மாலை நேரம், ஆறு மணி ஆகிறது. மாடுகள் வீடு திரும்பவேண்டிய நேரம்.. ஆனால், மசாய்வாடியில் இனி ஆறு மாதங்களுக்கு எந்த மாடும் வீட்டுக்குத் திரும்பிவராது. மாடுகளின் கழுத்துமணிகள் ஒலிக்காது; ’..ம்மா’வென மாடுகள் கத்துவதைக் கேட்கமுடியாது; கறந்த பாலை வாங்கிச்செல்ல வரும் வேன்களின் சலசலப்பும் இருக்காது; புது சாணத்தின் வாசனையும் வீசாது. ஆம், மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தின் மாண் வட்டாரத்தில், சுமார் 315 வீடுகளைக் கொண்ட இந்த ஊர், இப்போது அமைதியாக இருக்கிறது. இந்த ஊரின் பாதிக்குப் பாதி மக்களும் கிட்டத்தட்ட எல்லா மாடுகளுமே இப்போது இருப்பது, ஐந்து கிமீ தொலைவில் உள்ள தீவன முகாமில்! சதாராவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள மஸ்வத் நகருக்கு அருகில் இந்த முகாம் அமைந்துள்ளது.
40 வயதான சங்கீதா விர்கரும் ஜனவரி முதல் தீவனமுகாமுக்கு இடம் மாறிவிட்டார். அவர் தன் இரண்டு எருமைகள், இரண்டு ஜெர்சி மாடுளையும் தன் தந்தையின் ஒரு மாட்டையும் அதன் கன்றுக்குட்டியையும் அங்கு கொண்டுவந்துள்ளார். அவரின் கணவர் நந்து, 44, பத்தாம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகும் 15 வயது மகள் கோமல், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் விசால் ஆகியோருடன் கிராமத்திலேயே தங்கியிருக்கிறார். அவர்களின் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. நந்து-சங்கீதா குடும்பத்துக்குச் சொந்தமான மூன்று ஆடுகளும் அவற்றுடன் ஒரு பூனையும் ஒரு நாயும் வீட்டில் இருக்கின்றன.
“ வீட்டில் குழந்தைகள், முகாமில் மாடுகள்.. இரண்டையும் நான்தான் ஒன்றுபோல கவனித்துக்கொள்ள வேண்டும்,”என்கிறார், நாடோடிப் பழங்குடியினரான தங்கர் சமூகத்தைச் சேர்ந்த சங்கீதா. “இந்த ஆண்டு ஒரு மழைகூட பெய்யவில்லை. என் இணையருக்கும் அவரின் இரண்டு சகோதரர்களுக்கும் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தைப் பயிரிட்டுள்ளோம். பொதுவாக, குறுவைப் பருவத்தில் 20 - 25 குவிண்டால் இருங்கச் சோளம் அல்லது கம்பு விளைச்சல் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு, எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. பயிர் முழுவதும் போய்விட்டது. மழை இல்லாவிட்டால் தீவனமும் இருக்காது. சம்பா பருவ விதைப்பு சுத்தமாக இல்லை என்றாகிவிட்டது. எப்படித்தான் எங்கள் மாடு, கன்றுகளுக்கு தீவனம் தரப்போகிறோமோ? ”- பசுமாட்டை நீவிவிட்டபடியே பெருமூச்சு விடுகிறார், சங்கீதா.









