தங்கள் அன்புக்குரிய தலைவன் போர்க்களத்தில் விழுந்து கிடப்பதை அருகிலுள்ள கிராமத்துப் பெண்களே கண்டுபிடித்தனர். தங்கள் குடும்பத்து ஆண்களை தேடியே அவர்கள் அங்கு வந்திருந்தனர். மாறாக, ரத்தக் காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்கள் தலைவர் ஊமைத்துரையை பார்த்தனர். அவரை கவனமாக தூக்கி, மூன்று கிமீ தொலைவிலுள்ள தங்கள் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர்.
விரைவிலேயே ஊமைத்துரையை தேடி வீரர்கள் வந்தனர். உடனடியாக அவரை வெள்ளைத் துணியால் போர்த்திய பெண்கள், பெரியம்மை நோயால் இறந்து போனார் என கதறி அழுதபடி வீரர்களிடம் கூறினர். உயிருக்குப் பயந்து படையினர் ஓட்டம் பிடித்தனர். இதனால் ஊமைத்துரை உள்பட பல வீரர்கள் காப்பற்றப்பட்டனர்.
கதையாக கூறப்பட்டாலும் இது உண்மை. 200 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்தது இது. போர் குறித்த 19-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் குறிப்பேடுகளில் இந்த செய்தி காணப்படுகிறது. அதை இப்போது தன்னுடைய அழகான தமிழால் நம்மிடம் விவரிக்கிறார் எழுத்தாளர் சோ.தர்மன். பல நூற்றாண்டுகளாக கிராமங்கள் எப்படி வைரஸ், பிளேக் மற்றும் தொற்றுநோயை எதிர்கொண்டன என்பதை விலைமதிப்பற்ற வாய்மொழி வரலாறாக நமக்கு தருகிறார்.
“பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக இருந்த புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை. காது கேளாத வாய் பேச முடியாத ஊமைத்துரையை ஊமை (உள்ளூரில்) என்றும் போலி (பிரிட்டிஷாரால்) என்றும் அழைக்கப்பட்டார். தனது மக்களால் அளவுக்கதிகமாக நேசிக்கப்பட்டாலும் கிழக்கிந்திய கம்பனியால் வேட்டையாடப்பட்டார். “இவை எல்லாவற்றையும் நீங்கள் காலனல் ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய மிலிட்டரி ரெமினைசைன்ஸ் (Military Reminiscences) புத்தகத்தில் வாசிக்கலாம்” என்கிறார் தர்மன்.
கோவில்பட்டியிலுள்ள தர்மனின் வீட்டிலிருந்து 50கிமீ தொலைவில்தான் 1799-ம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பாஞ்சலாங்குறிச்சி போர் நடைபெற்றது. ஆனால் பிரிட்டிஷ் காலனல் வெல்ஷ், ஊமைத்துரையை காப்பாற்றிய பெண்களை “பரிதாபகரமான அற்ப உயிரினங்கள்” என தனது நினைவுக்குறிப்பில் கூறியிருப்பதற்கு மாறாக, கிராமத்தினரின் அறிவையும் போர்க்களத்திலிருந்து ஊமைத்துரையை வீட்டிற்கு அழைத்து வந்த பெண்களின் வீரத்தையும் மனதார பாராட்டுகிறார் தர்மன். “அவர் தேடப்படும் நபர் என்பதோ, வீரர்கள் தங்களை பின்தொடர்வார்கள் என்பதோ, தங்கள் வீடுகள் சூறையாக்கப்படும் என்பதோ அந்த வீரப் பெண்களுக்கு தெரியாது என நீங்கள் நினைக்குறீர்களா?” என கேட்கிறார் தர்மன்.








