத்திற்கும் அவர் தயாராகிறார்", என்று கூறுகிறார்.
ஆனால் நடன கலைஞர்களின் சமூகமான காமத் (பட்டியல் இனமாகப் வகைப்படுத்தப் பட்டுள்ளது) தேரா தாளி நடனத்திற்காகத் தான் நன்கு அறியப்படுகிறது. இந்தப் 10 - 15 நிமிட நடன முறை, மாளிகையில் நடக்கும் ஒரு மணி நேர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும், இது உள்ளூர் நாட்டுப்புறத் தலைவர் ஒருவரான பாபா ராம்தேவுக்கு காணிக்கையாக செய்யப்படுகிறது. அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக இச்சமூகத்தின் புராணக்கதைகள் கூறுகின்றது.







