”இல்லை; இந்த ஊரடங்கு உத்தரவு எங்களுக்கு பொருந்தாது; நாங்கள் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்க முடியாது. அனைத்துக்கும் மேலாக, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்; அதற்கு நாங்கள் இந்த நகரத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்”, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தூய்மை பணியாளரான தீபிகா இப்படி கூறுகிறார்.
மார்ச் 22 அன்று, சுகாதார துறைச் சார்த்த ஊழியர்களுக்கு நன்றிக் கூற கூட்டம் கூடியதை தவிர்த்து கிட்டதட்ட மொத்த நாடும் 'மக்கள் ஊரடங்கு’ நாளன்று வீட்டில் இருந்தனர்! நாம் நன்றியுணர்வை வெளிப்படுத்துப்பவர்களுள், நகரத்தைக் கூட்டி பெருகி, சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களும் அடக்கம். “எங்களின் சேவை முன்பை விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது. நாங்கள் சாலைகளில் இருக்கும் வைரஸை துடைத்து எடுக்கிறோம்”, என்கிறார் தீபிகா.
ஏனைய நாள்கள் போலவே, தீபிகாவும் மற்றவர்களும் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தெருக்களைச் சுத்தம் செய்கின்றனர். மற்ற நாள்களை போல் அல்லாமல், வழக்கத்தை விட விஷயங்கள் மிகவும் மோசமாகின. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க, அவர்கள் பணியிடங்களுக்கு வர, குப்பை வண்டிகளில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி வரவேண்டியுள்ளது. மேலும் சிலர் பணியிடங்களுக்கு வர, பல கிலோமீட்டர்கள் நடக்க வேண்டியுள்ளது. “மார்ச் 22ம் தேதியன்று, என்னுடன் பணி செய்பவர்கள் வெகுதூரத்திலிருந்து வர முடியாததால், வழக்கமான நாள்களில் பெருக்கும் தெருக்களைவிட, அதிகமாக செய்யவேண்டி இருந்தது.” என்று கூறுகிறார் தீபிகா.
இந்த புகைப்படத் தொகுப்பில் இடம்பெற்று இருக்கும் பெண்கள், அண்ணா சாலையில் ஒரு பகுதி, ஆயிரம் விளக்கு மற்றும் ஆழ்வார்பேட்டை போன்ற மத்திய மற்றும் தென் சென்னை பகுதிகளில் வேலை செய்பவர்கள். இவர்கள் பெரும்பாலும், வட சென்னையிலுள்ள தங்களின் வீடுகளிலிருந்து இந்த பகுதிகளுக்கு வர வேண்டும்.
அவர்களுக்கு கிடைக்கும் நன்றியுணர்வு மிகவும் விசித்தரமானது. மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியான முதல், அவர்கள் விடுப்பில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அப்பணியாளர்கள் கூறுகின்றனர். சி.ஐ.டி.யுவுடன் இணைந்த சென்னை மாநகராட்சி கழகத்தின் சிவப்புக் கொடி யூனியனின் பொதுச் செயலாளரான பி.ஸ்ரீனிவாசலு கூறுகையில், “அவர்கள் இப்போது விடுப்பு எடுத்தால், பணியை துறக்க நேரிடும் என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், அது போதுமானதாக இல்லை அல்லது பேருந்து மிகவும் தாமதமாக வருகிறது. இதனால், குப்பைகளுக்காக இருக்கும் லாரிகளில் ஏறி அவர்கள் வர வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு, தூய்மை பணியாளர்கள் மாதம் ரூ.9000 சம்பாதிக்கின்றனர். ஆனால், சில நேரங்களில், அவர்களின் பயணத்திற்காகவே தினமும் 60 ரூபாய் செலவழிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில், அரசு பேருந்துகள் அல்லது மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் வாகனங்கள் கிடைக்காதவர்கள், நடந்தே தான் பணிக்கு வரும் நிலையில் உள்ளனர்.


















