ரீட்டா அக்காவைப் பற்றின அனைத்தும் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்க முயலும் விஷயங்களின் நேரடி எடுத்துகாட்டாகும் - அதாவது, நம் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் உள்ளது என்பதை அறிவது! மாற்றுத் திறனாளியான இந்த தூய்மைப் பணியாளர் (அவரால் கேட்கவோ, பேசவோ முடியாது) கணவரை இழந்தவர்; இவரின் 17 வயது மகள் வீட்டை விட்டுச் சென்று, தன் பாட்டியுடன் வாழ்கிறார். 42 வயதாகும் இவரின் வாழ்வில் பெரும்பாலும் தனிமையையே அனுபவித்திருக்கிறார்; ஆனால், தனிமையில் வாடவில்லை.
தினமும் காலை, ரீட்டா அக்கா (அக்கம் பக்கத்தினரால் ‘அக்கா’ என்று அழைக்கப்படுகிறார்; சிலர் அவரை ஊம்மச்சி என்று அழைப்பார்கள் - இது வாய் பேச முடியாதவர்களைக் குறிக்கும் இழிவான சொல்) - எழுந்து, சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வேலையை திறம்படச் செய்கிறார். சில சமயங்களில், பணி முடிந்த பின், தனக்கு ஏற்படும் உடல்வழியைப் பற்றி புகார் கூறுவார். இந்த வேலையில் அவரின் ஈடுபாட்டை, குப்பை சேகரிக்கும் ட்ரோலியின் பக்கங்களில் அறியலாம். ரீட்டா தன் பெயரை அந்த ட்ரோலியில் மூன்று முறை, மூன்று வெவ்வேறு நிறங்களில் கிறுக்கியுள்ளார். பணி முடிந்தப்பின்னர், கோட்டூர்புரப் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அமைந்திருக்கும் அந்த சிறிய, தனிமையான வீட்டிற்கு திரும்புவார்.




























