“என் முதுகு வெப்பத்தால் எரிகிறது” என்கிறார் கஜூவாஸ் கிராமத்திற்கு வெளியே உள்ள வன்னி மரக் கிளை நிழலில் தரையில் அமர்ந்திருக்கும் பஜ்ரங் கோஸ்வாமி. “வெப்பம் அதிகரித்தால், சாகுபடி குறைந்துவிடும்“ என்று அறுவடை செய்யப்பட்ட கம்பைப் பார்த்தபடி சொல்கிறார். அருகில் ஒட்டகம் ஒன்று 14 ஏக்கர் நிலத்தில் உலர் புல்லை மென்று கொண்டிருந்தது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் தாராநகர் தாலுக்காவில் உள்ள நிலத்தில் அவரும், அவரது மனைவி ராஜ் கவுரும் இணைந்து சாகுபடி செய்கின்றனர்.

“தலையில் வெப்பம் சுட்டெரிக்கிறது, காலும் வெப்பத்தில் பழுக்கிறது” என்கிறார் தெற்கு தாராநகரில் உள்ள சுஜாங்கர் தாலுக்காவைச் சேர்ந்த கீதா தேவி நாயக். நிலமற்ற விதவையான கீதா தேவி பக்வானி தேவி சவுத்ரி குடும்பத்திற்கு சொந்தமான விளைநிலத்தில் கூலி வேலை செய்கிறார். பக்வானி தேவியும், கீதா தேவியும் குதாவாரி கிராமத்தில் மாலை 5 மணிக்கு பணியை முடித்தனர். “இப்போதெல்லாம் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது“ என்கிறார் பக்வானி தேவி.

வடக்கு ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில்  கோடைக் காலத்தில் மணல் சுடுகிறது. மே, ஜூன் மாதங்களில் ஓர் உலையைப் போல காற்று கொதிக்கிறது. வெப்பத்தின் தாக்கம் குறித்த பேச்சு இப்போது பரவலாக இருக்கிறது. இம்மாதங்களில் வெப்பநிலை 40 டிகிரி வரை செல்கிறது. கடந்த மாதம் மே 26ஆம் தேதி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. இது தான் உலகின் அதிகமான வெப்பநிலை என்கின்றன செய்தி அறிக்கைகள்.

சுருவில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெப்பநிலை 51 டிகிரி செல்சியஸ் வரை சென்றது. இது நீரை கொதிக்க வைப்பதற்கான வெப்பத்தில் பாதிக்கும் மேற்பட்ட அளவாகும். “சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே வெப்பநிலை 50 டிகிரியை எட்டியது என் நினைவில் இருக்கிறது” என்கிறார் கஜூவாஸ் கிராமத்தில் உள்ள தனது பெரிய வீட்டின் கட்டிலில் அமர்ந்தபடி பேசும் ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியரும், நில உரிமையாளருமான 75 வயதாகும் ஹர்தயால்ஜி சிங்.

ஆறு மாதங்களுக்கு பிறகு, சில ஆண்டுகளில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வெப்பநிலை பூஜ்யத்திற்கு கீழே செல்லும். பிப்ரவரி 2020ல் இந்திய வானியல் ஆராய்ச்சித் துறை சுருவில் பதிவான 4.1 டிகிரி செல்சியசை இந்தியாவின் மிக குறைந்த வெப்பநிலையாக கண்டறிந்தது.
Geeta Devi and Bhagwani Devi of of Sujangarh tehsil, Churu: ' Garmi hee garmi pade aaj kal' ('It’s heat and more heat nowadays')
PHOTO • Sharmila Joshi

சுரு சுஜாங்கர் தாலுக்காவைச் சேர்ந்த கீதா தேவி, பக்வான் தேவி: 'இப்போதெல்லாம் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது'

மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் முதல் 51 டிகிரி செல்சியஸ் வரையிலான விரிவான வெப்பநிலை குறித்து இம்மாவட்ட மக்கள் அதிகமாகப் பேசுகின்றனர். ஜூன் 2019ல் நிலவிய 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பம், கடந்த மாதம் நிலவிய 50 டிகிரி வெப்பம் போன்றவற்றையெல்லாம் தாண்டி, பிற பருவ காலங்களையும் இந்த நீண்ட கோடைக் காலம் விழுங்கிவிடுகிறது.

“முன்பெல்லாம் கொளுத்தும் வெயில் என்பது ஒரு நாள் அல்லது இரு நாள் இருக்கும்“ என்கிறார் சுரு நகரவாசியும், சிகார் மாவட்டம் அருகே உள்ள எஸ்.கே. அரசு கல்லூரியின் முன்னாள் தலைமை ஆசிரியருமான பேரா. ஹெச். ஆர். இஸ்ரான். “இப்போது இதுபோன்ற வெப்பம் பல நாட்களுக்கு தொடர்கிறது. ஒட்டுமொத்த கோடையும் விரிவடைந்துவிட்டது.”

2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மதிய வேளையில் சாலையில் எங்களால் நடக்கவே முடியாது. எங்களது செருப்பு தாரில் ஒட்டிக் கொள்ளும் என நினைவுகூர்கிறார் அம்ரிதா சவுத்ரி.  மற்றவர்களை போன்றே அவரும் துணிகளை முறுக்கி சாயமேற்றும் தொழிலை சுஜாங்கர் நகரத்தில் திஷா ஷெகாவத்தி எனும் நிறுவனமாக நடத்தி வருகிறார். அவரும் கோடைக் காலத்தின் வெப்பம் அதிகரித்து வருவது குறித்து கவலை கொண்டுள்ளார். “இந்த வெப்ப மண்டலத்தில் வெப்பம் மேலும் அதிகரிப்பதுடன், முன்கூட்டியே கோடை காலம் தொடங்கிவிடுகிறது“ என்கிறார் அவர்.

