ஹது பஹேராவிற்கு தினசரி 12 மணி நேரத்திற்கு ஒரு “வீடு” சொந்தமாக இருக்கிறது. 51 வயதாகும் இந்தத் தறி தொழிலாளர், வடக்கு சூரத்தின் வேத் ரோட்டில் உள்ள ஒரு மங்கலான அறையில் ஆறுக்கு மூன்று அடி இடத்தில் வசிக்கிறார்.
அடுத்த 12 மணி நேரத்திற்கு, இதே இடத்தை அவரது சகத் தொழிலாளி உபயோகப்படுத்திக் கொள்வார். இது அவர்களது வேலைநேரத்தை பொறுத்தது - காலை 7 மணி முதல் மாலை 7 வரை அல்லது அதற்கு எதிர்மறையாக. எப்பொழுதாவது வரும் ‘விடுமுறை’ நாட்கள், அதுவும் மின்தடை இருக்கும் சமயங்கள், அச்சம் தரக்கூடியவை. அந்த நாட்களில், பஹேரா தற்போது இடத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் மஹாவீர் மெஸ்ஸில், கிட்டத்தட்ட 60 பணியாளர்கள் ஒரு 500 சதுர அடி இடத்தில் அடைந்துக் கிடக்க வேண்டும்.
வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடிய கோடைக் காலங்கள் கொடூரமானவை. “சில ஹால்கள் (தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பெரிய அறைகள்) இருட்டாகவும் காற்றோட்டம் இல்லாமலும் இருக்கும்,” என்று 1983 ஆம் ஆண்டு ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் புருசோத்தம்பூர் பிளாக்கில் உள்ள குசலப்பள்ளி கிராமத்திலிருந்து சூரத்திற்கு வந்த பெஹெரா கூறுகிறார். “பகல் முழுவதும் தறியில் கடினமாக வேலை செய்த பிறகும், எங்களால் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது”.
பெஹெராவைப் போலவே, ஒரிசாவின் கஞ்சம் மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்த சூரத்தின் விசைத்தறி தொழிலாளர்கள் பலரும், இது போன்ற விடுதிகள் அல்லது ’மெஸ் அறை’களில் தான் வசிக்கிறார்கள். (பார்க்க: செயற்கைத் துணி, அசலான வலி) கஞ்சமுக்கு தங்கள் வருடாந்திர விடுமுறைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்கிற அடிப்படையில் இங்கே இடம் கிடைக்கும். பெரும்பாலும் தொழிற்துறை பகுதிகளிலேயே உள்ள இந்த அறைகள், சில சமயம் தறி ஆலைகளில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும். கடினமான 12 மணி நேர வேலை நேரத்தை முடித்துவிட்டு, தங்களது தற்காலிகப் படுக்கைகளில் ஓய்வெடுக்கும் போது கூட இயந்திரங்களின் உயர் டெசிபல் கட-கட சத்தம் இவர்களின் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.












