எஸ்.இராமசாமி தன் மூத்த நண்பருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கிறார். அவரைப் பார்க்க வரும் முக்கிய விருந்தினர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக என்னிடத்தில் பெருமையாகச் சொல்கிறார். செய்தித்தாள் பிரதிநிதிகள், குடிமைப் பணி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எனப் பலரும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். தகவல்களைத் துல்லியமாகத் தரவேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். ஏனெனில், அவருடைய மூத்த நண்பர் சாதாரண மனிதரல்ல, பெரும் பிரபலஸ்தர்.

அவர்தான் மளிகம்பட்டு கிராமத்தின் ஆயிரம் காச்சி மரம்.  வயது 200 ஆண்டுகள்.

ஆயிரம் காச்சி அகன்று, நெடிதுயர்ந்து, செழித்து நிற்கும் பலாமரம்.  சுற்றி வருவதற்கு 25 நொடிகள் பிடிக்கும் அளவுக்கு அகன்றது.  அதன் முன்னே நிற்பது கௌரவம். அதைச் சுற்றி வருதல் பெருமை. இராமசாமி நான் செய்வதைக் கண்டு புன்னகைக்கிறார். மகிழ்ச்சியில் அவரது பெரிய மீசை கண்களைத் தொட்டுவிடுமளவுக்கு உயர்கிறது. கடந்த 71 ஆண்டுகளில், இந்த மரத்தைப் பார்த்து நெகிழும் பல விருந்தினர்களைப் பார்த்திருப்பாரல்லவா? எனக்குச் சொல்ல அவரிடம் நிறைய இருக்கிறது.

காவி வேட்டியும் தோளில் சிறிய துண்டும் அணிந்த இராமசாமி, பலாமரத்துக்கு முன்பு நின்று கொண்டு பேசத் தொடங்குகிறார். ’இப்ப நாம இருக்கறது கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, மளிகம்பட்டு குக்கிராமம். அஞ்சு தலைமுறைக்கு முன்னால எங்க மூதாதைகள் நட்டது. இதுக்குப் பேரும் ஆயிரம் காச்சி. ஆயிரம் காச்சி இப்போ 200-300 பழம் குடுக்குது. 8-10 நாள்ல பழுத்திரும். சுளைகள் பார்க்க நல்ல நிறமா இருக்கும். ரொம்ப சுவையா இருக்கும். பழுக்காத சுளையை வச்சி பிரியாணி கூடப் பண்ணலாம்’. அரை நிமிடத்தில் அதன் பெருமைகளைப் போற்றிப் பாடிவிட்டார். கால ஓட்டத்தில் உறுதியாக வளர்ந்து நிற்கும் மரம் போல, அவரது பேச்சு உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

PHOTO • M. Palani Kumar

எஸ்.இராமசாமி, தன் அன்புக்கினிய தோழமை ஆயிரம் காச்சியுடன்.. ஆயிரம் காச்சி அவரது தோட்டத்தில் இருக்கும் 2000 வயதான பலாமரம்!

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மத்தியில், பலாப்பழ உற்பத்தியாளர்களையும், வணிகர்களையும் சந்திக்க, ‘பரி’ யின் சார்பாக, கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டித் தாலுகாவுக்கு நாங்கள் சென்றிருந்தோம். பண்ருட்டி தாலுகாதான் தமிழ்நாட்டில் மிக அதிகமாக பலாப்பழ உற்பத்தியைச் செய்கிறது.  ஃபிப்ரவரி முதல் ஜூலை வரை பலாப்பழ சீஸன். வரிசையாக இருக்கும் கடைகளில் டன் கணக்கில் பலாப்பழ விற்பனை நடக்கும். சிறு வணிகர்கள், பழத்தைப் பிளந்து சுளைகளை நடைபாதைகளிலும், சாலைச் சந்திப்புகளிலும் விற்பார்கள். பண்ருட்டி நகர மண்டியில் இருக்கும் 10-12 பெரு வணிகர்கள், மொத்த வணிகம் செய்வார்கள். ஒவ்வொரு நாளும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பழங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னை, மதுரை, சேலம் போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆந்திரா, மஹாராஷ்ட்ரா வரை பழங்கள் செல்கின்றன.

பண்ருட்டியில், ஆர்.விஜயக்குமார் என்பவருடைய பழ மண்டியில்தான், ஆயிரம் காச்சியைப் பற்றியும், அதன் உரிமையாளர் இராமசாமியைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன். ‘இராமசாமியப் போய்ப் பாருங்க. உங்களுக்கு எல்லா விவரமும் சொல்வார்’,னு  விஜயக்குமார் உறுதியளித்து, டீ வாங்கிக் கொடுத்து, அனுப்பி வைத்தார். ‘அப்படியே இவரையும் கொஞ்சம் கூட்டிட்டுப் போய் விட்ருங்க’, ன்னு அருகில் பெஞ்சில் அமர்ந்திருந்த ஒரு வயதான உழவரையும் கூட அனுப்பி வைத்தார்.

மளிகம்பட்டு சுமார் ஐந்து கிலோமீட்டர்  தொலைவில் இருந்தது. சென்று சேர 10 நிமிஷம் ஆனது. உடன் வந்த உழவர், ‘ரைட்ல திரும்பு, நேராப் போ.. நிறுத்து.. நிறுத்து.. இதுதான் ராமசாமியோட வீடு’, எனப் பொறுப்பாக வழிகாட்டி உதவினார்.  பெரிதாக இருந்த இராமசாமியின் வீட்டை கறுப்பு வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு அழகிய நாய் காவல் காத்துக் கொண்டிருந்தது. வெராந்தாவில் ஊஞ்சலும், நாற்காலிகளும் இருந்தன. சாக்குப் பைகளில் விவசாயப் பொருட்கள் நிறைந்திருந்தன. முன்கதவு அழகாகச் செதுக்கப்பட்டிருந்தது. சுவற்றில் வரிசையாகப் புகைப்படங்களும், காலண்டர்களும் தொங்கிக் கொண்டிருந்தன.