“கோடைக் காலம் ஒன்றரை மாதங்கள் அதிகரித்துள்ளது“ என்கிறார் குதாவரி கிராமத்தில் வசிக்கும் பக்வானி தேவி. அவரைப் போன்றே சுரு மாவட்டத்தில் வசிக்கும் பலரும் பருவ நிலைகள் மாறியுள்ளது பற்றி பேசுகின்றனர். கோடைக் காலம் அதிகரித்து குளிர் காலத்திற்கான வாரங்களை குறைக்கிறது. இதனால் மழைக்கால மாதங்களும் சுருங்கி விடுகின்றன. எப்படி 12 மாத அட்டவணை என்பது கலவையாக மாறியது என்று பேசி வருகின்றனர்.

51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதோ, கடந்த மாதம் 50 டிகிரி வெப்பநிலை இருந்ததோ, ஒரே ஒரு வாரத்தில் மட்டும் நடந்ததில்லை. பருவநிலையில் இப்படி மெல்ல நிகழும் மாற்றங்கள் குறித்தும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

*****

2019ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்தில் சுருவில் 369 மிமீ மழை பொழிந்துள்ளது. இது மழைக்கால மாதங்களில் பொழியும் சராசரி அளவான 314 மிமீ மழையை விட சற்று அதிகம். இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வறண்ட மாநிலமான ராஜஸ்தான், நாட்டின் மொத்த பரப்பளவில் 10.4 சதவீதம் கொண்டுள்ளது. அவை வறண்ட, அரை வறண்ட பகுதியாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 574மிமீ மழை பொழிகிறது

In the fields that Bajrang Goswami and his wife Raj Kaur cultivate as sharecroppers outside Gajuvas village in Taranagar tehsil
PHOTO • Sharmila Joshi
In the fields that Bajrang Goswami and his wife Raj Kaur cultivate as sharecroppers outside Gajuvas village in Taranagar tehsil
PHOTO • Sharmila Joshi
In the fields that Bajrang Goswami and his wife Raj Kaur cultivate as sharecroppers outside Gajuvas village in Taranagar tehsil
PHOTO • Sharmila Joshi

தாராநகர் தாலுக்காவில் உள்ள கஜூவாஸ் கிராமத்திற்கு வெளியே வயலில் இணைந்து விவசாயம் செய்யும் பஜ்ரங் கோஸ்வாமியும், அவரது மனைவி ராஜ் கவுரும்

தோராயமாக 7 கோடி மக்கள்தொகை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 75 சதவீதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை அவர்களின் முதன்மை தொழில்கள். சுரு மாவட்டத்தில் சுமார் 20 லட்சத்து 50 ஆயிரம் பேரில் 72 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். அங்கு வானம் பார்த்த பூமியில்தான் விவசாயம் நடக்கிறது.

காலப் போக்கில் பலரும் மழையைச் சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டனர். “1990களில் இருந்து ஆழ்துளை கிணறுகள் (500-600 அடி ஆழம் வரை சென்றுவிட்டது) அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது. உப்புத்தன்மை காரணமாக இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்கிறார் பேரா. இஸ்ரான். “தற்காலிகமாக சில விவசாயிகள் ஊடு பயிராக நிலக்கடலை சாகுபடியை [ஆழ்துளை கிணற்று நீரில்] மாவட்டத்தின் 6 தாலுக்காக்களில் 899 கிராமங்களில் செய்து வந்தனர். சில காலங்களில் நிலம் வறண்டு பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுவிட்டன. ஒரு சில கிராமங்களில் மட்டுமே நிலத்தடியில் நீர் உள்ளது.”

ராஜஸ்தான் மாநில பருவநிலை மாற்றத்திற்கான வரைவு ( RSAPCC , 2010) ராஜஸ்தானின் 38 சதவீத நிலப்பகுதி (அதாவது 62,94,000 ஹெக்டேர் நிலம்) பாசன வசதியைப் பெற்றுள்ளதாகச் சொல்கிறது. சுருவில் மட்டும் 8 சதவீதம். சவுத்ரி கும்பாராம் நீரேற்ற கால்வாய் திட்டத்தின் மூலம் சில கிராமங்களுக்கும், மாவட்டத்தின் விளைநிலங்களுக்கும் தண்ணீர் அளிக்கப்படுகிறது. கம்பு, பச்சைப் பயறு, மோத், கவர் பீன்ஸ் ஆகிய நான்கு முதன்மை காரிப் பருவப் பயிர்கள் மழையையே அதிகம் சார்ந்துள்ளன.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக மழைப்பொழிவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுரு மக்கள் இரண்டு பெரிய மாற்றங்கள் குறித்தும் பேசுகின்றனர்: மழை மாதங்கள் நகர்ந்துவிட்டன. மழை அவ்வப்போது பெய்கின்றன. சில இடங்களில் தீவிரமாகவும், சில இடங்களில் மழையே இருப்பதில்லை.

