“செங்கல் சூளைக்குள் எந்த ஊரடங்கும் இல்லை. நாங்கள் எப்போதும் போலத் தான் வேலை செய்கிறோம்“ என்கிறார் ஏப்ரல் 5ஆம் தேதி நாம் சந்தித்த போது பேசிய ஹ்ருதே பரபு. “வாராந்திர சந்தை மூடப்பட்டுள்ளது தான் ஒரே மாற்றம். இதனால் நாங்கள் முதலாளியிடம் பெறும் வாராந்திர தொகையில் வாங்கும் உணவு தானியங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை.”
ஹ்ருதே கடன் சுமை தாங்காமல் மூன்றாண்டுகளாக தெலங்கானாவின் இந்த செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டம் துரிகலா தாலுக்காவில் உள்ள குத்துலுமுன்டா கிராமத்தில் மனைவியை விட்டுவிட்டு வந்துள்ளார். “நான் கிராமத்தில் இரும்பு கொல்லராக இருந்து நன்றாக சம்பாதித்து வந்தேன். வீடு கட்டியதும் கடன் சுமை ஏற்பட்டது. பணமதிப்பு நீக்கமும் சேர்ந்து கொண்டது” என்று அரைகுறையான இந்தியில் சொல்கிறார் அவர். “என் கிராமத்தில் சின்ன சின்ன வேலைகள் தான் கிடைக்கும். கடன் சுமை அதிகரித்துவிட்டதால் கடனை அடைப்பதற்காக இங்கு வந்து செங்கல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இங்குள்ள அனைவருமே கடன் சுமையில் உள்ளவர்கள் தான்.”
மார்ச் 25ஆம் தேதி அறிவித்த எதிர்பாராத ஊரடங்கு சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜின்னாராம் மண்டலின் கத்திபோதாராம் கிராமத்தில் இருக்கும் இச்செங்கல் சூளையில் குழப்பத்தையும், தொழிலாளர்களிடையே அசாதாரண சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. “எங்களுக்கு கிடைக்கும் வாராந்திர தொகையைக் கொண்டு வெள்ளிக்கிழமை தோறும் இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராம சந்தைக்கு நடந்து சென்று தானியங்கள், காய்கறிகள் வாங்குவது வழக்கம்” என்கிறார் ஜோயந்தி பரபு. அதே செங்கல் சூளையில் வேலை செய்யும் இவர் ஹ்ருதையின் தூரத்து உறவினர். “சிலர் மதுபானம் கூட வாங்குவார்கள். ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு அனைத்தும் நிறுத்தப்பட்டது.”
ஊரடங்கு தொடங்கிய இரண்டு நாட்களில் வெள்ளிக்கிழமை சந்தையில் தேவையான உணவுப் பொருட்களை தொழிலாளர்கள் வாங்கிவிட்டனர். ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் சந்தை அடைக்கப்பட்டது. “உணவு கிடைப்பது கஷ்டமாகிவிட்டது“ என்கிறார் ஹ்ருதை. “வேறு கடைகளை தேடி கிராமங்களுக்குள் செல்ல முயன்றால், அவர்களின் மொழி [தெலுங்கு] பேசவில்லை என்பதால் காவல்துறையினர் எங்களை விரட்டுகின்றனர்.”








