வலது கரத்தில் வாளையும், இடது கரத்தில் குதிரையின் கடிவாளத்தையும் பிடித்தபடி கம்பீரமாக குதிரை மீது அமர்ந்திருக்கும் வீர நங்கை வேலு நாச்சியாரின் சிலை, தமிழக குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தில் இடம் பெற்ற பிரபலமான ஒன்று. இந்திய விடுதலைக்குப் போராடிய வ.வ.சிதம்பரனார், சுப்ரமணிய பாரதி, மருது சகோதரர்களுடன், அவரது சிலையும் அந்த வாகனத்தில் இடம் பெற்றிருந்தது.
'இந்திய விடுதலைப் போரில் தமிழகம்', என்னும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த வாகனம் , தில்லியில் நடைபெற இருந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கெடுப்பதற்காகப் பரிந்துரைக்கப் பட்டிருந்தது. ஆனால், இதை மத்திய அரசின் 'வல்லுநர்' குழு நிராகரித்தது. மறுபரிசீலனை செய்யும்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் வைத்த வேண்டுகோள் செவிசாய்க்கப்படவில்லை. பின்னர் இவ்வாகனம் தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம் பெற்றுப் பிரபலமடைந்தது
அந்த வாகனத்தை நிராகரிக்க, மத்திய அரசின் 'வல்லுநர்' குழு சொன்ன காரணங்களுள் ஒன்று, 'அந்த வாகனத்தில் இடம் பெற்றிருந்த பலரை, இந்தியப் பொதுமக்களுக்குத் தெரியாது', என்பதாகும். அந்தக் கருத்தை முற்றிலுமாக மறுத்திருப்பார். சிவகங்கைச் சீமையை ஆண்ட வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர். அவருக்கும் தனக்கும், தனிப்பட்ட தொடர்பு இருப்பதாக நம்புகிறார் அக்ஷயா.
'11 ஆம் வகுப்பு படிக்கையில், பள்ளியில் நடந்த நாட்டிய நாடகத்தில், நான் வேலு நாச்சியாராக நடித்தேன்.. அது என் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது', என்கிறார் அவர்.
'அது வெறும் நடிப்பும் நடனமும் மட்டுமல்ல.. வேலு நாச்சியாராக நான் நடித்த போது, பாடல் வரிகளின் வழியே வெளிப்பட்ட அவர் ஆளுமையின் வலிமையையும் தைரியத்தையும் என்னால் உணர முடிந்தது' முறைப்படி செவ்வியல் நடனம் பயின்றிருந்த அக்ஷயாவுக்கு அன்று உடல் நிலை சரியில்லை.. அந்த நாட்டிய நாடகத்தில் பங்கு கொள்ள முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனாலும் பங்கு பெற்றார்..
மேடையிலிருந்து இறங்கி வருகையில் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது.. அன்று அவர் பங்குபெற்ற அணி இரண்டாம் பரிசு பெற்றது.. கையில் குளுகோஸ் ஊசியுடன் மேடையேறி பரிசைப் பெற்று வந்தார். அது அவருக்கு பெரும் தன்னம்பிக்கையைத் தந்தது. அதன் பின்னர் தைரியம் கூடி, பைக் ஓட்டவும், கார் ஓட்டவும் கற்றுக் கொண்டார்.