பழங்கால விவசாயிகள் கடந்தகால முதல் மழை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில், வானில் மின்னல் வந்தால் மழை வருவதை அறிந்து கொண்டு வயல்களில் வேகமாக ரொட்டி செய்து கொள்வோம் [குடிசைகளுக்குள் செல்வதற்கு முன்],” என்கிறார் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 59 வயதாகும் விவசாயி கோவர்தன் சாஹரன். அவரது குடும்பத்தினருக்கு கஜூவாஸ் கிராமத்தில் சுமார் 120 ஏக்கர் நிலம் உள்ளது. ஜாட்கள், சவுத்ரிகள், பிற ஓபிசி சமூகத்தினர் சுரு விவசாயிகளில் பிரதான விவசாய சமூகத்தினர். “இப்போதெல்லாம் அடிக்கடி மின்னல் அடிக்கிறது, ஆனால் மழை இல்லை “ என்கிறார் சாஹரன்.

Bajrang Goswami and Raj Kaur (left) say their 'back has burnt with the heat', while older farmers like Govardhan Saharan (right) speak of the first rains of a different past
PHOTO • Sharmila Joshi
Bajrang Goswami and Raj Kaur (left) say their 'back has burnt with the heat', while older farmers like Govardhan Saharan (right) speak of the first rains of a different past
PHOTO • Sharmila Joshi

பஜ்ரங் கோஸ்வாமி, ராஜ் கவுர் (இடது) வெப்பத்தால் முதுகு எரிகிறது என்கின்றனர். கோவர்தன் சாஹரன் (வலது) போன்ற விவசாயிகள் கடந்த கால முதல் மழை குறித்து பேசுகின்றனர்

நான் பள்ளியில் படிக்கும் போது வடக்கே கருமேகம் தென்பட்டால் மழை வருவதை நாங்கள் சொல்லி விடுவோம். அரை மணி நேரத்தில் மழை வந்துவிடும் என்கிறார் சிகார் மாவட்டம் அருகே உள்ள சாதின்சார் கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் நரேன் பிரசாத். இப்போது, மேகங்கள் மட்டும் கடந்து செல்கின்றன என்று தனது வயலில் கட்டிலைப் போட்டு அமர்ந்தபடி சொல்கிறார். மழைநீரை சேமிப்பதற்காக தனது சுமார் 8 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரும் தொட்டியை பிரசாத் கட்டியுள்ளார். (2019 நவம்பரில் நான் அவரை சந்தித்த போது, அது காலியாக இருந்தது.)

ஜூன் இறுதியில் முதல் மழை தொடங்குகிறது. கம்பு பயிரிடும் போது சில வாரங்களில் மழை தொடங்குகிறது. ஆகஸ்ட் இறுதியில் ஒரு மாதம் முன்பே அது நின்றுவிடுகிறது என்கின்றனர் விவசாயிகள்.

இதனால் விதைக்கும் திட்டங்கள் வகுப்பது கடினமாக உள்ளது. “என் தாத்தா காலத்தில் காற்று, நட்சத்திரங்களின் நிலை, பறவைகளின் பாடல் பற்றி அறிந்திருந்தனர். அதற்கேற்ப வேளாண்மை பணிகளை செய்தனர்” என்கிறார் அம்ரிதா சவுத்ரி.

“இப்போது இந்த அமைப்பு முற்றிலும் உடைந்துவிட்டது” என்கிறார் எழுத்தாளரும், விவசாயியுமான துலாராம் சாஹரன். சாஹரனின் கூட்டு குடும்பம் தாராநகர் தொகுதியில் பாரங் கிராமத்தில் சுமார் 80 ஏக்கர் நிலத்தில் கூட்டாக வேளாண்மை செய்கிறது.

மழைக் காலம் தாமதமாக தொடங்கி, முன்கூட்டியே முடிந்துவிடுகிறது. மழையின் தீவிரமும் குறைந்துவிட்டது. எனினும் ஆண்டு சராசரி என்பது சுமாராக இருக்கிறது. “இப்போதெல்லாம் மழையில் வேகம் இல்லை“ என்கிறார் தரம்பால் சாஹரன். அவர் கஜூவாவில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார். “அது வருமா, வராதா என்பது யாருக்கும் தெரியாது. மழைப் பொழிவையும் கணிக்க முடியாது.என்று சொல்லும் அம்ரிதா, “வயலில் ஒரு பகுதியில் மழை பொழிகிறது. ஆனால் அதே வயலில் மற்றொரு பகுதியில் மழை இல்லை.” என்கிறார்.

Left: Dharampal Saharan of Gajuvas village says, 'I am not sowing chana because there is no rain after September'. Right: Farmers in Sadinsar village speak of the changing weather – Raghubir Bagadiya (also a retired army captain), Narain Prasad (former high school lecturer) and Shishupal Narsara (retired school principal)
PHOTO • Sharmila Joshi
Left: Dharampal Saharan of Gajuvas village says, 'I am not sowing chana because there is no rain after September'. Right: Farmers in Sadinsar village speak of the changing weather – Raghubir Bagadiya (also a retired army captain), Narain Prasad (former high school lecturer) and Shishupal Narsara (retired school principal)
PHOTO • Sharmila Joshi