இராமசாமி எங்களை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனாலும் வரவேற்று உட்காரச் சொன்னார். உள்ளே சென்று பல புத்தகங்களையும், புகைப்படங்களையும் எடுத்து வந்தார். நீண்ட கால அனுபவத்தில், எங்களைப் போன்ற ஆர்வமான பார்வையாளர்களை எதிர்கொள்வது அவருக்கு மிகவும் சகஜமான ஒன்று போலத் தெரிந்தது. அந்த ஏப்ரல் மாத வெம்மையில், கருவாடு விற்க வந்திருந்த பெண்கள் அருகில் அமர்ந்திருக்க, பலாப்பழச் சாகுபடி மற்றும் வணிகம் தொடர்பாக சில விஷயங்களை எனக்குச் சொல்லித் தந்தார்.

*****

PHOTO • Aparna Karthikeyan
PHOTO • M. Palani Kumar

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் மளிகம்பட்டு கிராமத்தில்,  இராமசாமி உலகின் மிகப் பெரும் பழங்களுள் ஒன்றான பலாவை பயிர் செய்து வருகிறார். அவரது தோட்டத்தில் இருக்கும் ஆயிரம்காச்சி, அவரது முன்னோர்களால், ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு நடப்பட்டது

உலகின் மிகப் பெரும் பழங்களில் ஒன்றான ‘பலா’, தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றியது. ஜாக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இப்பழம், ‘ஜாக்கா’ என்னும் போர்த்துக்கீசிய வார்த்தையில் இருந்து உருவானது. அந்த வார்த்தை, ‘ சக்கா ’, எனப் பலாவைக் குறிக்கும் மலையாள வார்த்தையில் இருந்து வந்தது. இதன் அறிவியல் பெயர் கொஞ்சம் கடினமானது – ஆர்ட்டோகார்ப்பஸ் ஹெடிரோஃபைலஸ் (Artocarpus heterophyllus).

பசுமையான முட்கள் கொண்டு வித்தியாசமாக இருக்கும் பலாப்பழத்தை, உலக சமூகம் அறிந்து கொள்வதற்குப் பலகாலம் முன்பே தமிழ்க் கவிஞர்கள் அறிந்திருந்தார்கள்.  2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சங்க காலக் காதல் பாடல்களில், இப்பழத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்
பேரமர் மழைக்கண் கழிலத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய்.

என்கிறது ஐங்குறுநூறு (பாடல் 214)

அதன் பொருள்: தலைவி தோழியிடம்
மலைச்சாரலில் கொழுத்த இலைத் தளிருடன் இருக்கும் பலாப்பழம் கல்லுக் குகையில் விழ, அங்குள்ள தேன் கூடு சிதறும் நாட்டை உடையவன் அவன். விரும்பி மழை பொழியும் என் கண்ணை அழ விட்டுவிட்டுத் தன் நாட்டுக்குச் செல்கிறான், தாயே.

சங்கப்பாடல் ஆர்வலரும் மொழிபெயர்ப்பாளருமான செந்தில்நாதன், கபிலரின் மகத்தான பாடல் என்று கீழ்வரும் பாடலைச் சொல்கிறார்! பழுத்த பலாப்பழத்தை ஆழ்ந்த காதலுக்கு உவமையாகச் சொல்கிறார் கபிலர்.

வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!

( குறுந்தொகை, 18 ஆவது பாடல்)

கருத்துரை:  மூங்கிலை வேலியாகக் கொண்ட மலைநிலம். அங்கே, வேரிலுள்ள கொம்புகளில் பலாப்பழங்கள் தொங்குகின்ற மலைநாட்டுத் தலைவனே! விரைவில் தலைவியை மணம் செய்துகொள்ளும் காலத்தை உண்டாக்கிக் கொள்வாயாக! உன்னைத் தவிர யாரால் தலைவியின் நிலையை அறிந்துகொள்ள முடியும்? மலையிலே, சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல, தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட விருப்பமோ பெரியது.

கி.மு 400 ஆண்டுவாக்கில், பௌத்த, சமண இலக்கியங்களில், வாழை, திராட்சை, எலுமிச்சம்பழங்களுடன், பலாவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று தனது ‘இந்திய உணவு – ஒரு வரலாற்றுத் துணை’, என்னும் நூலில் சொல்கிறார் உணவு வரலாற்றாசிரியர் கே.டி.ஆச்சையா

PHOTO • M. Palani Kumar

தோட்டத்துக்குள், நடமாடும் நிழல்களினூடே, நின்று, இராமசாமி வயதான மரங்களைத் தாண்டிய ஒரு உலகைக் காண்கிறார்

16 ஆம் நூற்றாண்டில், முகலாயப் பேரரசர், தனது நாட்குறிப்புகளில், இந்தியாவின் பழங்களைப் பற்றி மிகத் துல்லியமாக எழுதியிருக்கிறார் என்கிறார் ஆச்சைய்யா. பலாப்பழம் பாபரைப் பெரிதாகக் கவரவில்லை போல.  பலாப்பழத்தை. ஆட்டுக் குடலில் அடைக்கப்பட்டு சமைக்கப்பட்ட கொழுக்கட்டையுடன் ஒப்பிட்டிருக்கிறார்.  ‘நோய்மையான இனிப்பு’, எனவும் வர்ணித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில், பலாப்பழம் மிகவும் புகழ்பெற்றது.. முக்கனிகளில் (மா, பலா, வாழை) ஒன்றான பலாப்பழத்தைப் பற்றிய விடுகதைகள், பழமொழிகள், தமிழ் மொழியின் தாழ்வாரமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. ’பலா மரம்: பழங்களின் அரசன்’ என்னும் புத்தகத்தில் அதன் ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம், பல விடுகதைகளை நமக்குச் சொல்கிறார்.

