“முதலில் சமையலறையில் தான் தொடங்கியது,” என்கிறார் 2023, ஜனவரி 3ஆம் தேதி ஏற்பட்ட அந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளை நினைவுகூர்ந்தபடி உத்தராகண்ட்டின் சமோலி மாவட்டம் ஜோஷிமத் நகர வாசியான அஜித் ராகவ்.
37 வயது ஜீப் ஓட்டுநரான அவர் தனது வீட்டின் சமையலறையில் முதலில் ஏற்பட்ட பிளவு பிற இடங்களிலும் பரவியதாக சொல்கிறார். அவரது எளிமையான இரண்டு அடுக்கு வீட்டில் குறைவான வெடிப்புள்ள ஒற்றை அறையை தற்காலிக சமையலறையாக மாற்றியுள்ளார். எட்டுப் பேர் கொண்ட அக்குடும்பத்திற்கு திடீரென தங்க இடமின்றி போய்விட்டது.
“மூத்த மகள்களான 12 வயது ஐஸ்வர்யா, 9 வயது ஷிருஷ்டியை என் மூத்த சகோதரி வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்,” என்கிறார் ராகவ். ராகவ் அவரது மனைவி கவுரி தேவி, ஆறு வயது மகள் ஆயிஷா, அவரது வயதான இரண்டு அத்தைகள் ஆகியோர் அங்கு தங்கி உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். மாலையில் அருகில் உள்ள நகரின் சன்ஸ்கிரித் மகாவித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடியிருப்புக்கு உறங்கச் செல்கின்றனர். 25-30 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இங்கு இப்படி தங்கியுள்ளனர்.
ஜனவரி 21, 2023 அன்று சமோலி மாவட்ட அதிகாரிகள் வெளியிட்ட
அறிக்கை
யின்படிஜோஷிமாத்திலுள்ள ஒன்பது வார்டுகளிலுள்ள 181 கட்டடங்கள் வாழப் பாதுகாப்பற்றவை. 863 கட்டடங்கள் விரிசல்களைகொண்டிருந்தன. பகுதியிலுள்ள வீடுகளின் விரிசல்களை பாரிக்கு ராகவ் காட்டுகிறார். “இங்கிருக்கும் ஒவ்வொரு வீடும் ஜோஷிமாத்தின் கதைதான்,” என்கிறார் அவர் கட்டுப்படுத்தப்படாத வளர்ச்சித் திட்டங்கள்தாம் இச்சூழலுக்கு காரணம் எனக் குறிப்பிட்டு.
ஜோஷிமாத் கட்டடங்களின் கூரைகளிலும் சுவர்களிலும் தரைகளிலும் பிளவுகள் ஜனவரி 3, 2023லிருந்து உருவாகத் தொடங்கியதாக ராகவ் கூறுகிறார். சில நாட்களிலேயே தீவிர நெருக்கடியை நிலைமை தொட்டது. அதே நேரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) நேஷனல் ரிமோட் சென்சிங் செண்டர் (NRSC) ஜோஷிமாத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலங்களின் அளவு பற்றிய புகைப்படங்களை வெளியிட்டது: 2022 டிசம்பர் 2022 முடிவு தொடங்கி ஜனவரி 2023 தொடக்கம் வரை 5:4 செமீ. புகைப்படங்கள் தற்போது NRSC இணையதளத்தில் இல்லை.
ராகவ் வசிக்கும் சிங்தர் வார்டில் 151 கட்டடங்கள் விரிசல்களை கொண்டிருக்கிறது. 98 கட்டடங்கள் பாதுகாப்பற்ற பகுதியில் இருக்கின்றன. அவை யாவும் மாவட்ட அதிகாரிகளால் செஞ்சிலுவை வரையப்பட்டு, வாழவும் அருகே இருக்கவும் பாதுகாப்பற்றவை என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சிறுவயது முதலே இங்கு வசித்து வரும் ராகவ், செஞ்சிலுவையால் வீடு குறிக்கப்படுவதைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். “என் வீட்டு கூரையில் மீண்டும் அமர்ந்து சூரியனையும், மலைகளையும் பார்க்க வேண்டும்,” என்கிறார். இங்கு அவர் பெற்றோர், மூத்த சகோதரருடன் குழந்தைப் பருவம் முதல் வாழ்ந்து வருகிறார். இப்போது அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.
“செஞ்சிலுவை என்றால் அதிகாரிகள் [சமோலி மாவட்ட அதிகாரிகள்] அந்த இடத்தை அடைப்பார்கள், அந்த இடங்களுக்கு மக்கள் திரும்ப முடியாது என்றும் அர்த்தம்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இரவு வந்ததும், குடும்பத்தினர் உணவை முடிக்கின்றனர். ராகவின் தந்தை வழி உறவினரான அத்தை, பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வசிப்பிடத்திற்கு செல்ல காத்திருக்கிறார்.