இடது:கஜூவாஸ் கிராமத்தின் தரம்பால் சாஹரன் சொல்கிறார், 'செப்டம்பருக்கு பிறகு மழை இல்லை என்பதால் நான் கொண்டைக் கடலை விதைக்கவில்லை'. வலது: பருவநிலை மாற்றம் குறித்து சதின்சார் கிராம விவசாயிகள் பேசுகின்றனர்- ரகுபிர் பகாடியா (ஓய்வுப் பெற்ற இராணுவ கேப்டன்), நரேன் பிரசாத் (முன்னாள் உயர் நிலைப் பள்ளி விரிவுரையாளர்), ஷிஷூபல் நர்சரா (ஓய்வுப் பெற்ற பள்ளி முதல்வர்)

1951 முதல் 2007ஆம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் பெய்த தீவிர மழை குறித்த குறிப்புகள் RSAPCC கொண்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த மழை பொழிவு குறைந்துள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

பின் மழைக்காலமாகிய அக்டோபர், ஜனவரி-பிப்ரவரி வரையிலான ராபி பருவ மாதங்களில் வரும் சாரல் மழையையே சுரு விவசாயிகள் நீண்ட காலத்திற்கு சார்ந்திருந்தனர். அப்போது நிலக்கடலை அல்லது வார்கோதுமையை பயிரிடுவார்கள். “ஐரோப்பா, அமெரிக்கா இடையேயான பெருங்கடலில் இருந்து பாகிஸ்தான் எல்லையை கடந்து சக்ரவத் மழை வருகிறது” என்கிறார் ஹர்தயால் ஜி. அதுவும் இப்போது மறைந்துவிட்டது.

கொண்டைக் கடலை பயிர்களுக்கு மழையே நீரே போதுமானது. நாட்டின் கொண்டைக் கடலை களஞ்சியமாக தாராநகர் அறியப்படுவது இங்குள்ள விவசாயிகளுக்கு பெருமை என்கிறார் துலாராம். “அறுவடை சிறப்பாக இருக்கும் போது நாங்கள் கொண்டை கடலையை முற்றங்களில் குவித்து வைத்திருப்போம்.” இப்போது அந்த களஞ்சியம் கிட்டதட்ட காலியாகிவிட்டது. ”2007 ஆம் ஆண்டிலிருந்து, செப்டம்பர் மாதத்திற்கு பிறகு மழை பெய்வதில்லை என்பதால் நான் கொண்டைக் கடலை விதைப்பதில்லை”  என்கிறார் தரம்பால்.

நவம்பரில் வெப்பநிலை சரியும்போது சுருவின் கொண்டைக் கடலை பயிர்கள் நன்றாக முளைவிடும். சில ஆண்டுகளாக குளிர்காலமும் மாறிவிட்டது.

*****

ஜம்மு காஷ்மீருக்கு பிறகு, இந்தியாவில் அதிகளவிலான குளிர் காற்று ராஜஸ்தானில் தான் வீசுவதாக RSAPCC அறிக்கை குறிப்பிடுகிறது. 1901 முதல் 1999 வரையிலான கால கட்டத்தில் கிட்டதட்ட அரை நூற்றாண்டில் (1999க்கு பிறகு எந்த தரவுகளும் இல்லை) அங்கு 195 குளிர் அலைகள் வீசியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் அதிகளவிலான வெப்பநிலை, குறைந்த அளவிலான வெப்ப நிலை என இரண்டையும் கொண்ட மாநிலமாக உள்ளது. 2020 பிப்ரவரி மாதம் இந்திய சமவெளியில் மிக குறைந்த வெப்பநிலையாக சுருவில் 4.1 டிகிரி பதிவானது.

சுருவில் இப்போது குளிர் காலம் என்பதே குறைந்துவிட்டது என்கின்றனர். “நான் சிறுபிள்ளையாக இருந்தபோது (இப்போது 50 வயதாகிறது) நவம்பர் தொடக்கத்தில் அதிகாலை 4 மணிக்கு வயலுக்கு செல்லும்போது குளிர் காரணமாக கம்பளி போர்த்திக் கொள்வேன்“ என்கிறார் கஜூவாஸ் கிராமத்தின் கோவர்தன் சாஹரன். இப்போது கம்பு வயலில் வன்னி மரத்தரடியில் “பனியன் போட்டபடி உட்கார்ந்திருக்கிறேன். 11ஆவது மாதம் கூட வெப்பமாகத்தான் உள்ளது. “

Prof. Isran (left) of Churu town says: 'The entire summer has expanded'. Amrita Choudhary (right) of the Disha Shekhawati organisation in Sujangarh says, 'Even in this hot region, the heat is increasing'
PHOTO • Sharmila Joshi
Prof. Isran (left) of Churu town says: 'The entire summer has expanded'. Amrita Choudhary (right) of the Disha Shekhawati organisation in Sujangarh says, 'Even in this hot region, the heat is increasing'
PHOTO • Sharmila Joshi

சுரு நகரைச் சேர்ந்த பேரா. இஸ்ரான் (இடது) சொல்கிறார்: 'கோடைகாலம் அதிகரித்துவிட்டது'. சுஜாங்கரில் உள்ள திஷா ஷேகாவதி நிறுவனத்தின் அம்ரிதா சவுத்ரி (வலது) சொல்கிறார், 'இந்த வெப்ப மண்டலத்தில், வெப்பம் அதிகரித்து வருகிறது'

“கடந்த காலங்களில் எல்லாம் மார்ச் மாதங்களில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியை எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்யும்போது எங்களுக்கு கம்பளி உடை தேவைப்படும்” என்கிறார் அம்ரிதா சவுத்ரி. “இப்போது மின்விசிறி தேவைப்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு பருவநிலையை கணிக்க முடியாமல் போகிறது.”