’முள்ளுக்குள்ளே முத்துக்குலையாம்.. அது என்ன? பலாப்பழம்!’

அண்மையில், பலாப்பழம் பற்றிய நல்ல செய்திகள் ஆராய்ச்சிகள் வழியே பத்திரிக்கைகளில் வந்துள்ளன.  ஆர்.ஏ.எஸ்.என், ரணசிங்கே என்னும் ஆய்வாளர், 2019 ஆம் ஆண்டில், ‘பன்னாட்டு உணவு அறிவியல்’, இதழில் , பலாமரத்தின் மருத்துவ குணங்களைப் பட்டியலிட்டுள்ளார்.  பலாமரத்தின் பழம், இலைகள், பட்டை முதலானவை பாரம்பரிய மருத்துவ முறைகளில் பெரிதும் உபயோகிக்கப்படுகின்றன.  புற்று நோய், நுண்ணுயிர்த் தொற்று, பூஞ்சைத் தொற்று, காயங்களை ஆற்றுதல், சக்கரை நோய் முதலான நோய்களுக்கான சிகிச்சையில், இது பயன்படவல்லது. ஆனாலும், இது பெருமளவில் பயன்படுத்தப்படுவதில்லை என்கிறார் ரணசிங்கே.

*****

PHOTO • M. Palani Kumar
PHOTO • M. Palani Kumar

இடது: இராமசாமியின் தோட்டத்தில் அண்மையில் நடப்பட்ட ஒரு இளம் பலாமரம். வடது: பசுமையான முட்கள் கொண்ட பலாப்பழங்கள் மரத்தில் தொங்குகின்றன.. பலாப்பழ சீஸனில், மரத்தின் பழைய கிளைகளை மறைக்குமளவுக்கு பலாப்பழங்கள் காய்த்துத் தொங்கும்

பண்ருட்டியை, தமிழகத்தின் பலாப்பழத் தலைநகரம் என அழைக்கலாம். பலாப்பழம் பற்றிய இராமசாமி அவர்களின் அறிதல் மிகவும் ஆழமானது. தண்ணீர் மட்டம் 50 அடிக்குக் கீழே இருக்கும் நிலங்களில்தான் பலா மரம் மிக நன்றாக வளரும் என்கிறார். மழை அதிகமாகி, நீர் மட்டம் உயர்ந்தால், மரத்தின் ஆணிவேர் அழுகிவிடும் என்பது அவர் கருத்து. ‘முந்திரியும் மாமரமும் நீரை எடுத்துக்கும்.. ஆனால் பலாவுக்கு அது ஆகாது. தோட்டத்தில் நீர் தேங்கினால், பலாமரம் செத்துரும்’, என்கிறார்.

மளிகம்பட்டு கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில், நாலில் ஒரு பங்கு நிலத்தில் பலாப்பழம் விளையும் என ஒரு மதிப்பீட்டைச் சொல்கிறார் இராமசாமி. 2022-23 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வேளாண் திட்டக் குறிப்பு , மாநிலத்தில் பலாப்பழம் 3180 ஹெக்டேர்களில் பயிராகிறது எனச் சொல்கிறது. அதில் 718 ஹெக்டேர் கடலூர் மாவட்டத்தில் உள்ளது.

2020-21 ஆம் ஆண்டு, இந்தியாவில் 1.91 லட்சம் ஹெக்டேர்களில் பலாப்பழம் பயிராகியுள்ளது என்னும் தகவலை வைத்துப் பார்க்கையில், பண்ருட்டி பெரிய உற்பத்தித்தலமல்ல. ஆனால், பண்ருட்டிக்கு இது முக்கியமான பயிர். தமிழ்நாட்டில் நான்கில் ஒரு பலாப்பழம் இங்கிருந்து வருகிறது.

பலாமரத்தின் பொருளாதார மதிப்பென்ன? இராமசாமி நமக்கு விளக்குகிறார். 20-25 வயதான பலாமரத்தின் குத்தகை மதிப்பு வருடம் 12500 ரூபாய். 5ஆண்டு வயதான மரங்களுக்கு இந்த குத்தகை கிடைக்காது. அவற்றில் 4-5 பழங்கள் மட்டுமே கிடைக்கும்.  ஆனால், 40 வயது மரத்தில் 50 பழங்களுக்கும் அதிகமாகக் கிடைக்கும்.

வயதாக ஆக, பலா மரத்தின் மகசூல் அதிகரிக்கும்.

