பெரம்பலூரில் சில கிராமங்களில் கிராமப்புற மேம்பாட்டுக்காக பணியாற்றிவரும் அமைப்பான பயிருடன் மணிமாறன் இணைந்து குழந்தைகளுக்கான புதிய விளையாட்டுகளை உருவாக்க விரும்புகிறார், இது தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் அதேவேளையில் வலுவான சமூக விழுமியங்களையும் அவர்களிடம் வளர்த்தெடுக்கும். "அதற்கான வேலையை நாங்கள் ஏற்கனவே துவங்கிவிட்டோம், ஆனால் தற்போதைக்கு எங்களுடைய முழு கவனமும் கோவிட் 19 பற்றிய விழிப்புணர்வை எங்களது கிராமத்தில் ஏற்படுத்துவதிலேயே இருக்கிறது, ஏனெனில் இது ஒரு புது வியாதி மேலும் எங்களது மக்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. குழந்தைகளுக்கான இத்தகைய விளையாட்டுகளை உருவாக்குவதற்காக நாங்கள் விரைவில் மணிமாறன் மற்றும் மகிழினியுடன் இணைந்து பணியாற்றுவோம்", என்கிறார் பயிரின் வழிகாட்டியான ப்ரீத்தி சேவியர்.
இது குறிப்பாக இவர்களைப் போன்ற கலைஞர்களுக்கு கடுமையான நேரம் தான் என்று மணிமாறன் ஒப்புக்கொள்கிறார். நாட்டுப்புறக் கலைஞர்கள் மக்கள் எத்தகைய நெருக்கடியை சந்தித்தாலும் மக்களுடனே இருப்பர். ஆனால் இப்போது தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டிய நேரம் அதனால் ஒதுங்கி இருப்பது சற்று கடினமாக இருக்கிறது". வேலையை இழந்து நிற்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசாங்கம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். அதற்கு பதிலாக நாங்கள் சமூக ஊடகத்தில் எங்களது கலை நிகழ்சிகளை நடத்துகிறோம். பொருளாதார ரீதியாக நாட்டுப்புறக் கலைஞர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே இந்த அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்", என்று அவர் ஆர்வத்துடன் கூறுகிறார்.
ஆனால் நிவாரணம் வழங்கப்பட்டாலும் வழங்கப்படவில்லை என்றாலும் மணிமாறனும் மகிழினியும் தொடர்ந்து பறை இசைப்பார்கள், பாடுவார்கள் கொரோனா வைரஸ் குறித்து ஏற்படும் அச்சங்களை தவிர்க்க ஒவ்வொரு நாளும் பாடுவார்கள். நாங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் படி தொடர்ந்து வலியுறுத்துவோம் மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். கொரோனா கும்பிடு போட்டு நம்மை விட்டு வெளியேறும்போது, நாங்கள் அதை எங்கள் பறையுடன் கொண்டாடுவோம்".
கொரோனா பாடல்
தானா தனத் தந்தானா
தாண்டவம் ஆடுது கொரோனா
வீணா புரளிகள
வீசிப் பலர் வராணா
வதந்திகள் வேண்டாம்
வம்படிகள் வேண்டாம்
அலட்சியம் வேண்டாம்
அச்சப்படவும் வேண்டாம்
கொரோனா கொடுஞ்செயல
தடுத்திட வழியத்தேடு
கொரோனா வராதிருக்க
துணியால மூக்க மூடு
விழிப்புணர்வு மட்டும் தான்
கொரோனாவ தடுக்கும்
விலகி நாம இருந்தோமுன்னா
கொரோனா ஓட்டம் எடுக்கும்
அசைவம் உண்பதால
கொரோனா வருவதில்லை
சைவம் என்பதால
கொரோனா விடுவதில்லை
எல்லா நாடுகளும்
அதிர்ச்சியில இருக்கு
எப்படி வந்ததுன்னு
ஆய்வு நடந்திட்டிருக்கு
நோய் எதிர்ப்புச் சக்தி தரும்
உணவுகள உட்கொள்ளு
தற்காப்பு துணையோடு
பொய்கள உதறித்தள்ளு
இருமல் உள்ளோரிடம்
இடைவெளி வேண்டும்
தும்மல் கொண்டோரிடம்
தூரம் நிற்க வேண்டும்
காய்ச்சல் அதிகரிச்சா
கருத்தில் கொள்ள வேண்டும்
மூச்சிரைப்பு அதிகமானா
முழிச்சிக்கொள்ள வேண்டும்
எட்டு நாளா எல்லாம் இருந்தா
கொரோனாவா இருக்கும் - ஒரு
எட்டுப் போயி சிகிச்சை எடுத்தா
கொரோனாவ குறைக்கும்
தமிழில்: சோனியா போஸ்