திருத்திக் கொள்ள தனுபாய் கோவில்கருக்கு வாய்ப்பில்லை. கையால் மிகவும் சிரமப்பட்டு அவர் செய்யும் நேர்த்தியான தையல்களில் ஒரு பிழை நேர்ந்தாலும் அதைச் சரிசெய்ய ஒரே ஒரு வழிதான் உள்ளது - முழு செயல்முறையையும் மீண்டும் செய்ய வேண்டும். அதாவது, சுமார் 97,800 தையல்களை பிரித்து விட்டு மீண்டும் தொடங்க வேண்டும்.
"நீங்கள் ஒரு தவறு செய்தால், உங்களால் சேலைப் படுக்கையைச் சரிசெய்ய முடியாது," என்று 74 வயதான அவர் தனது கைவினைக் கோரும் துல்லியத்தைப் பற்றி கூறுகிறார். ஆனாலும், சேலைப் படுக்கையின் தையல்களை மீண்டும் செய்ய வேண்டிய ஒரு பெண்ணை அவரது நினைவில் இல்லை. “இந்தத் திறமையை நீங்கள் கற்றுக்கொண்டால், நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள்,” என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
இந்த நுணுக்கமானக் கலையை அவர் ஒருபோதும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. வாழ்க்கை - மற்றும் உயிர்வாழும் கேள்விகள் - அவரை ஊசி எடுக்க வைத்தது. "வறுமை எனக்கு இந்தக் கலையை கற்றுக் கொடுத்தது," என்று அவர் கூறுகிறார், 1960 களின் முற்பகுதியில், 15 வயது மணமகளாக இருந்தபோது வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து.
“பள்ளிப் படிக்கும் வயதில் பேனா, பென்சிலுக்குப் பதிலாக அரிவாள், ஊசிதான் கையில் இருந்தது. நான் பள்ளிக்குச் சென்றிருந்தால், இந்தத் திறமையை நான் கற்றுக்கொண்டிருப்பேன் என்று நினைக்கிறீர்களா? என்று தனுபாய் அல்லது அன்பாக பாட்டி என அழைக்கப்படுபவர் கேட்கிறார்.





