பழத்தின் மூலம் ஒரு மரத்தின் வருமானத்தைக் கணக்கிடுதல் கொஞ்சம் சிக்கலானது. விலைகள் நிலையாக இருப்பதில்லை. மேலும் கீழும் ஏறி இறங்கும். நாங்கள் பண்ருட்டி சென்ற அன்று சில உழவர்கள், 100 மரங்கள் இருந்தால், வருடம்  2 முதல் 2.5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் எனக் கணக்கிட்டுச் சொன்னார்கள். உரம், பூச்சி மருந்து, கூலி, வண்டி வாடகை, கமிஷன் எல்லாம் சேர்ந்து 50-70 ஆயிரம் வரை செலவாகும்

மளிகம்பட்டு கிராமத்தில், 200 வயதான ஆயிரம் காச்சி தொடர்பான புகைப்படங்களை இராமசாமி ஆவணப்படுத்திப் பாதுகாத்து வருகிறார்

ஆனால், இந்தக் கணக்குகள் பெரிதும் மாறக்கூடியவை. ஒரு மரத்தில் காய்க்கும் பழங்கள், ஒரு பழத்துக்குக் கிடைக்கும் சந்தை விலை – இவை எதையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. சந்தையில் ஒரு பழத்தின் விலை ரூபாய் 150 முதல் 500 வரை விற்கிறது. சீசனின் ஆரம்பத்தில் விலை குறைவாகவும், இறுதியில் மிக அதிகமாகவும் விற்கிறது. விலை பழத்தின் எடையைப் பொறுத்தும் மாறுபடுகிறது. பண்ருட்டி பலாப்பழம் 8 முதல் 15 கிலோ வரை எடை கொண்டது. சில பழங்கள் 50 கிலோ வரை எடை இருக்கும். அதிசயமாக சில பழங்கள் 80 கிலோ வரை எடை இருக்கும். 2022 ஏப்ரல் மாதத்தில், ஒரு டன் பலாப்பழம் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. ஒரு டன் எடையில் சராசரியாக 100 பலாப்பழங்கள் இருக்கும்.

பலாமரத்துக்கும் விலை மதிப்புண்டு. 40 வயதான பலாமரத்தின் விலை கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரை விலை போகிறது. கதவுகள் மற்றும் அறைகலன்கள் செய்ய பலாமரம் மிகவும் நல்லது. உறுதியானது, நீரை உறிஞ்சாது. தேக்கு மரத்தை விட மேலானது என்கிறார் இராமசாமி. மரமாக விற்க வேண்டுமென்றால், குறைந்தது ஆறடி உயரமும், 2-3 அடி அகலமும் (கையை அகட்டிக் காண்பிக்கிறார்), குறைகள் இல்லாமலும் இருக்கனும். பலாமரம் வாங்குபவர்கள், மரத்தை நேரில் பாத்துத்தான் வாங்குவார்கள். கிளைகள் நல்லா இருந்தா, ஜன்னல் சட்டங்கள் செய்ய உதவும். ‘இத மாதிரி’, என்று தன் பின்னால் இருக்கும் ஜன்னலைச் சுட்டிக் காட்டுகிறார். அப்படிக் கிளைகள் இருந்தால், மரத்தின் மதிப்புக் கூடும்.

இராமசாமி தற்போது வசிக்கும் வீடு, அவருடைய முன்னோர்கள் கட்டியது. வீட்டின் முன் கதவு பலாமரத்தால் செய்யப்பட்டது. ஆனால், இந்த வீட்டுக்குப் பின்னால் இருக்கும் புதிதாகக் கட்டப்பட்ட வீட்டில், கதவுகள், அவர் நிலத்திலேயே விளைந்த தேக்கு மரங்களால் செய்யப்பட்டவை. ’பழைய கதவுகள் உள்ளே இருக்கு’ எனச் சொல்லும் அவர், காலத்தில் சிதைந்து கிடக்கும் அவற்றை கொஞ்ச நேரம் கழித்துக் காட்டுகிறார். ‘இதுக்கு 175 வயசு’,  எனப் பெருமை தொனிக்கும் குரலில் சொல்கிறார்.

அடுத்து, பலாமரத்தால் செய்யப்பட்ட கஞ்சிராவைக் காட்டுகிறார். அதன் கட்டையில் ஜால்ரா போன்ற சிறு குமிழ்கள் உள்ளன. கஞ்சிரா உடும்புத் தோலால் செய்யப்பட்டது. பலாமரம் வீணை, மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் செய்யவும் விரும்பப்படுகிறது. ‘இந்தக் கஞ்சிரா எங்கப்பாவோடது’, எனக் கையால் அதைத் திருப்புகிறார்.. குமிழ்களில் இருந்தது மெல்லிய இசை எழுகிறது.

மரங்கள் மற்றும் பயிர்ச்சாகுபடியில் மிக ஆழமான அறிதலும், அனுபவமும் கொண்ட இராமசாமி ஒரு நாணயச் சேகரிப்பாளரும் கூட. தன் நாணயச் சேகரிப்பு தொடர்பான அரிதான ஆவணங்களை நம்மிடம் காட்டுகிறார். ’சில பழைய நாணயங்களுக்கு 65000 முதல் 85000 வரை ஆர்வலர்கள் பணம் தரத் தயாராக இருந்தார்கள், ஆனால், நான் விற்க விரும்பவில்லை’, எனச் சொல்லிப் புன்னகைக்கிறார். நான் அதைப் பார்த்து வியந்து கொண்டிருந்த போது, அவரது மனைவி, முந்திரிப் பருப்பும் இலந்தப்பழமும் கொண்டு வந்தார்.  கரிப்பும் புளிப்புமாய் அவை மிகச் சுவையாக இருந்தன. மொத்தத்தில் இந்தச் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக முடிந்தது.

