கடந்த ஜூன் 2005 அன்று, ஒடிசா மாநில அரசு அம்மாநிலத்தில் அதிக கனிமவளம் கொண்ட பாரதீப் பகுதியின் அருகில் உள்ள பகுதியில், தென்கொரியாவைச் சேர்ந்த இரும்பு உற்பத்தி நிறுவனமான போஸ்கோ உடன் 12 பில்லியன் மதிப்புடைய (ஏறத்தாழ ரூபாய் 65,856 கோடி) இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடுத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்தத் திட்டத்திற்காக 4,004 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மற்றும் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழக்கூடிய எட்டு கிராமங்கள் தாரைவார்க்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 2,598 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியும் அடங்கும் . மேலும், இந்த இரும்பு ஆலையுடன், ஆலைக்கான தனித்துறைமுகம், அனல் மின் நிலையம் மற்றும் நகரம் ஆகியவை சேர்த்தே உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஏறத்தாழ எட்டு வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனையும் அதிகாரிகளுக்கு எதிராக இந்த கிராமத்தினர் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லால் , மக்களை சமூக ரீதியாக பிரிக்கும் முயற்சியும் நடக்கிறது.
தின்கியா கிராமம் இந்த போராட்டத்தின் இதயமாக செயல்பட்டு வருகிறது. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தினால் லாபம் தரும் வெற்றிலை, திராட்சைத் தோட்டங்கள், நெல் பண்ணைகள், சமுதாய வனப்பகுதிகள் மற்றும் வீட்டை சூழ்ந்திருக்கும் பண்ணைகள் ஆகியவற்றை இழக்க நேரிடும் என்பதால், இப்பகுதி மக்கள் உறுதிமிக்க அகிம்சை எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் பாதைகளை வழிமறித்து குழிகள் தோண்டியும், தடுப்புகளை அமைத்தும் , இந்தத் திட்டம் எண்ணற்ற விதிகளை மீறுவதாக நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தும், தங்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி அவநம்பிக்கை மிகுந்த மனுக்களையும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநில நிர்வாகம் காவல்துறை நடவடிக்கைகள் மூலமாக திராட்சைத் தோட்டங்களை அழித்தும், அண்மையிலுள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தியும் உள்ளனர். குறிப்பாக அதுபோன்றதொரு வன்முறை கடந்த வாரம் நடந்தேறியும் உள்ளது. போராட்டம் நடைபெற்று வரும் இத்தனை வருடங்களில், மக்களை சிறையில் அடைத்து போராட்டத்தை ஒடுக்குவதற்காக, அந்த கிராமத்தினர் மீது காவல்துறை 200 குற்ற வழக்குகளும் பதிந்துள்ளனர். இதில் நூற்றுக்கணக்கான கிராமத்தினர்கள் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோகக்குற்றமும் ஆபாச வழக்குகளும் அடங்கும்.
ஆனால் தின்கியா கிராமத்தினர், குறிப்பாக பெண்கள், தங்களது எதிர்ப்பால் இறக்க நேர்ந்தாலும் , போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறுகின்றனர்
அஹில்யா பெஹெரா பல வெற்றிலை திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பயிர் செய்பவர்களின் கருத்துக்களை எதிரொலித்தார். அவர் கூறுகையில், அவர்கள் கிராமத்தின் விவசாயத்தையே பொருளாதாரத்திற்காக நம்பி உள்ளதாகவும், அதுவே அவர்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பையும் , சுய வேலைவாய்ப்பையும் தந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதேபோன்று, சுற்றியுள்ள நிலப்பரப்பும் எண்ணற்றோர்க்கு உணவும், வாழ்வாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாகவும் கூறினார். மேற்கொண்டு கூறுகையில்," மணற்பாங்கான மண் பகுதி தான் எங்கள் வெற்றிலை திராட்சைத் தோட்டங்களுக்கு உகந்தது. ஒருவேளை நாங்கள் எங்காவது செல்ல நேர்ந்தால், எவ்வாறு இவற்றை வளர்க்க முடியும்? தற்போது திராட்சைத் தோட்டங்களிலிருந்து வரும் வருமானத்தால் வாழ்ந்து வருகிறோம். கிராமத்தில் உள்ள வருங்கால தலைமுறைக்கும் அவை அவ்வாறே பயன்படும். நாங்கள் விவசாயிகள், எங்களால் போஸ்கோ போன்ற நிறுவனத்தில் பொறியாளர் வேலையெல்லாம் பெற முடியாது. நாங்கள் அவர்களிடமிருந்து குறைவான ஊதியம் பெறக்கூடிய சாதாரண வெளியாட்களாகவோ அல்லது ஒரு தடவை பண இழப்பீட்டையோ பெறக்கூடும். அதற்கடுத்து நாங்கள் என்ன செய்வது? " என்றார்.