சுஜாங்கர் நகரில் அங்கன்வாடி பணியாளர் சுஷிலா புரோஹித் 3-5 வயது வரையிலான குழந்தைகள் குறித்துப் பேசுகையில்,  “முன்பெல்லாம் குளிர் காலத்தில் அவர்கள் உடையணிந்திருப்பார்கள். இப்போது நவம்பரிலும் வெப்பமாக உள்ளது. அவர்களுக்கு எந்த உடையை போட்டுவிடுவது என்றே தெரியவில்லை.”

சுருவில் கட்டுரையாளரும், எழுத்தாளருமான 83 வயதாகும் மாதவ் ஷர்மா பேசுகையில்: “கம்பளியும், கோட்டும் தேவைப்பட்ட நாட்கள் (நவம்பர் மாதத்தில்) போய்விட்டது”.

*****

கோடை காலம் அதிகமானதால் கம்பளி-கோட் நாட்கள் மறைந்துவிட்டன. “முன்பெல்லாம் நான்கு வேறுபட்ட பருவகாலங்கள் [இளவேனிற் காலம் உட்பட] இருந்தன”  என்கிறார் மாதவ் ஜி. “இப்போது மழைக் காலமும், எட்டு மாதங்களுக்கு கோடைக் காலமும் நிலவுகிறது. இந்த மாற்றம் நீண்ட காலமாக உள்ளது.”

“முன்பெல்லாம் மார்ச் மாதம் கூட குளிராக இருக்கும்” என்கிறார் தாராநகரில் உள்ள வேளாண் செயற்பாட்டாளர் நிர்மல் பிரஜாபதி. “இப்போது பிப்ரவரி இறுதியிலேயே வெப்பம் தொடங்கிவிடுகிறது. அது அக்டோபர் அல்லது அதையும் தாண்டி ஆகஸ்ட் வரை கூட நீடிக்கிறது.”

சுரு விவசாயிகள் கோடை வெப்பத்திற்கு ஏற்ப வேலை நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். வெயிலில் இருந்து தப்பிக்க அவர்கள் அதிகாலை நேரத்திலும், மாலை நேரங்களிலும் வேலைகளை செய்து வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.

வெப்பம் இடைவிடாது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் மணற் புயல் கிராமங்களில் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். எங்கும் மணலை குவியலாக கொட்டிச் செல்லும். ரயில் தண்டவாளங்களும் மணலால் மூடப்படும். எங்கும் மணல் குவியலாக இருக்கும், வீட்டு வாசலில் உறங்கும் விவசாயி மீது மணலை கொட்டிவிடும். “மேலைக் காற்று மணல் புயலை கொண்டு வரும்” என்கிறார் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுப் பெற்ற ஹர்தயால் ஜி. “மணல் எங்கள் படுக்கை விரிப்புகளையும் மூடிவிடும். இப்போது அதுபோன்ற மணல் புயல் எதுவும் வீசுவதில்லை.”

Left: The Chakravat drizzles have mostly disappeared, says Hardayalji Singh, retired teacher and landowner. Centre: Sushila Purohit, anganwadi worker in Sujangarh, says 'It is still hot in November. Right: Nirmal Prajapati, farm activist in Taranagar, says work hours have altered to adapt to the magnifying summer
PHOTO • Sharmila Joshi
Left: The Chakravat drizzles have mostly disappeared, says Hardayalji Singh, retired teacher and landowner. Centre: Sushila Purohit, anganwadi worker in Sujangarh, says 'It is still hot in November. Right: Nirmal Prajapati, farm activist in Taranagar, says work hours have altered to adapt to the magnifying summer
PHOTO • Sharmila Joshi
Left: The Chakravat drizzles have mostly disappeared, says Hardayalji Singh, retired teacher and landowner. Centre: Sushila Purohit, anganwadi worker in Sujangarh, says 'It is still hot in November. Right: Nirmal Prajapati, farm activist in Taranagar, says work hours have altered to adapt to the magnifying summer
PHOTO • Sharmila Joshi

இடது: சக்ராவத் சாரல் என்பது மறைந்துவிட்டதாக சொல்கிறார் ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியரும், நில உரிமையாளருமான ஹர்தயால் ஜி சிங். நடுவில்: 'நவம்பரில் கூட வெப்பமாக உள்ளது' என்கிறார் சுஜாங்கர் அங்கன்வாடி பணியாளர் சுஷிலா புரோஹித். வலது: வெயிலுக்கு ஏற்ப வேலை செய்யும் நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக சொல்கிறார் தாராநகர் வேளாண் செயல்பாட்டாளர் நிர்மல் பிரஜாபதி

மே, ஜூன் போன்ற கோடை உச்சத்தில் இருக்கும் காலங்களில் கூட வறண்ட, வெப்பமான, பலமான காற்றுடன் பல மணி நேரத்திற்கு புழுதி புயல் வீசும். மணற் புயலும், புழுதிப் புயலும் சுருவில் சுமார் 30 ஆண்டுகளாக நிகழ்ந்து வந்தன. அவை வெப்பநிலையை குறைக்க உதவின என்கிறார் நிர்மல். “மணற் புயல் மூலம் எங்கும் பரவும் தூளான மணல் மண்ணின் வளமைக்கும் உதவும்.” இப்போது வெப்பம் வாட்டுகிறது. வெப்பநிலை 40 வரை உயர்கிறது. “2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 5-7 ஆண்டுகளுக்கு பிறகு மணற் புயல் ஏற்பட்டதாக நினைக்கிறேன்”  என்கிறார் அவர்.