அவரது வீடு சீர்குலைந்து காணப்படுகிறது: துணிகள் குவிக்கப்பட்டு திறந்து கிடக்கும் பெட்டி, காலியான அலமாரிகள், சுவர்களில் இருந்து நகர்த்தப்பட்ட குளிர்சாதனப் பெட்டி, வீட்டு உடைமைகள், ஸ்டீல், நெகிழி பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சிறு சிறு பைகள், டப்பாக்கள் வெளியில் எடுத்துச் செல்லும் வகையில் தயார் நிலையில் எங்கும் சிதறி கிடக்கின்றன.
“2000 ரூபாய் பணம் [மட்டுமே] உள்ளதால், என்னால் எனது உடைமைகளை லாரி வைத்து ஏற்றிச் செல்ல முடியாது,” என்று சுற்றி பார்த்தபடி சொல்கிறார் ராகவ்.
மாவட்ட அதிகாரிகள் “இரண்டு நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று மைக்கில்[மைக்ரோஃபோன்] அறிவித்ததை” அவரது மனைவி கவுரி நினைவுப்படுத்துகிறார்.
இதை கேட்டு அவர் சொல்கிறார், “நான் ஜோஷிமத்தை விட்டுச் செல்ல மாட்டேன், எங்கும் ஓட மாட்டேன். இதுவே எனது போராட்டம், சண்டை.”
ஜனவரி இரண்டாவது வாரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
*****
ஒரு வாரத்திற்கு பின் 2023 ஜனவரி 20ஆம் தேதி இரண்டு கூலி தொழிலாளர்களை ராகவ் அழைத்து வந்தார். அதற்கு முந்தைய நாள் இரவு, ஜோஷிமத்தில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு ஏற்கனவே வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியதோடு நிலைமை இன்னும் சீர்குலைத்தது. மதியம் 1 மணி அளவில் அவரும், தொழிலாளர்களும் சேர்ந்து கட்டில், குளிர்சாதனப்பெட்டி போன்ற கனமான வீட்டுப் பொருட்களை குறுகிய பாதைகள் வழியாக நகர்த்தி ஒரு டிரக்கில் ஏற்றுகிறார்கள்.
“பனிப்பொழிவு நின்றுவிட்டாலும், பாதைகள் ஈரமாகவும், வழுக்கவும் செய்கின்றன. நாங்கள் கீழே விழுகிறோம்,” என்று ராகவ் தொலைபேசியில் சொல்கிறார். “எங்கள் பொருட்களை எடுத்துச் செல்வது கடினமாக உள்ளது.” அவர் தனது குடும்பத்தை 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்த்பியாக் நகருக்கு அழைத்துச் சென்றுவிட்டார். அங்கு அவரது சகோதரி வசிக்கும் வீட்டின் அருகே வாடகைக்கு வீடு தேட திட்டமிட்டுள்ளார்.
ஜோஷிமத் நகரெங்கும் அடர்ந்த பனி போர்த்தப்பட்டிருந்தாலும், வெளிச் சுவர்களில் ஏற்பட்ட பிளவுகள் செஞ்சிலுவைகளுடன் பெரிதாக தென்படுகின்றன. வீடுகள், கடைகள், பெரிய கட்டடங்களின் அடித்தளங்களில் ஆழமான வெடிப்புகள் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சுனில் வார்டில் செஞ்சிலுவை தாங்கியபடி பனி படர்ந்து காணப்படும் தனது இரண்டு அடுக்கு வீட்டு வளாகத்தில் நிற்கிறார் 43 வயதாகும் ரஞ்சித் சிங் சவுகான். சிங் அவரது மனைவி, மூன்று குழந்தைகளுக்கு அருகில் உள்ள தங்கும் விடுதியில் தற்காலிக வசிப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெரும்பாலான உடைமைகள் வீட்டிலேயே உள்ளன. உடைமைகள் களவு போகாமல் தடுக்க பனி பொழிந்தாலும் கூட சிங் தனது வீட்டிற்கு தினமும் வந்து செல்கிறார்.
“என் குடும்பத்தை டெராடூன் அல்லது ஸ்ரீநகருக்கு என ஏதேனும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறேன்,” என்றார். பத்ரிநாத்தில் சவுஹான் நடத்தி வரும் உணவகம் கோடை காலங்களில் மட்டுமே திறந்திருக்கும். இப்போது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவரால் உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருக்கிறார். 2023 ஜனவரி 11ஆம் தேதி உத்தராகண்ட் அரசு அறிவித்த ரூ.1.5 லட்சம் இடைக்கால நிவாரண தொகையை பெறுவதற்கு அவர் காத்திருக்கிறார்.
