டெல்லி நகரத்திற்கு வெளியே லால் குயானில் உள்ள புல் பெலாத் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் ‘தள்ளுவண்டி சிறுவன்’ அல்லது ‘சில்லி சிப்ஸ் சிறுவனை’ தெரிந்து வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் இளம் தள்ளுவண்டி வியாபாரி இவன்தான்.
குடிசை பகுதியில் உள்ள குறுகிய பாதை வழியாக அவன் செல்வதை நான் பார்த்துவிட்டேன். திறந்தவெளி சாக்கடையின் ஓரத்தில் காலியாக இருக்கும் இடத்தில் தனது தள்ளுவண்டியை நிறுத்துகிறான். வண்டி நகராமல் இருப்பதற்காக சக்கரத்தின் அடியில் கற்களை வைத்துவிட்டு அறைக்குள் செல்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது தள்ளுவண்டியில் வைத்து உருளைக்கிழங்கு சிப்ஸையும் மோமோஸையும் விற்கப்போகும் 14 வயதான அர்ஜூன் சிங்கிற்கு இது தினசரி வழக்கம்.
கூச்ச சுபாவம் கொண்ட, ஆனால் சுறுசுறுப்பான இந்த சிறுவன் கணவரை இழந்த தன் அம்மாவோடு வாழ்ந்து வருகிறான். அந்த சிறிய அறையின் உள்ளே எந்த மரச் சாமான்களும் இல்லை. அவர்களது வீட்டின் சுவற்றில் கண்ணாடி ஒன்று உள்ளது. அதன் மூலையில் இதய வடிவில் பழுப்பு நிற டேப் ஒட்டப்பட்டுள்ளது. அதில் லட்சுமி+அர்ஜூன் என எழுதப்பட்டுள்ளது. “இதை நான்தான் எழுதினேன். எங்கள் வீட்டிற்கு வரும் யாரும் எங்கள் உலகத்தை இதில் பார்ப்பார்கள்” என்கிறான் அர்ஜூன்.
இது தனிமையான, கடுமையான உலகம்.
ஜூலை 14, 2013 அன்று, இந்திராகாந்தி தேசிய கலை மையத்தில் உள்ள சாக்கடை குழியை சுத்தம் செய்யும் போது ராஜேஸ்வர் சிங் இறந்து போனார். 2011-ம் ஆண்டிலிருந்து அவர் அங்கு பணியாற்றி வருகிறார். விஷ வாயு தாக்கப்பட்டு இறந்த மூவரில் இவரும் ஒருவர். அசோக் குமார் மற்றும் சதிஷ் சிங் ஆகியோர் மற்ற இருவர். மூவருமே அரசாங்கம் நடத்தும் நிகழ்த்து கலை மையத்தின் ஒப்பந்த பணியாளர்கள். அதுமட்டுமல்ல, இறந்த மூவருமே வால்மீகி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு திரிலோகபுரியில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வந்தவர்கள். (கணவர் இறந்த பிறகு, திருமணமான தனது மகள் மினு வசிக்கும் லால் குயானுக்கு அர்ஜூனை அழைத்து சென்று விட்டார் லட்சுமி).




