செரா படோலி பகுதியில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெப்பம் நிலவக்கூடிய ஓர் மதியப்பொழுது அது. அங்குள்ள சாலை ஏறத்தாழ பாலைவனம் போல் காட்சியளிக்கின்றது. அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் சரயு ஆற்றின் மீதுள்ள பாலமானது உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோரா மற்றும் பிதோராகர்க் மாவட்டங்களின் எல்லைப்பகுதியாக திகழ்கிறது. அங்கு சூரிய ஒளியில் மின்னக்கூடிய சிவப்பு நிற தபால் பெட்டியை நாங்கள் கண்டோம்.
அந்த சிவப்பு நிற தபால் பெட்டி இந்த பகுதியில் உள்ள ஒரே ஒரு தபால் பெட்டியாகும். அது வேறு எங்கும் கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால்,இங்குள்ள இந்த தபால் பெட்டி மிகப்பெரும் மைல் கல்லாகும். செரா படோலி பகுதியின் புதிய கிளை அஞ்சல் அலுவலகம் முதலில் குமாவேனின் பகுதியாக கடந்த ஜூன் 23, 2016 அன்று தொடங்கப்பட்டது. இது தற்போது பனோலி சேரா குந்த், சேரா (உர்ஃப்) படோலி, சௌனபடல், நைலி, படோலி சேரா குந்த் மற்றும் சர்டோலா ஆகிய ஆறு கிராமங்களில் சேவை வழங்கி வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகும்.
இந்த பகுதியில் அஞ்சல் அலுவலகம் இல்லாததால் மக்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் குறித்த ‘கடிதங்கள் கடக்க மறந்த கிராமம்’ என்ற எனது கட்டுரை பாரியில் (PARI) வெளியாகிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. இந்நிலையில், செரா படோலி பகுதி தற்போது 262532 என்னும் அஞ்சல் குறியீட்டினை பெருமையுடன் தாங்கி நிற்கிறது.
கங்கோலிஹாட் தொகுதியின் பிதோராகர்க் பகுதியில் இந்த ஆறு கிராமங்களும் அமைந்துள்ளன. ஆனால், இந்த ஊர்களுக்கான அஞ்சல் நிலையம் பாலத்தின் எதிர்பக்கத்தில் ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் அல்மோரா மாவட்டத்தின் பாசியாச்சனா தொகுதியில் அமைந்துள்ளது. “இது ஒரு முரண்”, என்று முதல் தடவை இந்தப் பகுதியை பார்வையிட்ட போது பானொலி குந்த் கிராமத்தைச் சேர்ந்த மதன் சிங் இது குறித்து தெரிவித்திருந்தார். மேலும், “அவர்கள் தற்போது வரை எங்களை பிதோராகர்க் மாவட்டத்தின் பகுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது எப்படி இருக்கிறதென்றால் நாங்கள் பிதோராகர்க் மாவட்டத்தில் இருக்கிறோம் . ஆனால் எங்கள் முகவரி அல்மோரா மாவட்டத்தில் உள்ளது போன்று உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பி.எ.ஆர்.அய்(PARI) யில் கட்டுரை வெளியாகி சில வாரங்கள் கழித்து, புதிய அஞ்சல் நிலையத்தைப் பார்ப்பதற்காக அங்கு திரும்பிச் சென்றிருந்தேன். முன்னர் அருகில் உள்ள பாசியாச்சனா அஞ்சல் நிலையத்திலிருந்து கடிதம் வருவதற்கு 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். அவர்களின் சொந்த மாவட்டமான பிதோராகர்க் நகரில் உள்ள தலைமையகத்தில் இருந்து பணவிடையோ அல்லது கடிதமோ வருவதற்கு கூட கிட்டத்தட்ட ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலதாமதத்தின் காரணமாக முக்கியமான உரையாடல்கள் மற்றும் நிகழ்வுகளையும் அவர்கள் தவறவிட நேர்ந்தது. சில சமயம் முக்கியமான கடிதங்களை நேரில் சென்று பெற அல்மோராவில் உள்ள அஞ்சல் நிலையம் செல்வதற்கு 70 கிலோமீட்டர் வரை அவர்கள் பயணிக்க வேண்டி இருந்தது. தற்போது அந்த கிராமத்தினர் மத்தியில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது
ஆறு கிராம மக்களுக்கு சேவை புரிய உள்ள அந்த புதிய அஞ்சல் நிலையத்தின் திறப்பு விழாவினை இனிப்பு வழங்கி கொண்டாட உள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதுகுறித்து தெரிவித்த செரா படோலி பகுதியைச் சார்ந்த மோகன் சந்திர ஜோஷி, “நாங்கள், புதிய தபால் பெட்டியின் வரவைக் கொண்டாடுகிறோம். பிற இடங்களில் புதிய கடிதங்களையும், பணி ஆணைகளையும் மக்கள் கொண்டாடுகின்றனர்.!. இனி எங்கள் வாழ்வு முன்பிருந்தது போலவே இருக்காது” என்று சிரித்தபடி அவர் கூறினார்.
மேசை போடப்பட்டுள்ள சிறிய அறை, நான்கு நாற்காலிகள், இரும்பு அலமாரி இதுவே புதிய அஞ்சல் நிலையமாக மாறியுள்ளது. இந்த அஞ்சல் நிலையத்தின் ஒரே அலுவலராக கைலாஷ் சந்திர உபாத்யாய் உள்ளார். இவர் அஞ்சலக அதிகாரி, தபால்காரர் ஆகிய இருவேலைகளையும் மேற்கொள்கிறார். இவர் செராபடோலி பகுதியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கனை அஞ்சல் நிலையத்திற்கு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனினும், புதிய அஞ்சல் நிலையத்திற்கு அலுவலர் நியமிக்கப்படும் இந்த அலுவலகத்தை கவனித்துக் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளார். “ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள்ளாக அஞ்சலக அதிகாரி மற்றும் தபால் காரர் இருவரும் நியமிக்கப்படுவார்கள் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது” என அவர் கூறினார். ஒவ்வொரு காலைப்பொழுதும் கனை பகுதியிலிருந்து தபால்களை சேகரித்து கொண்டு செரா படோலி அஞ்சல் நிலையம் செல்லும் வழியில் வழங்குகிறார்.



