முதல் பார்வையில் பெருவெம்பா தோல் பதனிடும் இடம்போல் தெரிகிறது. ஆடு, மாடு மற்றும் எருமை போன்ற மிருகங்களின் தோல்கள், அக்கிராமத்தில் உள்ள வீடுகளின் முற்றங்களில் காயவைக்கப்பட்டுள்ளது. அது தோல் விற்பனைக்காக பதனிடப்படுவதை அறிவுறுத்துகிறது. ஆனால், முற்றத்தை கடந்த வீடுகளில், கடாச்சி கொல்லன் சமூகத்தைச்சேர்ந்த கைவினை கலைஞர்களால் அந்த தோல் உயர்தர தாள கருவிகளாக மாற்றம்பெறுகிறது.
பெருவெம்பாவில் தயாரிக்கப்படும் தாள கருவிகளை வாங்குவதற்கு தென்னிந்தியாவின் தாள இசை கலைஞர்கள் விரும்புகின்றனர். கேரளாவின் பாலக்காடு நகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பெருவெம்பா உள்ளது. “நாங்கள் இசை கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கிடையாது. ஆனால், தரமான இசைக்கருவிகளை செய்வதற்கான ஸ்ருதிகள் குறித்து எங்களுக்கு தெரியும். எங்களுக்கு ஆர்டர் கிடைத்தவுடன்தான் நாங்கள் இசைக்கருவியை செய்வோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனித்தன்மையுடன்தான் நாங்கள் இசைக்கருவிகளை தயாரிப்போம். நாங்கள் கடைகளுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யமாட்டோம்“ என்று 44 வயதான கே.மணிகண்டன் கூறுகிறார். இவர் கடாச்சி கொல்லன் மிருதங்கம் தயாரிப்பவர் ஆவார்.
பெருவெம்பாவின் கடாச்சி கொல்லன்கள், மிருதங்கம், மத்தளம், செண்டை மேளம், தபேலா, தோல், கஞ்சிரா மற்றும் மற்ற மேள இசைக்கருவிகளை வடிவமைக்கிறார்கள். அது பெரும்பாலும் கோயில்களில் இசைப்பதற்கு மற்றும் கர்நாடக சங்கீத இசைக்கும் பயன்படுத்தப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு மேலாக இச்சமூகத்தினர் தாள இசைக்கருவிகளை வடிவமைத்து வருகிறார்கள். அதற்கு முன்னதாக இவர்கள் உலோகத்தலான கருவிகளை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேளாண் கருவிகளை செய்து வந்தார்கள் என்று மணிகண்டன் கூறுகிறார். கர்நாடக சங்கீதத்தின் மையமாக பாலக்காடு இருந்தது, பெரும்வெம்பாவின் கடாச்சி கொல்லன்களை ஊக்குவித்தது. அதுவே இவர்கள் இசைக்கருவிகள் தயாரிக்கும் பணிக்கு மாறவும், அதிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கவும் வழிவகுத்தது. இந்த கிராமம் பாலக்காடு மாவட்டத்தின் கீழ் வருகிறது. தற்போது பெருவெம்பா ஒரு கிராம பஞ்சாயத்து.
மிருதங்க வித்துவான் பால்காட் டி.எஸ்.மணி அய்யர் (1912-1981), இங்கு தயாரிக்கப்படும் இசைக்கருவிகளின் மூலம் சாதித்த பின்னர், பெருவெம்பாவின் புகழ், கேரளாவைக்கடந்தும், கர்நாடக சங்கீத வட்டாரத்தில் பரவியது. அவர் மெட்ராசில் (தற்போது சென்னை) இருந்து இசைக்கலைஞர்களை அந்த கிராமத்திற்கு அழைத்து வந்தார். அதில் பெரும்பாலானோர் கடாச்சி கொல்லன் கைவினைஞர்களின் நிரந்தர வாடிக்கையாளர்களானார்கள். ஐயரின் சொந்த மிருதங்கம், பெருவெம்பாவில் தயாரிக்கப்பட்டது. அதை தயாரித்தவர் கிருஷ்ணன் மருதாளபரம்பு, மணிகண்டனின் தந்தையாவார். அவருடன் ஐயர் நெருக்கிய நட்பில் இருந்தார்.








