எல்லா தக்காளிகளையும் நீங்கள் உண்ணலாம். இலவசம். அதுவும் இந்த பருவத்தில் ஒரு பசுவாக இருந்தால் உங்களுக்கு நல்லது. பிற பருவங்களில் ஆடாக இருந்தால் உண்டு கொள்ளலாம்.
அனந்தபூரின் தக்காளி சந்தைக்கு அருகே இருக்கும் இப்பகுதியில்தான் விலை குறைந்த பழங்களும் காய்கறிகளும் கொட்டி வைக்கப்படுகின்றன. (தகவல் களஞ்சியத்தை பொறுத்தவரை பழங்களான தக்காளிகள் காய்கறியாகவும் கருதப்படுகிறது). பக்கத்து கிராமங்களிலிருந்து விளைச்சலை கொண்டு வரும் விவசாயிகள் விற்கப்படாத தக்காளிகளை இங்கே கொட்டி விடுகின்றனர். இந்த பகுதியில் எப்போதும் ஆடுகள் மேயும். “ஆனால் மழைக்காலத்தில் ஆடுகள் தக்காளிகளை உண்டால், நோய் வந்துவிடும்,” என்கிறார் பி.கடிரப்பா. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புக்குராயசமுத்ரம் கிராமத்திலிருந்து ஆடுகளை இங்கு கொண்டு வரும் மேய்ப்பர் அவர்.
இங்கு ஓர் உண்மை வெளிப்படுகிறது. மாடுகளை காட்டிலும் ஆடுகள் மிகவும் மென்மையான உடல் கொண்டவை. நோய் வந்துவிடக் கூடும்.அனந்தபூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து கொண்டிருப்பதால் ஆடுகளுக்கு மிகவும் பிடித்த தக்காளிப் பழங்களை உண்பதிலிருந்து அவை தடுக்கப்பட்டன. அவை அருகே இருக்கும் புற்கள் மற்றும் களைகளை மென்று கொண்டிருந்தன. அவ்வப்போது அவற்றுக்கு போட்டியாக இருக்கும் விலங்குகளை பொறாமையுடன் பார்த்துக் கொண்டன. தங்களின் ஆடுகள் உண்ணும் தக்காளிகளுக்கென மேய்ப்பர்கள் விவசாயிகளுக்கு பணம் எதுவும் கொடுப்பதில்லை. சில நேரங்களில் ஆயிரக்கணக்கான தக்காளிகள் ஒரு நாளில் கொட்டப்படுகின்றன.
அனந்தபூர் சந்தையில் தக்காளியின் விலை வழக்கமாக 20லிருந்து 30 ரூபாய்க்குள் இருக்கும். டவுனில் இருக்கும் ரிலையன்ஸ் கடையில் இன்னும் மலிவாக அவை கிடைக்கிறது. “ஒருமுறை கிலோ 12 ரூபாய் என்ற அளவுக்கு அவற்றை விற்றோம்,” என்கிறார் ரிலையன்ஸ் மார்ட்டில் வேலை பார்க்கும் ஒருவர். “அவர்களுக்கென தனி விற்பனையாளர்கள் இருக்கின்றனர்,” என ரிலையன்ஸ்ஸை பற்றி சொல்கிறார் ஒரு காய்கறி வியாபாரி. “ஆனால் நாங்கள் காய்கறி சந்தையில்தான் வாங்குவோம். அழுகிப்போய் மிஞ்சுவதை கடைசியில் தூக்கிப் போட்டுவிடுவோம்.”