*****

PHOTO • M. Palani Kumar

பலாப்பழ அறுவடை என்பது சிக்கலான விஷயம். பண்ணை உதவியாளர் மரத்தின் மீது ஏறி ஒரு பெரும் பழத்தை அணுகுகிறார்

PHOTO • M. Palani Kumar

பலாப்பழம் மிகப் பெரிதாக, உயரத்தில் இருக்கும் போது, அவை வெட்டப்பட்டு, கயிறுகளின் உதவியோடு இறக்கப்படுகின்றன

ஆயிரம் காச்சி இராமசாமிக்கு மிகவும் தெரிந்த ஒருவருக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது. ‘ஒன்னு ரெண்டு பழம் எடுத்துகிட்டா ஒன்னும் சொல்ல மாட்டாரு.. மொத்தத்தையும் கூட எடுத்துக்கலாம்..’, எனச் சொல்லிச் சிரிக்கிறார். ஆயிரம் காச்சி எனப் பேர் பெற்றிருந்தாலும், வருடத்துக்கு அதில் மூன்று அல்லது ஐந்தில் ஒரு பங்குதான் மகசூலாகக் கிடைக்கும். இந்த மரம் மிகவும் பிரபலமானதால், இதன் பழங்களுக்குச் சந்தையில் டிமாண்ட் உள்ளது.  சராசரி அளவுள்ள பழத்தில் சுமார் 200 சுளைகள் இருக்கும். ‘இதன் சுளைகள் ரொம்ப சுவையா இருக்கும். சமைக்கறதுக்கும் அருமையா இருக்கும்’, என்கிறார் இராமசாமி.

பொதுவாக பலாமரத்துக்கு வயதாக ஆக, மரம் தடிக்கத் தடிக்க, அதிகப் பழங்கள் காய்க்கும் என்கிறார் இராமசாமி. பலாமரம் வச்சிருக்கறவங்களுக்கு, மரத்தில் எவ்வளவு பழங்களக் காய்க்க விடனும்னு ஒரு கணக்கு இருக்கும். நெறய பழங்கள மரத்துல விட்டா, எல்லாம் சின்னச் சின்னதாப் போயிரும்’, என்று சொல்லி, தன் கைகள் மூலமாகத் தேங்காய் அளவுக்குக் காண்பிக்கிறார்.  பலாப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் உரம் பூச்சி மருந்து போட்டுத்தான் பண்றாங்க.. அதில்லாம 100% இயற்கையா பண்றது முடியாத விஷயமில்ல.. ஆனா ரொம்பக் கஷ்டம் என்கிறார் இராமசாமி

’பெரிய மரத்துல ரொம்பக் கொஞ்சமாக் காய்கள விட்டா, காய்கள் ரொம்பப் பெரிசாகும்.. வெயிட்டும் ஜாஸ்தியாகும். ஆனா அதுல ஆபத்து இருக்கு.. பூச்சி புடிக்கும்.. மழை வந்தா சேதமாகும். புயலடிச்சா கீழ விழுந்துரும்.. அதனால, நாங்க ரொம்பப் பேராசைப் படறதில்ல’, எனச் சிரிக்கிறார்.

ஒரு புத்தகத்தைத் திறந்து, அதிலுள்ள படங்களை எனக்குக் காட்டுகிறார். ‘பெரிய பலாப் பழங்கள எப்படிக் காபந்து பண்றாங்க பாருங்க.. பெரும் பலாப்பழத்தைத் தாங்கற மாதிரி ஒரு கூடை செஞ்சி, அந்தக் கூடையை கயிறுகள் மூலமா மேல இருக்கற மரத்தோட கிளையில கட்டிர்றாங்க. இதனால, பழத்துக்கு நல்ல சப்போர்ட் கிடைக்குது. பழம் விழாது. பழத்தை அறுவடை செய்யறப்ப, காம்ப வெட்டி, கயிறு இருக்கறதனால, மெதுவா இறக்கிருவாங்க. இறக்கினதுக்குப்பறம் இப்படித் தூக்கிட்டு வருவாங்க’, என்றொரு புகைப்படத்தைக் காண்பிக்கிறார். புகைப்படத்தில், ஒரு மனிதன் அளவு உயரமான பழத்தை இருவர் தூக்கி வருகிறார்கள். மரத்தில் உள்ள பழங்கள் பத்திரமாக உள்ளதா எனக்கவனித்து வருவது இராமசாமியின் தினசரி வேலை. ‘ஏதேனும் பழம் சேதமாகி இருந்தால், உடனே கயிறு போட்டு பத்திரமாக மரத்துடன் சேத்துக் கட்டிவிடுவோம்’,என்கிறார்

சில சமயங்களில் எவ்வளவு பத்திரமாகப் பார்த்துக் கொண்டாலும் பழங்கள் சேதமாகிவிடும். ’அதோ அங்க இருக்கற சேதமான பழங்களப் பாத்தீங்களா? அத எங்க ஆடு மாடுகள் சந்தோஷமாச் சாப்பிட்டிரும்’. கருவாடு விற்க வந்த பெண்கள், அவர்கள் விற்பனையை முடித்திருந்தார்கள். இரும்புத்தராசில் எடை போடப்பட்டு, கருவாடு சமையலறைக்குச் சென்றது. விற்க வந்தவர்களுக்கு சாப்பிட தோசை தரப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டே எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அவ்வப்போது உரையாடலில் பங்கு கொள்கிறார்கள். ‘எங்களுக்கும் பலாப்பழம் குடுங்களேன்.. எங்க புள்ளைங்க சாப்பிட ஆசையா இருக்காங்க’, என இராமசாமியிடம் சொல்கிறார்கள்.. ‘அடுத்த மாசம் வந்து எடுத்துகிட்டு போங்க’, எனப் பதிலளிக்கிறார் இராமசாமி!

