தாக் மேளச் சத்தம் அகர்தாலாவில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அக்டோபர் 11ம் தேதி துர்கா பூஜை வருகிறது. அதைக் கொண்டாடுவதற்கான தயாரிப்புகள் பல வாரங்களுக்கு முன்பே ஒவ்வொரு வருடமும் தொடங்கி விடுகிறது. பந்தல்கள் கட்டப்படும். சிலைகள் செய்து முடிக்கப்படும். குடும்பங்கள் புதுத் துணிகள் வாங்கும்.
தாக் என்பது பீப்பாய் வடிவத்தில் இருக்கும் மேள வாத்தியம் ஆகும். கழுத்திலிருந்து தொங்க விடப்பட்டோ அருகே வைத்துக் கொண்டே குச்சிகளை வைத்து அந்த வாத்தியம் வாசிக்கப்படுவது இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு முக்கியப் பகுதி.
தாக் வாசித்தல் ஒரு குறிப்பிட்டக் காலத்துக்கான வேலை ஆகும். ஒவ்வொரு வருட ஐந்து நாள் பூஜையின்போதும் இறுதி வாத்திய வாசிப்பு லஷ்மி பூஜை அன்று நடக்கும். இந்த வருடம் அக்டோபர் 20ம் தேதி லஷ்மி பூஜை வருகிறது. சில தாகி வாத்தியக்காரர்களுக்கு தீபாவளி காலத்திலும் வேலை கிடைக்கும். ஆனால் துர்கா பூஜையின்போதுதான் தாக்குக்கு அகர்தலாவிலும் திரிபுரா மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அதிக தேவை எழும்.
தாக்கிகளை மேளம் வாசிக்க பந்தல் கமிட்டிகளும் கூப்பிடுவதுண்டு. குடும்பங்களும் கூப்பிடுவதுண்டு. சில நேரங்களில், வேலைக்கு அமர்த்துவதற்கு முன்னாலேயே அவர்களை வாசித்துக் காட்டச் சொல்லப்படுவதுண்டு. அவர்களில் பலர் மூத்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அக்கலையை பயின்றிருப்பர். “மூத்தவர்களுடன் சேர்ந்து நான் வாசிக்கத் தொடங்கினேன்,” என்கிறார் 45 வயது இந்திராஜித் ரிஷிதாஸ். “கஷியை (சிறு குச்சியால் தட்டி வாசிக்கப்படும் உலோகத் தட்டு போன்ற வாத்தியம்) நான் வாசிக்கத் தொடங்கினேன். பிறகு ‘தோல்’ வாத்தியமும் ‘தாக்’ வாத்தியமும் கற்று வாசிக்கத் தொடங்கினேன்.” (அவரும் ரிஷிதாஸ், ரவிதாஸ் முதலியோரின் குடும்பங்களும் முச்சி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள்.)
அகர்தாலாவின் பல தாகிகளை போல, இந்திரஜித்தும் வருடத்தின் பிற மாதங்களில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் வேலையைச் செய்கிறார். சில சமயங்களில் பிறரைப் போலவே அவரும் திருமணம் மற்றும் பிற கொண்டாட்டங்களில் வாசிக்கப்படும் ‘பேண்ட் வாத்தியக் குழு’வில் இணைந்து வாசிக்கிறார். இந்த வேலைகள் மட்டுமின்றி எலக்ட்ரீசியன் அல்லது ப்ளம்பர் முதலிய தினக்கூலி வேலைகளும் செய்கின்றனர். சிலர் காய்கறி விற்கின்றனர். சிலர் அருகே இருக்கும் கிராமங்களில் விவசாயிகளாக இருக்கின்றனர்.




















