“நீ நாயை அடித்தாயா?“ என்று அவர்கள் கேட்டார்கள். சுனந்தா சாகு பதில் கூறுவதற்கு முன்னரே, ஒரு மரக்கட்டையால் அவரது தலையில் தாக்கப்பட்டார். நினைவு திரும்பியபோது ஒரு மருத்துவமனையில் விழித்தெழுந்திருந்தார்.
நாய் என்பது வெறும் சாக்கு. உண்மையில் அவர்களுக்கு அவனை(நாயை) பிடிக்கவில்லை. சுனந்தா ஒரு கலப்பின தெருநாயை அழைத்து வந்து வளர்ப்பதற்கு முன்னர், ஜடை பின்னலிட்டு, பொம்மை என்று சுனந்தாவை அன்பாக அழைத்தவர்கள்தான் தற்போது கொடிய அந்நியர்கள்போல் நடந்துகொள்கிறார்கள். “செத்து விடு அல்லது ஓடிவிடு என்பது அவர்கள் தினமும் கூறுவது. நாயை வளர்ப்பது எனது தனிமையை போக்கியது. நான் அவனை காலு என்று அழைப்பேன்“ என்று சுனந்தா கூறுகிறார்.
2010ல் சுனந்தா வீடு திரும்பிய 6 ஆண்டுகள் கழித்து, நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்த அவரது தந்தை கிருஷ்ணானந் சாகு இறந்த இரண்டு மாதத்தில் இந்த அடி விழுகிறது. சாகுவும், அவரது இரண்டு மகன்கள், மகன்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் தனது மகள் மீது நடத்தும் அத்துமீறலை கண்டிக்க வார்த்தைகளின்றி பார்த்துக்கொண்டிருந்தார். அவரது மனைவி கனகலதாவும் மவுனத்தையே கடைபிடித்தார்.
சுனந்தாவைப்பொருத்தவரை தெளிவாக தெரிந்தது என்னவென்றால், அவளை அவர் வரவேற்கவும் இல்லை. தேவை என்று எண்ணவுமில்லை. “அவர்கள் எனக்கு தேவையான சோப்பு, எண்ணெய் கூட வழங்கமாட்டார்கள்“ என்று அவர் கூறுகிறார். உணவும் அளவாகத்தான் கொடுப்பார்கள். சுனந்தாவின் மீது அக்கறைகொண்ட அருகில் உள்ளவர் ஒருவர்தான் அவரை, ஒரு சமூக செயற்பாட்டாளரின் உதவியுடன் கிராம பஞ்சாயத்திடம் உதவி கேட்க தூண்டினார். அதன் பின்னர் அவருக்கு வறுமையில் வாழும் பெண்களுக்கு மாநில அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ.300 மற்றும் அந்தியோதயா திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 25 கிலோ அரிசியும் கிடைத்தது.
நிஹல் பிரசாத் கிராமத்தில் (ஒடிஷாவின் தேன்கன்னல் மாவட்டத்தில் உள்ள கோண்டியா வட்டத்தில் உள்ளது) இப்பிரச்னைகள் குறித்து நிறைய பேர் சுனந்தாவின் சகோதரர்களிடம் பேசியுள்ளனர். “ஆனால் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை“ என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான ரமேஷ் மொஹந்தி தோள்களை உயர்த்தி ஒன்றும் செய்யவில்லை என்பதை செய்து காட்டி கூறுகிறார்.
அந்த சகோதரர்கள் தங்கை மீது எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. தங்கள் குடும்பத்தின் நற்பெயரை அவர் களங்கப்படுத்துவதாக அவர்கள் நினைத்தார்கள். “அவர்களின் மனைவிகளால் எனக்கு ஏதாவது செய்ய முடியுமென்றால், அவர்கள் என்னை வீட்டைவிட்டு வெளியேறுமாறு அச்சுறுத்துவதுதான்“ என்று சுனந்தா கூறுகிறார்.
இத்தனை தண்டனைக்கும் காரணம் சுனந்தா செய்த முதல் பாவம் காதல் மற்றும் இரண்டாவது முறை அவர் செய்த மீறல்தான். அது முதல் சுனந்தாவை அவர்கள் மேலும் மோசமாக நடத்துகிறார்கள்.
2016ம் ஆண்டு மே மாதம், அப்போது சுனந்தாவிற்கு 36 வயது இருந்தது. அவர்களின் மறைந்த தந்தைக்கு சொந்தமான 9 ஏக்கர் விளைநிலத்தில் அவரது பங்கினை கேட்டுள்ளார். அவரது வழக்கு மிக எளிமையான ஒன்று “நிலம் எனது இரு சகோதரிகளின் திருமணத்திற்காக விற்கப்பட்டது. எனக்கு திருமணமாகாததால், எஞ்சியுள்ள நிலத்தில் எனக்கு சமமான பங்கு உள்ளது“ என்கிறார்.
இந்த நாட்டில் சுனந்தாவின் கோரிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அகில இந்திய வேளாண் கணக்கெடுப்பு அறிக்கை 2010 – 11ன்படி, 87.2 சதவீத நிலத்தை (வீட்டுமனைகளாக்கப்பட்ட நிலங்களை தவிர) ஆண்கள் வைத்திருக்கிறார்கள். சொற்ப அளவான 12.8 சதவீதத்தை பெண்கள் சொந்தமாகக் கொண்டுள்ளனர்.
ஒரு நாள் மதியவேளையில் சகோதரர்கள், கோபத்தில் சுனந்தா நாயை கடுமையாக தாக்கியதாகவும், “நாளை அவர் எங்களையும் தாக்குவார்“ என்று கூறி கம்பியை அவர் அருகே எடுத்து வரும்போது கத்திக்கொண்டே தாக்கினர்.