PHOTO • Aparna Karthikeyan

இராமசாமியின் பக்கத்துத் தோட்டத்து விவசாயி, தான் அறுவடை செய்த பலாப்பழங்களை வரிசையாக இராமசாமியின் தோட்டத்தின் வாசலில் வைத்திருக்கிறார்

பழங்களை அறுவடை செஞ்ச உடனேயே மண்டில இருக்கற கமிஷன் ஏஜண்டுகளுக்கு அனுப்பிருவோம். ‘பழம் வாங்க வியாபாரிகள் வந்த உடனே, எங்களக் கூப்பிட்டுக் கேப்பாங்க- அவங்க சொல்ற ரேட்டு நமக்குச் சம்மதமான்னு.. சரின்னு சொன்னா, பழத்த வித்துட்டு நமக்கு பணத்த அனுப்பிருவாங்க. 1000 ரூபாய்க்கு வித்தா, 50 இல்லன்னா 100 கமிஷனா எடுத்துக்குவாங்க. ரெண்டு பக்கத்திலும் கமிஷன் வாங்கிக்குவாங்க. 5 அல்லது 10 சதவீத கமிஷன் குடுப்பதில் இராமசாமிக்கு சந்தோஷம்தான் என்கிறார் இராமசாமி, ‘ஏன்னா நமக்கு எந்தத் தலைவலியும் கிடையாது.. வாங்கறதுக்கு வியாபாரி வரவரைக்கும் அங்க நின்னுகிட்டு இருக்க வேண்டாம்.. சில சமயம் ஒரு நாளுக்கு மேலே ஆகும்.. நமக்கு வேற நிறைய வேலைகள் இருக்கும்.. பண்ருட்டியிலேயே காத்துகிட்டு இருக்க முடியாது’.

20 வருஷத்துக்கு முன்னாடி, நெறயப் பயிர் இருந்துச்சு இந்த மாவட்டத்தில் என்கிறார் இராமசாமி. ‘நெறய மரவள்ளிக் கிழங்கும், மல்லாட்டையும் பயிர் செஞ்சோம். அப்போ இங்க முந்திரித் தொழிற்சாலை நெறய வந்துச்சு.. அதனால வேல செய்ய ஆள் கிடைக்கறது கஷ்டமாயிருச்சு. அதச் சமாளிக்க விவசாயிகள் பலாப் பயிருக்கு மாறிட்டாங்க. பலாப்பயிருக்கு அதிக வேலையாட்கள் தேவைப்படாது.. வருஷத்தில சில நாள் மட்டும்தான் தேவைப்படும்.. பலாப்பழம் இவங்கள மாதிரி (கருவாடு விற்க வந்தவர்களைக் காட்டி) ஆட்கள பக்கத்து ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்துரும்’, என்கிறார்.

ஆனால், பலாப்பழம் பயிர் செய்வதில் இருந்தது விவசாயிகள் வெளியேறுகிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். இராமசாமியிடம் இருக்கும் 5 ஏக்கர் நிலத்தில் சுமார் 150 மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளன. அங்கங்கே முந்திரி, மாமரம், புளியமரங்கள் உள்ளன. ‘பலாவும் முந்திரியும் குத்தகையில் இருக்கு. மாம்பழமும், புளியும் எங்களுக்கு’, என்கிறார். பலாமர எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறார். ‘எங்களுக்குப் புயல் ரொம்பப் பெரிய பிரச்சினை. போனவாட்டி வந்த ‘தானே’ புயல்ல கிட்டத்தட்ட 200 மரம் சாஞ்சிருச்சு. அதையெல்லாம் வெட்டி விக்க வேண்டியதாப் போச்சு. விழுந்த மரத்துக்குப் பதிலா இப்ப முந்திரிய நட்டுருக்கோம்’.

மத்த மரங்களுக்கும் புயல் பிரச்சினைதான்.  ‘ஆனா, அதெல்லாம் முதல் வருஷத்துல இருந்தே காய்ப்புக்கு வந்துரும்.. முந்திரிக்கு பராமரிப்புச் செலவு ரொம்ப குறைச்சல். கடலூர் மாவட்டம் புயலுக்குப் பேர் போனது. 10 வருஷத்துக்கு ஒருவாட்டி பெரும்புயல் வரும்.. நல்லாக் காய்க்கற வயசான, பெரிய பலாமரங்கள்தான் மொதல்ல விழும்.. துயரமா இருக்கும்’, என்கிறார். கைகளை விரித்து, தன் தலையை ஆட்டி, அந்த நஷ்டத்தைத் தன் உடல் மொழியால் விளக்க முயல்கிறார்.

PHOTO • Aparna Karthikeyan
PHOTO • Aparna Karthikeyan

இடது: பலாமரம் தொடர்பாக கடந்த பல வருடங்களாக இராமசாமி சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள் அடங்கிய புத்தகங்கள். அதில் சில மிகவும் அரிதானவை. வலது: பழைய நாணயங்களைச் சேகரித்து வரும் நாணய ஆர்வலரான இராமசாமியிடம் இருக்கும் அருமையான நாணயத் தொகுப்பு

கடலூர் மாவட்ட ஆய்வறிக்கை அதற்கான விடையைச் சொல்கிறது . ’நீண்ட கடற்கரையை எல்லையாகக் கொண்ட கடலூர் மாவட்டம், புயல் மற்றும் அதன் விளைவான பெருமழை ஏற்படுத்தும் வெள்ளம் போன்றவற்றால், அதிகம் பாதிக்கப்படக் கூடிய ஒன்று’.

