மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டம் நிம்பாவலி எனும் எனது கிராமத்தில் நடுத்தர வயதினர் ஒரு மரத்தினடியில் திரண்டனர். அவர்கள் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்கின்றனர். அந்நிகழ்வுகளின் தாக்கங்கள் இன்றும் உணரப்படுகின்றன. அரசு அலுவலர்கள் காகிதங்கள், அளவீட்டு கருவிகள், ரூலர்கள், டேப்புகள் ஆகியவற்றுடன் பெரிய காரில் வந்திறங்கினர். அவர்கள் நிலத்தடி நீருக்கான ஆதாரமான இடத்தை தோண்டுவதற்காக தேடினர், என்று நினைவுகூர்ந்தார் என் தந்தையான 55 வயது பரஷூராம் பரேட்.
“அவர்களை எனக்கும் நினைவிருக்கிறது. என்ன செய்கிறீர்கள் என்று பலமுறை கேட்டபிறகு, அவர்கள் பதிலளித்தனர், ‘உங்களுக்கு தண்ணீர் வேண்டும்தானே?’ நாங்கள் வேண்டும் என்றோம். யாருக்கு தான் தண்ணீர் தேவைப்படாது?,” பாபா நினைவுகூர்ந்தார். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் ஒரு பகுதியில் அரசின் சார்பில் ஏதேனும் நீராதாரம் கண்டறியப்பட்டால் மகிழ்ச்சி தான். ஆனால் கிராமத்தினர் கொண்ட மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
சில மாதங்களில் வாடா தாலுக்கா நிம்பாவலியின் வார்லி மக்கள் இடத்தை காலி செய்யுமாறு அறிவிப்பாணை வந்தது. தண்ணீர் திட்டம் எதுவும் கிடையாது. மாறாக மும்பை – வதோதரா தேசிய விரைவு நெடுஞ்சாலைக்கு கிராம நிலம் ஒதுக்கப்பட்டது.
“அப்போதுதான் எங்களுக்கு நெடுஞ்சாலையைப் பற்றி தெரியவந்தது,” என்றார் 50 வயது பால்க்ருஷ்னா லிபாட். அது 2012. பத்தாண்டுகள் ஆகியும் எனது கிராம மக்கள் ஏமாற்றி நிலம் கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசை எதிர்த்துப் போராடி தோற்றுப் போவோம் என்பதை புரிந்துகொண்ட கிராமத்தினர், அதிக இழப்பீடு, மாற்று நிலம் போன்ற கோரிக்கைகளை கைவிட்டு, ஒட்டுமொத்த கிராமத்திற்கும் முறையான மறுகுடியமர்த்தல் என்ற கோரிக்கையுடன் முடித்துக் கொண்டனர்.