கிராம பூசாரி பீரேந்திர சமன்தராய் அவரது பயறு விளைவித்திருக்கும் நிலத்தில், அவரது பேத்தி ஹரிபிரியாவுடன் நடந்து சென்று கொண்டிருக்கிறார். கடந்த மார்ச் 2012 ஆம் ஆண்டு அவர் தாக்கல் செய்த மனுவில் நாட்டின் உச்சபட்ச அதிகாரமுடைய தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மாநில அரசால் போஸ்கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சூழலியல் அனுமதியைத் தடை செய்து, மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், அதுகுறித்த ஆய்வு முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. "அந்த இடைநீக்க உத்தரவு இறுதியாக எங்களுக்கு சிறிய மகிழ்ச்சியைக் கொடுத்தது, ஆனாலும், போதிய சூழலியல் அனுமதி இல்லாமலும், அந்தத் ஆலைக்காக இரும்புத் தாது, நீர் போன்ற வளங்களை எங்கிருந்து பெறுவார்கள் என்ற தெளிவான கொள்கைகள் இல்லாமலே அதிகாரிகள் திட்டத்திற்காக மீண்டும் நிலத்தை கையகப்படுத்தத் தொடங்கியதும், எங்கள் நம்பிக்கைகள் முற்றிலுமாக சிதைந்து போயின" என்று சமன்தராய் கூறினார்.
துயரத்தில் இருக்கும் ஹேமலதா சாஹு, அவரது மகன் ,52 வயதான நர்ஹரி சாஹுவின் வாக்காளர் அடையாள அட்டையை காட்டுகிறார். அவரது மகன் நர்ஹரி மற்றும் இரண்டு போராட்டக்காரர்கள், கடந்த மார்ச் 2 அன்று நடந்த குண்டு வெடிப்பின் போது உயிரிழந்தனர். அவரது மகன் போராட்ட இயக்கத்தில் முன்னணியாக செயல்பட்டதாலேயே தாக்கப்பட்டதாகவும், அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அப்பகுதி அதிகாரிகள் முறையாக விசாரிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"நாங்கள் எண்ணற்ற முறை காவல்துறையைத் தொலைபேசியில் அழைத்தும், அடுத்த நாள் காலை வரை அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவே இல்லை. இந்த குண்டுவெடிப்பு குறித்து முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்) பதிய எனது மருமகள் காவல்நிலையம் சென்ற போது, அங்கு எங்களது புகாரை ஏற்க மறுத்து, எனது மருமகளை காவல்நிலையத்தை விட்டே வெளியேற்றினர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிர்பிழைத்து(காயங்களோடு மருத்துவமமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்) காயங்களோடு மருத்துவமனையில் உள்ளவரிடம் வாக்குமுலம் வாங்கவும் இவர்கள் அக்கறைக் காட்டவில்லை. எனது மகன் இந்தப் போராட்டத்திற்காக தனது உயிரையே விலையாகக் கொடுத்துள்ளான்" என்று தெரிவித்தார்.
லதா பரிதா 52 வயதுடையவர், படிப்பறிவில்லாத, உற்சாகமான பாட்டி, வெற்றிலை சாகுபடி செய்து வருகிறார். அவர் மீது எண்ணற்ற குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் 7 அன்று நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக, நடந்த பேரணியின் போது, அவர் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, அவர் மீது ஆபாசமாக நடந்து கொண்டதாக தற்போது வழக்கு பதிந்துள்ளது. காயமடைந்த அவரது கால்களோடு , லதா கூறுகையில்,"நாங்கள் இப்போது உச்சபட்ச கோவத்தை எட்டி இருக்கிறோம். ஒன்று அந்த தொழிற்சாலை இருக்கவேண்டும் அல்லது நாங்கள் சாகவேண்டும். கைது, வன்முறை மற்றும் வெளியேற்றப்படுதல் போன்ற அச்சங்களோடு வாழ்ந்து வரும் மக்கள், நாட்டில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதை நீங்கள் பார்த்திருக்கீறீர்களா? ஆனால் தற்போது வரை எங்களுக்கு எந்த ஆறுதலும் கிடைக்கவில்லை." என்று தெரிவித்தார்.
சாந்தி தாசின் மீது 30 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடத்திய தடியடியின் போது, அவரது சுண்டு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த கிராமத்தினரின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், அரசு நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது தங்களை அவமானப்படுத்தும் செயல் என்கிறார். மேலும் கூறுகையில் ,"எங்களது திராட்சைத் தோட்டம் சிதைக்கப்படும் போதும், எங்களது வாழ்வாதாரம் சிதைக்கப்படும் போது, நாங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டே நிற்க வேண்டுமா?" என்றார்.
29 வயதான முன்னாள் பள்ளி ஆசிரியர் மனோரமா காடூவா, போஸ்கோ ஆலைக்கு எதிரான இயக்கத்தின் பெண்கள் பிரிவிற்கு தலைமை வகித்து வருகிறார். அவர் மீது 27 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக காவல்துறையால் கைது செய்யப்படுவோமா, சிறைப்படுத்துவோமா என்ற அச்சுறுத்தல் இருந்தாலும் அவர் தின்கியா பகுதியை விட்டு வெளியேறாமல் போராடி வருகிறார். இதுகுறித்து கூறுகையில்,"எப்போது நான் கண்ணை முடினாலும் காவல்துறை என் மீது தடியடி நடத்துவதும்,மிளகாய் புகை(கண்ணீர் புகை குண்டு) வீசுவதும் தான் என் கண்முன்னே உயிரோட்டமாய் வந்து போகிறது. ஆனாலும்,எங்கள் உறுதியை உடைக்க முடியாது" என்று தெரிவித்தார்.
இந்த கட்டுரை முதலில் மின்ட் செய்திதளத்தில் கடந்த ஏப்ரல் 5, 2013 அன்று வெளியானது, நீங்கள் அதை இங்கு பார்க்கலாம் .
தமிழில்: பிரதீப் இளங்கோவன்