2012 ஆம் ஆண்டு செய்தித்தாள் அறிக்கைகள், ‘தானே புயல்’, ஏற்படுத்திய சேதங்களை ஆவணப்படுத்தியுள்ளன. 2011 ஆம் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி, ‘தானே’, புயல் கடலூர் மாவட்டத்தைத் தாக்கி, கிட்டத்தட்ட 2 கோடி பலா, மா, வாழை, தென்னை மற்றும் முந்திரி மரங்களை சாய்த்தது’, என்கிறது பிஸினஸ் லைன் வணிக நாளிதழ். ‘மரங்கள் விழுந்து கெடக்கறதப் பாக்க சகிக்கலை. யாருக்கெல்லாம் மரம் வேணுமோ, பணமே தர வேணாம்.. வந்து வெட்டி எடுத்துட்டுப் போங்கன்னு சொல்லிட்டோம்.. நிறயப் பேர் வந்து எடுத்துட்டுப் போயி, வீடுகட்ட உபயோகிச்சிகிட்டாங்க’, என அந்தச் சோக நிகழ்வை நினைவு கூர்கிறார் இராமசாமி.

*****

இராமசாமியின் பலாத்தோட்டம், அவர் வீட்டில் இருந்தது சிறு தொலைவில் உள்ளது. அவரது அண்டைத் தோட்டத்தில் விவசாயி, பலாப்பழங்களை வெட்டி, வரிசையாக வைத்திருந்தார். சிறுபிள்ளைகளுக்காக இயக்கப்படும் விளையாட்டு ரயிலின் பெட்டிகள் போல, ஒன்றின் பின் ஒன்றாக வைக்கப்பட்டு, சந்தைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருந்தன. இராமசாமியின் தோட்டத்துக்குள் நுழைந்ததுமே வெப்பம் குறைகிறது.  வெயில் பல டிகிரிகள் குறைவதை உணர முடிந்தது

மரங்கள், செடிகள், பழங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே நடக்கிறார் இராமசாமி. இந்தப் பயணம் எனக்கு கொஞ்சம் கல்விப் பயணமாகவும், பெரும்பாலும் சுற்றுலா போலவும் இருக்கிறது. உருண்டையான ருசியான முந்திரிப்பழம், ஹனி ஆப்பிள்(?), இனிப்பும், புளிப்புமான புளியம்பழம் என பல பொருட்களை தின்பதற்குத் தருகிறார்

அடுத்து சில பிரிஞ்சி இலைகளை பிய்த்து நம்மை முகர்ந்து பார்க்கச் சொல்கிறார். எங்க நிலத்துத் தண்ணிய டேஸ்ட் பண்ணிப் பாக்கறீங்களா எனக் கேட்டவர், நாம் பதில் சொல்லும் முன்பேயே, மின்சார மோட்டரை இயக்குகிறார். ப்ளாஸ்டிக் பைப் வழியே நீர் பீறிட்டு வருகிறது. மதிய வெயிலில், வைரமென மின்னுகிறது நீர். கைகளைக் குவித்து, போர்வெல் நீரைப் பருகுகிறோம். நீர் இனிப்பாக இல்லை. ஆனால் சுவையாக இருக்கிறது. நகரத்து நீர்க்குழாய்களில் க்ளோரின் வாசத்துடன் வரும் நீர் போலில்லாமல். பெருமிதப் புன்னகையுடன் மோட்டரை நிறுத்துகிறார். எங்கள் சுற்றுலா தொடர்கிறது.

PHOTO • M. Palani Kumar

இராமசாமி, மளிகம்பட்டு கிராமத்தில் உள்ள தன் வீட்டில்

மீண்டும் மாவட்டத்தின் மிக வயதான மரமான ஆயிரம் காச்சிக்கு நடந்து வந்து சேர்கிறோம். மிகப் பெரிதாக அடர்ந்து பரந்து இருக்கும் அதிசயம். ஆனால், மரத்துக்கு வயதாகி விட்டது.. அங்காங்கே மரம் சுருண்டு, சில இடங்களில் தண்டில் ஓட்டை விழுந்து இருப்பதைக் காண முடிகிறது.. மரம், அடித்தண்டில், சுற்றிக் காய்த்திருக்கும் பலாப்பழங்களினாலான ஆடையை அணிந்திருக்கிறது. ‘அடுத்த மாசம், இன்னும் அழகா, பெரிசா இருக்கும்’, என்கிறார் இராமசாமி

அவர் தோட்டத்தில் பல பெருமரங்கள் உள்ளன. ‘அங்கிருக்கு பாருங்க.. அதுதான் 43% குளுக்கோஸ் பலா.. நான் டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டேன்’, என்று இன்னொரு மூலையில் இருக்கும் பலாமரத்தை நோக்கிச் செல்கிறார். மரத்தின் நிழல்கள் தரையில் நடமிடுகின்றன.. கிளைகள் சலசலவெனப் பேசிக்கொள்கின்றன. பறவைகள் பாடுகின்றன. மரத்தின் நிழலில் படுத்துக் கொண்டு உலகை நோக்கும் ஆவல் வருகிறது.. ஆனால், இராமசாமி பல்வேறு மரங்கள் அவற்றின் ரகங்கள் எனப் பேசிக்கொண்டே போகிறார். கேட்பதற்கு மிகவும் அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. நீலம், பெங்களூரா போன்ற மாம்பழ வகைகளைப் பரப்புவது எளிது. ஆனால் பலாப்பழ ரகங்களை பரப்புவது மிகவும் கடினமானது.