கோடை காலத்தின் கடும் வெப்பம் கொதிநிலையை ஏற்படுத்தி விடுகிறது. “ராஜஸ்தான் என்பது வெப்பமான கோடைக்கு பழக்கப்பட்டது” என்கிறார் தாராநகர் வேளாண் செயற்பாட்டாளரும், ஹர்தயால் ஜியின் மகனுமான உம்ராவ் சிங். “ஆனால் இப்போது முதல்முறையாக மக்கள் வெப்பத்தைக் கண்டு அஞ்சுகின்றனர்.”

****

ராஜஸ்தானில் 2019 ஜூன் மாதம் வெப்பநிலை 50 டிகிரியை கடந்தது என்பது முதன்முறை கிடையாது. ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மைய பதிவின்படி 1993ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிக அளவாக 49.8 வரை உயர்ந்துள்ளது. 1995ஆம் ஆண்டு மே மாதம் பார்மரில் வெப்பநிலை 0.1 டிகிரியாக உயர்ந்துள்ளது. முன்பு 1934ஆம் ஆண்டு கங்காநகரில் வெப்பநிலை அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியசும், 1956 ஆம் ஆண்டு மே மாதம் அல்வாரில் 50.6 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் 2019 டை பொறுத்தவரையில் சுரு உலகத்திலேயே மிக வெப்பமான இடம் என்று சில அறிக்கைகள் சொன்னாலும்  அரபு பகுதிகள் உள்ளிட்ட வேறு சில பகுதிகளும் 50 டிகிரிக்கும் மேல் வெப்பத்தை பதிவு செய்திருக்கின்றன என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வு ஒன்று.  புவி வெப்பமயமாகும் தன்மைகள் எப்படி மாறும் என்பதைப் பொறுத்து அந்த அறிக்கை – வெப்பமாகும் பூமியை புரிந்து கொள்ளுதல் – இந்தியாவில் வெப்பநிலை 1.1ல் தொடங்கி அதிகபட்சமாக 3 டிகிரி வரை 2025 முதல் 2085க்குள் உயரும் என்று சொல்லியிருக்கிறது.

மேற்கு ராஜஸ்தானின் ஒட்டுமொத்த பாலைவனத்திலும் (19.61 லட்சம் ஹெக்டேர்) 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெப்பமான நாட்களும், சூடான இரவுகளும், குறைவான மழையும் இருக்கும் என பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவும் பிற ஆய்வுகளும் தெரிவித்துள்ளன.

“வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துவிட்டது“ என்று கூறும் சுரு நகர மருத்துவர் சுனில் ஜண்டு, மக்கள் அதிக வெப்பத்திற்கு பழக்கப்பட்டவர்கள், “வெப்பநிலை ஒவ்வொரு டிகிரி உயரும் போதும் நிறைய தாக்கம் செலுத்தும்” 48 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் பெரியது என்கிறார். சோர்வு, நீரிழப்பு, சிறுநீரக கல் (நீண்ட கால நீரிழப்பால் ஏற்படுவது), வெப்ப பக்கவாதம், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவற்றுடன் பிற தாக்கமும் ஏற்படும். மாவட்ட கருத்தரித்தல் மற்றும் குழந்தைகள் நல அலுவலருமான டாக்டர் ஜண்டு 2019ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் வெப்பம் அதிகரித்தபோது இதுபோன்ற தாக்கம் இருந்ததை கவனித்தேன் என்கிறார். அச்சமயத்தில் வெப்ப அலைகளால் உயிரிழிப்பு எதுவும் ஏற்பட்டதாக பதிவாகவில்லை.

அதீத வெப்பத்தின் ஆபத்தை ILO அறிக்கை கூட குறிப்பிடுகிறது: “புவி வெப்பமடைதலால் பருவ மாற்றம் ஏற்படும், அதிக வெப்பம் தரும் என்பது பொதுவானது... அளவற்ற வெப்பத்தால் உடலியல் குறைபாடு இல்லாமல் உடல் தாக்கு பிடிக்குமா... வெப்பநிலை அதிகமாகும் போது வெப்ப பக்கவாதமும், சில சமயம் உயிரிழப்பும் ஏற்படலாம்.”

Writer-farmer Dularam saharan (left) of Bharang village at the house of well-known veteran columnist Madhavji Sharma, in Churu town: 'Kambal and coat ka jamaana chala gaya'
PHOTO • Sharmila Joshi

பாராங் கிராம எழுத்தாளரும், விவசாயியுமான துலாராம் சாஹரன் (இடது) சுரு நகர புகழ்பெற்ற  கட்டுரையாளர் மாதவ்ஜி ஷர்மாவின் வீட்டில்: 'கம்பளி-கோட் தேவைப்பட்ட காலங்கள் மாறிவிட்டன'

காலப் போக்கில் வெப்பநிலை உயர்வால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள் - பிராந்தியங்களில், வறுமை அதிகரிப்பு, முறையற்ற வேலைவாய்ப்பு, ஜீவன வேளாண்மை நடைபெறும் என்கிறது தெற்காசிய அறிக்கை.

