“நான் உங்களிடம் பந்தயம் கட்டுகிறேன். இங்கு வரும் வழியில் நீங்கள் மாடுகள், கழுதைகள் மற்றும் சில நாய்களை மட்டுமே பார்த்திருக்க முடியும்“ என்று செரிங் அங்சுக் நம்மிடம் கூறுகிறார். அவருக்கு வயது 62. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்னேமோ கிராமத்தில் நாம் அவரைச் சந்தித்தோம். அப்போது அவர் கூறியவைதான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமம் ஜம்மு காஷ்மீர் லடாக்கின் லே நகரத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
குளிர்காலத்தையொட்டி, இந்த சிறிய கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மூடிக்கிடக்கின்றன. 2011ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு கிட்டத்தட்ட 1,100 பேர் இருந்தார்கள். மைனஸ் 13 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை சரிந்தவுடன், இங்கு வசிப்பவர்கள் சண்டிகர், ஜம்மு, டெல்லி அல்லது லே என்று தட்பவெப்ப நிலை சூடாக உள்ள இடங்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் இடம்பெயர்கிறார்கள். “என்னைப்போன்ற ஒரு சிலரும், எங்களுக்கு துணையாக விலங்குகளுமே இங்கு இருக்கின்றன“ என்று செரிங் கூறுகிறார். அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வெகு தொலைவில் வசிக்கின்றனர். அவர் மட்டும் இங்கு அவரது உறவினர் இல்லத்தில் கால்நடைகளை பராமரித்துக்கொண்டு இருக்கிறார். அவை பசுக்கள் மற்றும் டிசோஸ் எனப்படும் உயர்ரக பசுக்கள் மற்றும் எருதுகள் ஆகும்.










