லடாக்கின் சுரு பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்கள் கோடை மாதங்களில் உயிர் கொள்கின்றன. பசுமையான நிலங்களில் ஓடைகள் கலகலத்து ஓடுகின்றன. பனி போர்த்திய மலைகளுக்கு நடுவே இருக்கும் அப்பகுதியை காட்டுப் பூக்கள் நிறைத்திருக்கிறது. பகல் வானம் அழகிய நீல நிறம் கொண்டிருக்கிறது. இரவு வானத்தில் பால்வெளியை நாம் காண முடியும்.
கார்கில் மாவட்டத்தின் இந்தப் பள்ளத்தாக்கில் வசிக்கும் குழந்தைகள் சுற்றுச்சூழலுடன் உணர்வுப்பூர்வமான உறவைக் கொண்டிருக்கிறார்கள். 2021ம் ஆண்டில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்ட டாய் சுரு கிராமத்தில் பெண் குழந்தைகள் பாறைகளில் ஏறுவார்கள். கோடையில் பூக்கள் சேகரிப்பார்கள். குளிர்காலத்தில் பனியை சேகரிப்பார்கள். ஓடைகளில் குதித்து விளையாடுவார்கள். வாற் கோதுமை வயல்களில் விளையாடுவதுதான் அவர்களுக்கு பிடித்த கோடைகாலப் பொழுதுபோக்கு.
லடாக் யூனியன் பிரதேசத்தின் பிரபலமான சுற்றுலாத் தளமான லெவிலிருந்து கார்கில் தூரத்தில் இருக்கிறது. லடாக்கின் இரு மாவட்டங்களில் அதுவும் ஒன்று.
கார்கிலை காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியாக பிற இடத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். அது அப்படி இல்லை. சுன்னி இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் காஷ்மீர் பகுதி போலன்றி, கார்கிலில் பெரும்பான்மையாக வசிப்பது ஷியா இஸ்லாமியர்தான்.
சுரு பள்ளத்தாக்கில் இருக்கும் ஷியா இஸ்லாமியர்கள், 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கார்கில் டவுனை முக்கியமான புனிதத் தளமாகக் கருதுகின்றனர். அங்கிருக்கும் மக்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான முகர்ரம் முக்கியமான காலக்கட்டம் ஆகும். நபிகள் நாயகத்தின் பேரரான இமாம் ஹுசைனுக்கு தீவிரமாக துக்கம் அனுசரிக்கப்படும். கிபி 680ம் ஆண்டின் அக்டோபர் 10ம் தேதி கர்பாலாவில் (தற்போதைய ஈராக்) நடந்தப் போரில் 72 பேருடன் அவர் கொல்லப்பட்டார்.
அந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் முகர்ரமில் நடக்கும் சடங்குகளில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்வர். ஜுலூஸ் அல்லது தஸ்தா என அழைக்கப்படும் ஊர்வலங்கள் பல நாட்களில் நடக்கும். இதில் பெரிய அளவுக்கான ஊர்வலம் முகர்ரத்தின் பத்தாம் நாளான அஷுரா அன்று நடக்கும். ஹுசைனும் பிறரும் கர்பாலாவில் கொல்லப்பட்ட நாள் அது. சில ஆண்கள் தங்களைத் தாங்களே சங்கிலிகள் கொண்டும் கத்திகள் கொண்டும் அடித்துக் கொள்ளும் (காமா ஜாணி) சடங்கைச் செய்வார்கள். அனைவரும் தங்களின் நெஞ்சில் அடித்துக் கொள்வார்கள் (சீனா ஜாணி).
அஷுரா தினத்துக்கு முந்தைய இரவில், பெண்கள் மசூதியிலிருந்து இமாம்பராவுக்கு (தொழுகை மண்டபம்) ஊர்வலமாக செல்வார்கள். செல்லும் வழியில் மர்சியா மற்றும் நோகா (புலம்பல் மற்றும் ஒப்பாரி) ஆகியவற்றைப் சொல்லிக் கொண்டு செல்வார்கள். (அஷுரா இந்த வருடத்தின் ஆகஸ்ட் 8-9ல் வருகிறது.)
அனைவரும் மஜ்லிக்கு (தொழுகைக் கூட்டம்) கூடுவார்கள். ஹுசைன் மற்றும் பிறரின் தியாகம் மற்றும் எதிர்ப்புணர்வை நினைவுகூறும் வகையில் முகர்ரம் நிகழ்வுகளின்போது ஒரு நாளுக்கு இருமுறை இமாம்பராவில் கூட்டம் நடக்கும். மண்டபத்தின் தனித்தனி இடங்களில் அமர்ந்து கொண்டு ஆண்களும் (மற்றும் சிறுவர்கள்) பெண்களும் கர்பாலா போர் குறித்த நிகழ்வுகளை அகா (மதத் தலைவர்) விவரிப்பதைக் கேட்பார்கள்.
மண்டபத்துக்கு மேலே பெண்களுக்கென ஒரு பால்கனி உண்டு. கீழே நடப்பவற்றை அவர்கள் அங்கிருந்து பார்க்க முடியும். ‘பிஞ்ச்ரா’ அல்லது கூண்டு என்ற வார்த்தையால் அப்பகுதி குறிக்கப்படுகிறது. சிறைப்படுத்தப்படுதல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற உணர்வை உருவாக்கும் வார்த்தை அது. ஆனால் பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அந்தப் பகுதி சுதந்திரத்தையும் விளையாடுவதற்கான வெளியையும் கொடுக்கும் இடமாக இருக்கிறது.
துக்கம் அனுசரிக்கப்படுதல் வேகம் பெற்று இமாம்பராவில் உச்சம் பெறும் தருணத்தில் சட்டென நிலை மாறுகிறது. பெண் குழந்தைகள் தங்களின் தலைகளைக் கவிழ்த்து உடன் சேர்ந்து அழுகிறார்கள். ஆனால் அதுவும் அதிக நேரத்துக்கு நீடிக்கவில்லை..
துக்கம் அனுசரிப்பதற்கான மாதமாக முகர்ரம் கருதப்பட்டாலும் குழந்தைகளின் உலகில் அது பிற நண்பர்களை சந்தித்து இரவுப் பொழுதிலும் அளவளாவக் கூடிய வாய்ப்பை வழங்கும் காலம். சில சிறுவர்கள் தங்களைத் தாங்களே அடித்துக் கொள்வதுண்டு. ஆனால் பெண் குழந்தைகளுக்கு அச்சடங்கு தடுக்கப்பட்டிருக்கிறது. பிறர் செய்யும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பது மட்டுமே பெண் குழந்தைகளின் வேலை.
முகர்ர மாதச் சடங்குகள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே வதைத்துக் கொண்டு ரத்தம் சிந்தும் ஆண்களைப் பற்றியதாகவே விவரிக்கப்படுகிறது. ஆனால் இன்னொரு வகை துக்கம் அனுசரித்தலும் இருக்கிறது. பெண்கள் துக்கம் அனுசரிக்கும் வழி அது. அமைதியாக முழுமையாக துக்கம் அனுசரிக்கும் வழி.
தமிழில் : ராஜசங்கீதன்