அனைத்து மோசமான தாக்கங்களும் உடனடியாக தெரியாது, ஆனால் மருத்துவமனைகளுக்கு விரைவது அதிகளவில் இருக்கும்.

பிற தொந்தரவுகளுடன் வெப்ப அழுத்தமும் சேர்ந்து “உந்து காரணியாகி விவசாயத் தொழிலாளர்கள் வேலையிழந்து கிராமப்புறங்களை விட்டு வெளியேறும் நிலையை ஏற்படுத்தும் என்றும், 2005–15 காலகட்டத்தில் பெருமளவு புலம்பெயர்வை விளைவிக்கும் என்றும் ILO அறிக்கையின் குறிப்பு தெரிவிக்கிறது. பருவநிலை மாற்றங்களுக்காகவும் புலம்பெயர்வது குடும்பங்களிடையே அதிகரித்துள்ளதாக [கூடுதலாக] தெரிவிக்கிறது.”

விவசாயம் சரிந்ததால், வருமானமும் சுருவில் சரிய தொடங்கிவிட்டது- மழை குறைந்ததால் தொடர் சங்கிலியாக மாறி புலம்பெயர்வை ஏற்படுத்துகிறது. “கடந்த காலங்களில், எங்கள் நிலத்தில் 3,750 கிலோ வரை கம்பு கிடைக்கும்.  இப்போது 80 - 120 கிலோ கம்பு மட்டுமே கிடைக்கிறது. எங்கள் பாராங் கிராமத்தில் 50 சதவீதம் பேர் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். மற்றவர்கள் நிலத்தை கைவிட்டு புலம் பெயர்ந்துவிட்டனர். ”

கஜூவாஸ் கிராமத்தில் தனது நிலத்திலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுவிட்டதாக தரம்பால் சாஹரன் சொல்கிறார். சில ஆண்டுகளாக அவர் ஜெய்ப்பூர் அல்லது குஜராத்தின் சில நகரங்களுக்கு ஆண்டுதோறும் 3-4 மாதங்கள் டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

சுருவில் பலரும் விவசாய வருமான இழப்பை ஈடுகட்ட வளைகுடா நாடுகள் அல்லது கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநில நகரங்களுக்கு ஆலைகளில் பணியாற்ற சென்று விடுவதாக பேரா. இஸ்ரான் குறிப்பிடுகிறார். (அரசின் கொள்கையால் கால்நடைத் தொழிலும் சீர்குலைந்ததும் இதற்கு காரணம்- இது மற்றொரு கதை.)

அடுத்த 10 ஆண்டுகளில் வெப்பநிலை உயர்வால் கிட்டத்தட்ட 8 கோடி முழு நேர பணிகள் குறைந்து, உற்பத்தி இழப்பைச் சந்திக்கும் என்கிறது ILO அறிக்கை. இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதியில் உலகளவில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

*****

சுருவில் ஏன் பருவநிலை மாறுகிறது?

சுற்றுச்சூழல் மாசு தான் காரணம் என்கின்றனர் பேரா. இஸ்ரானும், மாதவ் ஷர்மாவும். சுட்டெரிக்கும் வெயில் வானிலையின் வரைபடத்தையே மாற்றுகிறது. புவி வெப்பமடைவதால் வெயில் அதிகமாகிறது. வனப்பகுதி குறைந்து, வாகனங்கள் அதிகரித்துவிட்டன என்கிறார் விவசாயியும், தாராநகர் தாலுக்கா பலேரி கிராமப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருமான ராம்ஸ்வரூப் சாஹரன்.

'After around 48 degrees Celsius,” says Dr. Sunil Jandu (left) in Churu town, even to people used to very high heat, 'every rise by a degree matters a lot'. Ramswaroop Saharan of Bhaleri village attributes the growing heat to global warming
PHOTO • Sharmila Joshi
'After around 48 degrees Celsius,” says Dr. Sunil Jandu (left) in Churu town, even to people used to very high heat, 'every rise by a degree matters a lot'. Ramswaroop Saharan of Bhaleri village attributes the growing heat to global warming
PHOTO • Sharmila Joshi

”வெப்பம் 48 டிகிரி செல்சியசை கடந்துவிட்டது” என்கிறார் சுரு நகரில் உள்ள டாக்டர் சுனில் ஜண்டு (இடது), மக்களும் அதிக வெப்பத்திற்கு பழகிவிட்டனர். ’ஆனால் ஒரு டிகிரி உயர்ந்தாலும் அதன் தாக்கம் பெரியது'. புவி வெப்பமடைதலே வெயில் அதிகரித்துள்ளதற்கு காரணமாகிறது என்கிறார் பலேரி கிராமத்தின் ராம்ஸ்வரூப் சாஹரன்

“தொழிற்சாலைகள் வளர்கின்றன, குளிர்சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கின்றன, கார்களின் எண்ணிக்கையும் பெருகிவிட்டது” என்கிறார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் நாராயண் பரேத். “சுற்றுச்சூழல் மாசடைகிறது. இவை அனைத்தும் புவி வெப்பமடைதலுக்கு காரணமாகிறது. “