மூழ்கி கொண்டிருக்கும் இந்த இமயமலை நகரில் எங்கும் பண தட்டுப்பாடு நிலவுகிறது. வீடு இழந்ததோடு, அதில் தனது முதலீட்டு பணமும் பறிபோனதை நினைத்த ராகவ் வருந்துகிறார். “நான் புது வீடு கட்டுவதற்கு 5 லட்சம் ரூபாய் செலவிட்டேன். மற்றொரு 3 லட்சத்திற்கு வாங்கிய கடனை இன்னும் திருப்பி செலுத்தவில்லை,” என்கிறார். தனது இடது கண் கோளாறு காரணமாக ஓட்டுநர் வேலையை விட்டுவிட்டு கேரேஜ் திறக்கும் திட்டமும் அவர் வைத்திருந்தார். “அனைத்தும் வீணாய் போனது.”
*****
தொடர்ச்சியாக நடைபெற்ற வளர்ச்சி பணிகள் தான் சேதம் ஏற்படுவதற்கு முதன்மையான காரணமாக கருதப்படுகிறது. குறிப்பாக தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC) தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் நிலையத்திற்காக அமைத்த சமீபத்திய சுரங்கப்பாதை. உத்தராகண்டில் தற்போது, சுமார் 42 நீர்மின் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஜோஷிமத் பேரழிவுக்கு நீர்மின்சாரம் காரணம் என கூறப்படுவது முதல்முறையல்ல .
நகரில் உள்ள மற்றவர்களைப் போன்று ராகவும் NTPCக்கு எதிராக தாலுக்கா அலுவலகத்தில் தினமும் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்கிறார். போராட்டத்தில் முதலில் இணைந்த அனிதா லம்பா சொல்கிறார், “ எங்கள் வீடுகள் சேதமடைந்துவிட்டன, ஆனால் எங்கள் நகரம் பாழாகி விடக் கூடாது.” 30 களில் உள்ள அங்கன்வாடி ஆசிரியையான அவர் வீடு வீடாகச் சென்று மக்களை அழைக்கிறார், “NTPC மற்றும் அதன் பேரழிவு திட்டங்களை அகற்ற போராடுமாறு.”
உத்தராகண்டில் நீர்மின் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக கட்டுரையாளர்கள் சஞ்சித் சரண் அகர்வால், எம்.எல். கன்சால் ஆகியோர் எழுதிய இந்திய இமய பிராந்தியமான உத்தராகண்டின் நீர்மின் வளர்ச்சி என்ற கட்டுரையை 2017ஆம் ஆண்டு சர்வதேச நீர், ஆற்றல் வெளியிட்டது. மேலும் பார்டர் ரோட்ஸ் நிறுவனம் (BRO) கட்டி வரும் சார் தாம் திட்டம், ஹெலாங் புறவழிச்சாலை ஆகியவை நிலைமையை இன்னும் மோசமடைய செய்கின்றன.
ஜோஷிமத்தில் மற்றொரு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் சுற்றுச்சூழல் போராளி அதுல் சதி. அவர் பத்ரிநாத் புனித யாத்திரையை பலவந்தமாக பிரபலப்படுத்துவதால் உணவகங்கள், வர்த்தக நிறுவனங்களின் கட்டமைப்பும் வேகமெடுத்து நிலத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன என்கிறார். மலையேற்ற விளையாட்டுகளுக்கும், முதன்மையான புனித தலமாகவும் திகழும் பத்ரிநாத் கோயிலுக்கு வரும் யாத்ரிகர்களுக்கான அடித்தளமாக நகரம் விளங்குகிறது. 2021ஆம் ஆண்டு பத்ரிநாத், ஜோஷிமத் நகரங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3.5 லட்சம் . இது ஜோஷிமத் மக்கள்தொகையை விட (மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011) 10 மடங்கு அதிகம்.
*****
ராகவ் ஊதுபத்தி ஸ்டேன்டில் மூன்று ஊதுபத்திகளை ஏற்றி வைக்கிறார். அதன் நறுமணம் அந்த சிறிய அறையை நிரப்புகிறது.
அவர்களின் உடைமைகள் மூட்டை முடிச்சுக் கட்டப்படும் நிலையில் இருக்கின்றன, ஆனால் தெய்வங்கள், பொம்மைகள் மட்டும் அப்படியே விடப்பட்டுள்ளன. எதிர்வர உள்ள நெருக்கடிகளை அறிந்தும், அவரது குடும்பத்தினர் குளிர்காலம் விடை பெறுவதைக் குறிக்கும் அறுவடைத் திருவிழாவான சுன்யாத்யாரைக் கடைப்பிடித்து வருகின்றனர். இப்பண்டிகையின் போது சுனி ரொட்டி எனும் ஒரு ரொட்டி வகை செய்து உண்ணப்படுகிறது.
மாலை மங்கும் நேரத்தில் தந்தையின் முழக்கத்தை
ஆயிஷா சொல்லிக் கொண்டே இருக்கிறாள்:
“
சுனி ரொட்டி காயேங்கா, ஜோஷிமத் பச்சாயேங்கா
[நாங்கள் சுனி ரொட்டி தின்று, ஜோஷிமத்தை காப்போம்].”
மணிஷ் உன்னியால் டெல்லியைச் சேர்ந்த புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர்.
தமிழில்: சவிதா