டிரக்கில் வைக்கப்பட்டுள்ள, சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பத்து அடி உயர கணேசா சிலையின் ஒரு கை உயர்த்தி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது, சங்கர் மிர்ட்வாட் அதில் களிமண்ணைப் பயன்படுத்தி இறுதிகட்ட வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். தேங்காய் மட்டை மற்றும் பிளாஸ்டர் சாக்குகள் பரவிக்கிடக்கின்றன, வர்ண பாட்டில்களுக்கு அடுத்ததாக ரப்பர் சாய கொள்கலன்களும், சிலை சட்டங்களும் இருக்கின்றனர். “சில இடங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பூசப்பட வேண்டியுள்ளது. அதை முடித்தால், சிலை வர்ணம் பூசுவதற்கு தயாராகிவிடும்” என்று சங்கர் கூறுகிறார்.
பழைய ஹைதராபாத் நகரின் பரபரப்பான தூல்பெட் பகுதியில் உள்ள மங்கள்ஹாட் சாலையில் செய்து முடித்துவிட்ட மற்றும் தயாராகிக்கொண்டிருக்கும் சிலைகள் வரிசையாக அடிக்கிவைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பின்னால், தார்ப்பாய் மற்றும் மூங்கில் போடப்பட்டுள்ள கொட்டகையில் அவர் வேலை செய்து கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது. குறுகலான சந்துகளில், டிரக்குகளும், டெம்போக்களும் பெரிய மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை சுமந்து நத்தையைப்போல் ஊர்ந்து செல்கின்றன. இங்கு செய்யப்படும் பெரிய விநாயகர் சிலைகள் 21 அடி உயரம் கொண்டவை. தார்ப்பாயால் மூடப்பட்டு, ஆண்கள் பாடிக்கொண்டே அவற்றை வைக்க வேண்டிய பொது பந்தல்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ எடுத்துச்செல்வார்கள்.
ஜீன் மாத இறுதி வாரத்தில் இருந்து சங்கர் இந்த கொட்டகையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இதன் உரிமையாளர் தற்போது வெளியூர் சென்றுள்ளதாகவும், அவர் இதுபோன்று மூன்று இடங்களில் பட்டறை வைத்துள்ளதாகவும் சங்கர் கூறுகிறார். ஒவ்வொரு இடத்திற்கும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் அவர் சென்று பார்த்தபோது, இந்தாண்டு செப்டம்பர் மாத இறுதியில் வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக, 2 முதல் 3 கலைஞர்கள் சிலை தயாரித்துக்கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.
சிற்பிகளின் மற்றொரு பகுதியினர் தூல்பெட்டிற்கு ஜனவரி மாத வாக்கில் வந்து ஏப்ரல் மாதத்தில் வீடு திரும்புவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் இதேபோல் செய்வதாக சங்கர் கூறுகிறார். “எங்கள் கடைக்கு நாங்கள் கொல்கத்தாவைச்சார்ந்த சிற்பியை வரவழைப்போம்” என்று அவர் கூறுகிறார். “அவர் நன்றாக அரைக்கப்பட்ட மண்ணை வைத்து சிலை வடிப்பார். ஒரு பெரிய சிலையை செய்து முடிப்பதற்கு அவருக்கு 25 நாட்கள் தேவைப்படும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.






