ஹேசல்ப்ளாட் விருது வென்ற புகைப்படக் கலைஞர் தயாநிதா சிங், தயாநிதா சிங் - பாரி ஆவணப்பட புகைப்பட விருதை பாரியுடன் இணைந்து வழங்குகிறார்
இரண்டு லட்ச ரூபாய்க்கான முதல் தயாநிதா சிங் - பாரி ஆவணப்பட புகைப்பட விருதை பாரியின் எம்.பழனி குமார் பெறுகிறார்.
உலகின் மரியாதைக்குரிய புகைப்பட விருதான ஹேசல்ப்லாட் விருதை 2022ம் ஆண்டுக்கு தயாநிதா பெற்ற பிறகுதான் இந்த விருதுக்கான யோசனை உருவானது. இளைஞர் பழனி குமாரின் சுயமாகக் கற்றுக் கொண்ட புகைப்படக் கலை கொண்டுள்ள ஆன்மா, உள்ளடக்கம், நோக்கம் மற்றும் ஆவணப்படுத்தும் நுட்பம் ஆகியவை கவர்ந்ததாக தயாநிதா அறிவித்திருக்கிறார்.
அவர் பாரியுடன் இணைந்து இவ்விருதை வழங்க தீர்மானித்திருக்கிறார். ஆவணப் புகைப்படக் கலை கொண்ட கடைசி இடமாகவும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகள் மற்றும் வாழ்க்கைச் சூழல்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டிருப்பதாலும் பாரியுடன் இணைந்து விருது வழங்க அவர் விரும்பியிருக்கிறார்.
பாரியின் முதல் முழு நேர புகைப்படக் கலைஞர் பழனி குமார்தான் (எங்களுக்கு படப்பதிவு செய்த 600 பங்களிப்பாளர்களுடன் நாங்கள் பணிபுரிந்திருக்கிறோம்). பாரியில் பிரதானமாக முன்னிறுத்தப்படும் அவரின் பணி நாம் பொருட்படுத்தாத பலரை ஆவணப்படுத்துகிறது. தூய்மைப் பணியாளர்கள், கடற்பாசி அறுவடை செய்பவர்கள், விவசாயக் கூலிகள் போன்ற பலர். படைப்புத் திறனுடன் வலுவான சமூகப் பார்வையும் கரிசனமும் கொண்ட அவரைப் போல் மிக சிலர்தான் துறையில் இருக்கின்றனர்.
குறைந்த ஊதியத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் 25,000 ஏக்கர் உப்பளங்களில் உழைக்கும் பல பெண்களில் ஒருவர் ராணி. பார்க்க: தூத்துக்குடி உப்பளங்களின் ராணி
எட்டு வயதிலிருந்து ஏ.மூக்குப்பொறி, கடற்பாசிக்காக கடலில் குதிக்கிறார். வழக்கத்தில் இல்லாத இந்த பாரம்பரிய தொழிலில் இருக்கும் தமிழ்நாட்டின் பாரதி நகரைச் சேர்ந்த மீனவப்பெண்கள் பலரின் வாழ்வாதாரத்தை காலநிலை மாற்றம் பாதிப்பதால் சிரமத்துக்குள்ளாகின்றனர். பார்க்க: தமிழ்நாட்டின் அமைதியற்ற கடலில் கடற்பாசி அறுவடை செய்பவர்கள்
70 வயதுகளில் இருக்கும் கோவிந்தம்மா, பக்கிங்ஹாம் கால்வாயில் இறால்களை எடுத்து வாயில் வைத்திருக்கும் கூடையில் சேகரிக்கிறார். சிராய்ப்புகள் மற்றும் மங்கி வரும் பார்வை ஆகியவற்றை பொருட்படுத்தாமல் குடும்பத்துக்காக அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். பார்க்க: ‘வாழ்க்கை முழுக்க நீரில்தான் இருந்திருக்கிறேன்’
கரூர் மாவட்டத்தின் காவிரிக் கரையின் கோரை நிலங்களில் வேலை பார்க்கும் பல பெண்களில் ஒருவர் ஏ.மாரியாயி. வேலை கடினமானது. குறைவான ஊதியம் கொடுப்பது. அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. பார்க்க: ‘இந்த கோரை வயல்களே எங்களின் இரண்டாம் வீடு‘
கொளுத்தும் வெயிலில் தூத்துக்குடியின் உப்பளங்களில் நிலவும் கொடுமையான பணிச்சூழலில் பணிபுரியும் உப்பளத் தொழிலாளர். பார்க்க: தூத்துக்குடி உப்பளங்களின் ராணி
தமிழ்நாட்டில் இருக்கும் சில கொம்புக் கலைஞர்களில் பி.மகராஜனும் ஒருவர். யானையின் துதிக்கை போல இருக்கும் இந்தக் காற்றுக் கருவி மாநிலம் முழுவதிலும் வழக்கொழிந்து போய், கலைஞர்களுக்கு வேலையும் பணமும் இல்லாமல் ஆக்கியிருக்கிறது. பார்க்க: அமைதியாக்கப்படும் மதுரையின் கொம்பு வாத்தியங்கள்
சென்னையின் தூய்மைப் பணியாளர்கள் வெகு தூரங்களுக்கு நடந்து கூட்டி நகரத்தை எந்தவித பாதுகாப்போ விடுமுறையோ இன்றி சுத்தப்படுத்தும் வேலையை கோவிட் ஊரங்கு காலத்தில் செய்தனர். பார்க்க: தூய்மை பணியாளர்களுக்கு அளிக்கப்படும் நன்றியற்ற ஊதியம்
ரிடா அக்கா ஒரு மாற்றுத் திறனாளி தூய்மைப் பணியாளர். சென்னையின் கோட்டூர்புரப் பகுதியின் குப்பைகளை தினசரி காலைகளில் அகற்றுவார். ஆனால் அவரின் மாலை நேரங்கள் நாய்களுக்கு உணவிட்டும் பேசியும் கழிகிறது. பார்க்க: செல்லப்பிராணிகளுக்காக இருக்கும் ரீட்டா அக்கவின் வாழ்க்கை/நாய்கள், பூனைகளுக்காக வாழும் ரீட்டா அக்கா
மகன் விஷாந்த் ராஜாவுடன் டி.முத்துராஜா. முத்துராஜாவும் அவர் மனைவி எம்.சித்ராவும் வறுமை, ஆரோக்கிய குறைபாடு, ஊனம் ஆகியவை இருந்தாலும் வாழ்க்கையை துணிச்சல், நம்பிக்கை ஆகியவற்றுடன் எதிர்கொள்கின்றனர். பார்க்க: சித்ரா மற்றும் முத்துராஜா : சொல்லப்படாத காதல் கதை
ஆர்.எழிலரசன் என்னும் கலைஞர், தமிழ்நாட்டின் எண்ணற்றக் குழந்தைகளின் வாழ்க்கைகளில் சிரிப்பையும் வெளிச்சத்தையும் கலை, நாடகம் மற்றும் பாடல்களால் கொண்டு வந்திருக்கிறார். பார்க்க: என்னை களிமண்ணிலிருந்து உருவாகியவர் எழில் அண்ணன்
பழனியின் தாய் திருமாயியின் சந்தோஷமான கணம் ஒன்று.
பார்க்க: தெருவிளக்கின் வெளிச்சத்தில் என்
தாயின் வாழ்க்கை
தமிழில்: ராஜசங்கீதன்