’இப்போ, இந்த இனிப்பான பலாமரத்தைப் பரப்பனும்னா, விதைய வெச்சி செய்ய முடியாது. ஏன்னா, பழத்துக்குள்ள இருக்கற விதை, ஒன்னு கூட இந்த மரம் மாதிரியே இருக்கும்னு எதிர்பார்க்க முடியாது. ஏன்னா, பலாப்பழம் அயல் மகரந்தச் சேர்க்கையினால உருவாகி வருவது. இன்னொரு மரத்துல இருக்கற மகரந்தம் வந்து சேர்ந்து, இதே ரகத்துக்கான விதை உருவாகி வருவதைத் தடுத்துருது;.

’சீஸன் முதலில் அல்லது இறுதியில் வரும் பழத்தை, அப்போது 200 அடி தூரம் வரை வேறெந்த மரத்திலும் பழம் இல்லை என உறுதி செய்து கொண்டு, அந்தப் பழத்தில் உள்ள விதைகளை உபயோகிக்கலாம்’. இல்லையெனில், மிக இனிப்பான பழங்கள் காய்க்கும் கிளைகளை வெட்டி, நட்டு, இன்னொரு மரத்தை உருவாக்கலாம்.

இதில் இன்னுமொரு சிக்கலும் உள்ளது. பலாப்பழம் அது அறுவடை செய்யப்படும் காலத்தைப் பொறுத்து (45, 55, 70 நாட்கள்) அதன் சுவை மாறுவது. பலாப்பழச் சாகுபடிக்கு அதிகம் ஆட்கள் தேவையில்லை. ஆனால், மிகக் குறைவான நாட்களில் பழுத்துவிடுவதால், தேவைப்படும் நேரத்தில் ஆட்கள் கிடைப்பது முக்கியம். இல்லையெனில், சிக்கல். ‘இதச் சமாளிக்க குளிர்பதனக் கிடங்கு வேண்டும்’. நாம் சந்திக்கும் விவசாயிகளும், வணிகர்களும் ஒரே குரலில் சொல்வது இதுதான்.  ‘ 3 நாள், அதிக பட்சம் 5 நாள்தான் தாங்கும். அதுக்கப்பறம் வீணாகிப் போகும்’, என்கிறார் இராமசாமி. ‘ஆனா முந்திரி அப்படியில்ல.. ஒரு வருஷம் கூட வச்சி விக்க முடியும்.. பலா, ஒரு வாரம் கூடத் தாங்காது!’.

அது ஆயிரம் காச்சிக்கு வியப்பாக இருக்கும்.. 200 வருஷமா இது போன்ற கதைகளைத்தானே அது கேட்டுக் கொண்டிருக்கிறது...

PHOTO • M. Palani Kumar

இடது: இராமசாமியிடம் உள்ள புகைப்படங்களில், ஆயிரம்காச்சியின் மிகப் பழைய புகைப்படம். வலது: ஆயிரம் காச்சி இன்று (2022)

இந்த ஆராய்ச்சி, அஸீம் ப்ரேம்ஜிப் பல்கலைக்கழகத்தின், 2020 ஆண்டு நிதி நல்கைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

அட்டைப் படம்: எம். பழனி குமார்

தமிழில்: பாலசுப்ரமணியம் முத்துசாமி

Aparna Karthikeyan

अपर्णा कार्थिकेयन स्वतंत्र मल्टीमीडिया पत्रकार आहेत. ग्रामीण तामिळनाडूतील नष्ट होत चाललेल्या उपजीविकांचे त्या दस्तऐवजीकरण करतात आणि पीपल्स अर्काइव्ह ऑफ रूरल इंडियासाठी स्वयंसेवक म्हणूनही कार्य करतात.

यांचे इतर लिखाण अपर्णा कार्थिकेयन
Photographs : M. Palani Kumar

एम. पलनी कुमार २०१९ सालचे पारी फेलो आणि वंचितांचं जिणं टिपणारे छायाचित्रकार आहेत. तमिळ नाडूतील हाताने मैला साफ करणाऱ्या कामगारांवरील 'काकूस' या दिव्या भारती दिग्दर्शित चित्रपटाचं छायांकन त्यांनी केलं आहे.

यांचे इतर लिखाण M. Palani Kumar
Editor : P. Sainath

पी. साईनाथ पीपल्स अर्काईव्ह ऑफ रुरल इंडिया - पारीचे संस्थापक संपादक आहेत. गेली अनेक दशकं त्यांनी ग्रामीण वार्ताहर म्हणून काम केलं आहे. 'एव्हरीबडी लव्ज अ गुड ड्राउट' (दुष्काळ आवडे सर्वांना) आणि 'द लास्ट हीरोजः फूट सोल्जर्स ऑफ इंडियन फ्रीडम' (अखेरचे शिलेदार: भारतीय स्वातंत्र्यलढ्याचं पायदळ) ही दोन लोकप्रिय पुस्तकं त्यांनी लिहिली आहेत.

यांचे इतर लिखाण साइनाथ पी.
Translator : Balasubramaniam Muthusamy

The son of a small farmer, Balasubramaniam Muthusamy studied agriculture and rural management at IRMA. He has over three decades of experience in food processing and FMCG businesses, and he was CEO and director of a consumer products organisation in Tanzania.

यांचे इतर लिखाण Balasubramaniam Muthusamy