தார் பாலைவனத்தின் வாசல் என சுரு அழைக்கப்படுகிறது. பருவ மாற்றத்தின் உலக சங்கிலியுடன் அதற்கு தொடர்புண்டு. பருவ நிலை மாற்றத்திற்கான ராஜஸ்தான் மாநில செயல் திட்டம், 1970க்கு பிறகான உலகளாவிய பசுமைக் குடில் வாயு உமிழ்வு குறித்து ஆலோசிக்கிறது. ராஜஸ்தானையும் தாண்டி தேசிய அளவிலான காரணியாக இருக்கும் பசுமைக் குடில் வாயுவால் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது. புதைபடிவ எரிபொருட்கள், விவசாயத் துறையில் உமிழ்வு, ஆற்றல் துறையில் மகத்தான செயல்பாடுகள், தொழில்துறை வளர்ச்சி, நிலத்தை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள மாற்றம், காடுகளை அழித்தல் போன்றவற்றால் எழுச்சிக் கண்டுள்ளன. பருவநிலை மாற்றம் எனும் வலைப்பின்னலில் இவை அனைத்திற்கும் தொடர்புள்ளது.

சுரு கிராமங்களில் மக்கள் பசுமைக் குடில் வாயுக்கள் குறித்து பேசாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அதன் தாக்கத்தில் தான் வாழ்கின்றனர். “முன்பெல்லாம் நாங்கள் மின்விசிறி, குளிர்சாதனங்கள் இல்லாமல் கோடையை சமாளித்துவிடுவோம். இப்போது அவை இல்லாமல் வாழவே முடியவில்லை” என்கிறார் ஹர்தயால் ஜி.

“ஏழைக் குடும்பங்களால் மின்விசிறி, குளிர்சாதனங்களை வைத்துக் கொள்ள முடியாது. தாங்க முடியாத வெப்பத்தால் பேதி, வாந்தி போன்றவை ஏற்பட்டு மருத்துவச் செலவு அதிகரிப்பதாக” அம்ரிதா கூறுகிறார்.

வயல் வேலை முடிந்து சுஜாங்கரில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல பேருந்திற்கு காத்திருந்த பக்வானி தேவி சொல்கிறார், “வெயிலில் வேலை செய்வது மிகவும் சிரமமானது. எங்களுக்கு மயக்கம், வாந்தி போன்ற உணர்வு ஏற்படுகிறது. நாங்கள் மர நிழலில் ஓய்வெடுத்துவிட்டு, சிறிது எலுமிச்சைச் சாறு குடித்துவிட்டு மீண்டும் வேலையை தொடர்வோம்“ என்கிறார்.

தாராளமாக உதவியவர்களுக்கும், வழிகாட்டியவர்களுக்கும் எங்களது கனிவான நன்றி: ஜெய்ப்பூர் நாராயண் பரேத், தாராநகர் நிர்மல் பிரஜாபதி, உம்ராவ் சிங், சுஜாங்கர் அம்ரிதா சவுத்ரி, சுரு நகரின் தலீப் சாராவாக்.

UNDP ஆதரவில் எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகள், அவர்களின் குரல்களை பதிவு செய்யும் முயற்சியாக பாரி தேசிய அளவிலான பருவநிலை மாற்றங்கள் குறித்த செய்திகளை அளித்து வருகிறது.

இக்கட்டுரையை மீண்டும் பிரசுரிக்க வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் நகலை (கார்பன் காப்பி) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதி அனுப்புங்கள்.

தமிழில்: சவிதா

Reporter : Sharmila Joshi

शर्मिला जोशी पारीच्या प्रमुख संपादक आहेत, लेखिका आहेत आणि त्या अधून मधून शिक्षिकेची भूमिकाही निभावतात.

यांचे इतर लिखाण शर्मिला जोशी
Editor : P. Sainath

पी. साईनाथ पीपल्स अर्काईव्ह ऑफ रुरल इंडिया - पारीचे संस्थापक संपादक आहेत. गेली अनेक दशकं त्यांनी ग्रामीण वार्ताहर म्हणून काम केलं आहे. 'एव्हरीबडी लव्ज अ गुड ड्राउट' (दुष्काळ आवडे सर्वांना) आणि 'द लास्ट हीरोजः फूट सोल्जर्स ऑफ इंडियन फ्रीडम' (अखेरचे शिलेदार: भारतीय स्वातंत्र्यलढ्याचं पायदळ) ही दोन लोकप्रिय पुस्तकं त्यांनी लिहिली आहेत.

यांचे इतर लिखाण साइनाथ पी.
Series Editors : P. Sainath

पी. साईनाथ पीपल्स अर्काईव्ह ऑफ रुरल इंडिया - पारीचे संस्थापक संपादक आहेत. गेली अनेक दशकं त्यांनी ग्रामीण वार्ताहर म्हणून काम केलं आहे. 'एव्हरीबडी लव्ज अ गुड ड्राउट' (दुष्काळ आवडे सर्वांना) आणि 'द लास्ट हीरोजः फूट सोल्जर्स ऑफ इंडियन फ्रीडम' (अखेरचे शिलेदार: भारतीय स्वातंत्र्यलढ्याचं पायदळ) ही दोन लोकप्रिय पुस्तकं त्यांनी लिहिली आहेत.

यांचे इतर लिखाण साइनाथ पी.
Series Editors : Sharmila Joshi

शर्मिला जोशी पारीच्या प्रमुख संपादक आहेत, लेखिका आहेत आणि त्या अधून मधून शिक्षिकेची भूमिकाही निभावतात.

यांचे इतर लिखाण शर्मिला जोशी
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

यांचे इतर लिखाण Savitha